(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 18 முற்பகல் 10.05) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஒரு கூட்டணியாக இணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் இல்லாமல் ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஏனைய கட்சி தலைவர்கள் கூடி தீர்மானம் எடுத்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இந்த கூட்டத்தில் சஜித் அணியைச் சேர்ந்த ரஞ்சித் மத்தும பண்டார, சரத் பொன்சேகா போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஐக்கிய தேசிய முன்னணி கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, சத்துர சேனாரத்ன பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன, ரணதுங்க உள்ளிட்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற போதும் அவரும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி எந்த சின்னத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள போகிறது என்பது குறித்து அறிவித்தல் வெளியாகவில்லை.
இந்த கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் அணி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் போது சஜித் பிரேமதாசவை தலைவராக ஏற்றுக்கொள்ள பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் விசேடமாக 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கட்சிக்குள் இருக்கின்ற ஏனைய பிரச்சினைகளை உள் விவகாரமாக கருதி தீர்த்துக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார். பரந்த கூட்டணியாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாச தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய கட்சி தலைவர்கள் தயார் நிலைகள் இருப்பதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
எது எவ்வாறு இருப்பினும் செயல் திறனற்ற நந்தசேன கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்துடன் போட்டியிட மிக வலுவான கூட்டணி ஒன்று அவசியம். ஆனால் அந்தக் கூட்டணி பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடைய இணக்கப்பாடு இன்றி ஒரு குழுவினரால் உருவாக்கப்படும் கூட்டணியாக அமையுமானால் அது அசாத்தியமான கூட்டணியாகவே அமையும். காரணம் ஜாதிக ஹெல உருமய கட்சிக்கு இருந்த சிங்கள பௌத்த வாக்குகள் பொதுஜன பெரமுன கட்சி நோக்கி சென்றுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் தனித்து விடப்பட்டு உள்ளார். சிறுபான்மை கட்சிகளை தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு பெயரளவில் மாத்திரமே செல்வாக்கு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி கட்சிகள் தற்போது உருவாகியுள்ள சஜித் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்ய வேண்டுமென முன்னின்று பாடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் பாராளுமன்றத் தேர்தலில் தலைமையிலான கூட்டணிக்கு இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை சஜித் பிரேமதாசவால் பெற முடியும் என கூற முடியாது. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்களது ஆதரவைப் பெறாமல் மத்திய வர்க்க மக்களின் வாக்குகள், புதிய வாக்குகள், மிதக்கும் வாக்குகள் போன்றவற்றை பெற முடியாமல் ஜனாதிபதி தேர்தலில் சுடச்சுட தோல்வியடைந்த வேட்பாளரை கூட்டணியின் தலைவராக முன் நிறுத்தி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை வெற்றி கொண்டு விடலாம் என்று நினைப்பது அந்த அளவு சுலபமான விடயம் கிடையாது. இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அவர் புதிய கூட்டணியை உருவாக்கி அவருக்கு ஏற்பட்ட நிலையை நாம் முன்னுதாரணமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
இது தொடர்பான காணொளி கீழே
---------------------------
by (2020-01-19 15:13:15)
Leave a Reply