(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 30 முதல் 07.45) தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமை தமிழ் மக்கள் இலங்கை தேசியத்தில் நிராகரிக்கப்பட்ட மக்கள் என்பதை நிரூபிப்பதற்கான மற்றுமொரு செயற்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஒற்றுமை என்பவற்றை விரிவுபடுத்தும் முயற்சிக்குப் பதிலாக அந்த முயற்சிக்கு மாறான செயற்திட்டங்களில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தடை விதித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்னர் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவது வழக்கமாக இடம்பெற்று வந்தது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட நானும் கலந்து கொண்டோம். பல வருடங்களுக்குப் பின்னர் இலங்கை தேசிய சுதந்திர தின விழாவில் தமிழரசு கட்சி சார்பில் நாம் பங்குபற்றி இருந்தோம்.
நாம் இந்த நிகழ்வில் பங்குபற்ற பிரதான காரணம் நாட்டில் நல்லிணக்கம் ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாக பல அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது மாத்திரமன்றி இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் கொடூர யுத்தம் நிறைவடைந்து உள்ளதாக தெரிவித்ததோடு முடிவடைந்த யுத்தத்தை அனைவரும் நினைவுகூற முடியும் எனவும் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று அந்த நிலை மாற்றமடைந்து நல்லிணக்க செயற்பாடுகளுக்கு மாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மாற்றம் அடைந்துள்ளன. இவை அனைத்தும் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு ஏதுவானதாக இல்லை.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டாமென கூறுவது தமிழ் மக்களை தேசிய கீதம் இசைக்க வேண்டாம் என கூறுவதற்கு சமனான ஒன்றாகும். தமிழ் மக்களை தேசிய கீதம் இசைக்க வேண்டாம் எனக் கூறினால் நாமும் சந்தோஷமாக அதனைக் இசைக்காமல் இருப்போம். காரணம் தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இன்று பல தசாப்தங்கள் கடந்து விட்டன. இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து இச்செயற்பாடு இடம்பெறுவதை நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
எங்களுடைய நியாயமான ஜனநாயக கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணமாகவே நாங்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட மக்களாக உள்ளோம். இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு உரித்துடைய அரசியல் அதிகாரங்களை அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சம அந்தஸ்துடைய மக்களாக எமக்கு இந்த நாட்டில் வாழ முடியும். எம்மை தேசிய நீரோட்டத்திலிருந்து நிராகரிக்கும் மற்றும் ஒரு செயல்பாடாகவே தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நாம் கருதுகிறோம்.
(எஸ் அஸ்லம் - லங்காதீப)
இதேவேளை இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு விருப்பமான வகையில் சுமந்திரன் போன்றவர்கள் நடந்து கொள்ளாவிட்டால் சுமந்திரன் போன்றவர்களுக்கு நந்திக்கடலில் முடிவுகட்ட நாட்டின் பாதுகாப்பு தரப்பு தயார் நிலையில் உள்ளது என கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கத்தினுடைய உத்தியோகபூர்வ பேச்சாளராக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் மாகல்கந்தே சுனந்தா தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சுமந்திரன் என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் அவுஸ்திரேலியா மொனெஸ் பல்கலைக்கழகத்திலும் இலங்கை சட்டக் கல்லூரியிலும் சமூக விஞ்ஞானம் மற்றும் சட்டத்துறை தொடர்பில் விசேட பட்டம் பெற்று இலங்கையில் சட்டத்தரணியாக பதவி பிரமாணம் செய்து கொண்ட இலங்கையிலுள்ள மிக திறமையான ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார். இதேவேளை இன்று சுமந்திரனை நோக்கி விமர்சன எச்சரிக்கை விடுக்கும் மாகல்கந்தே சுனந்த தேரர் பொலிஸ் நிலையத்தில் சார்ஜனாக தொழில் புரிந்த போது தனது உயர் அதிகாரி ஒருவரின் விலை மதிப்புள்ள கையடக்கத் தொலைபேசியை திருடி கையும் களவுமாக பிடிபட்டு கொண்டதால் பதவியில் தரம் குறைக்கப்பட்டு பின்னர் காவி உடை அணிந்து கொண்டு மக்கள் மத்தியில் தன்னை நல்லவர் என காட்டிக் கொள்ள முயற்சிக்கும் நபர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
---------------------------
by (2019-12-30 13:08:12)
Leave a Reply