~

ஒற்றர்கள் கொலை காரர்களுக்கு லைசென்ஸ் பெற்றுக் கொடுக்கும் 'அரச புலனாய்வு சட்ட மூலம்' யாப்பு விரோதமானது; அபாயமானது..!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 26 பிற்பகல் 04.15) புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நாளாந்த கடமைகளை பொறுப்பு அளிக்கும் நோக்கில் அரச புலனாய்வு சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு கடந்த 14ம் திகதி கூடிய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது. இந்த சட்டமூலம் என்ன என்பது தொடர்பில் விரிவாக அமைச்சரவையில் கலந்துரையாடப் படவில்லை என்ற போதும் இதனை முழுமையாக தயாரிப்பது ஜனாதிபதி நந்தசேனவின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன என தெரியவந்துள்ளது.

அனுமதி இன்றி இவ்வாறு என்றால்.. 

புலனாய்வு அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக மேற்கொண்ட குற்றங்கள் பல தொடர்பில் தற்போது நீதிமன்றங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சில குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்தமை, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை, உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியமை, பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டமை போன்றவை இதில் முக்கியமான குற்றங்களாகும்.

ஜனாதிபதி நந்தசேன புதிய புலனாய்வு சட்டமூலத்தை கொண்டுவர காரணம் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து சந்தேக நபர்களை விடுதலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ஆகும். சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழக்கு விசாரணைகளை முன் கொண்டு செல்ல முடியாது.

புலனாய்வு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அரசியல் கைக்கூலிகள் அனுமதி இன்றி செய்த குற்றங்கள் பலவற்றை பார்க்கும் போது அனுமதி கிடைத்தால் எவ்வாறு நடந்து கொள்வர் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

யாப்பு விரோதமானது..

எனினும் இந்த சட்ட மூலமானது நாட்டினுடைய அடிப்படை சட்டமான அரசியல் யாப்புக்கு முரணானது என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் 12 (1) ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளதன்படி 'சட்டம் தயாரித்தல் மற்றும் செயற்படுத்தல் சட்டத்தை பாதுகாத்தல் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ள நிலையில் அது மீறப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சட்ட மூலம் கொண்டு வரப்படும் போது நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய சந்தர்ப்பம் உள்ளது. 

12000 பேருக்கு கொலை செய்ய அனுமதிப் பத்திரம்..   

இதேவேளை நாட்டின் எதிர்காலத்திற்கு இந்த சட்டமூலம் அபாயமான ஒன்றாக காணப்படும் என கூறப்படுகிறது. காரணம் நாட்டில் புலனாய்வு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு கிட்டத்தட்ட 12000 பேர் உள்ளனர். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இவர்கள் அனைவருக்கும் குற்றம் செய்துவிட்டு சுதந்திரமாக இருக்க முடியும். அப்படியாயின் சுமார் 12,000 பேருக்கு கொலை செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படுகிறது.

அனுமதிப் பத்திரம் பெற்ற கொலையாளர்கள் மத்தியில் பிரஜைகள்.. 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விடுதலை அளிக்கும் நோக்கில் 'பொறுப்புடன் பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக ஏற்பாடு சட்டம்' என்ற பெயரில் புதிய சட்டம் அப்போது நிறைவேற்றப்பட்டது. தற்போது கொண்டு வரப்படும் சட்டமுலமும் அவ்வாறான ஒன்றென அரசாங்கத்தில் உள்ள சிலர் நினைக்கின்றனர். ஆனால் இது அதற்கு முற்றிலும் மாறானது. இராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருப்பவர்கள் யார் என்பதை அனைவரும் அறிவர். அவர்களுக்கு உத்தியோகபூர்வ சீருடை உள்ளது. குறிக்கப்பட்ட நிலையங்களில் கடமை புரிகின்றனர். ஆனால் புலனாய்வு அதிகாரிகள் யார் இவர்கள் எங்கு கடமை புரிகின்றனர் என்பதை யாரும் அறிய வாய்ப்பில்லை. இவர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படுவது இராணுவத்தின் கணக்காளருக்கு தெரியாமல் இரகசியமான முறையில் ஆகும். எனவே புலனாய்வுப் பிரிவினருக்கு விடுதலை அளிக்கும் நோக்கிலான புதிய சட்டமூலம் கொலையாளிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கி பிரஜைகள் மத்தியில் வாழ விடுவதற்கு சமனான ஒன்றாம்.

பயங்கரவாதிகளுக்கு விடுதலை..

இந்த சட்டமூலத்தை தவிர மற்றுமொரு அபாயகரமான விடயம் பயங்கரவாதிகளுக்கும் விடுதலை கிடைப்பதாகும். காரணம் பயங்கரவாத அமைப்புகளில் இருந்து செயல்படும் பலர் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் வழங்கும் ஒற்றர்கள் அல்லது புலனாய்வு அதிகாரிகள் என அண்மையில் இனங் காணப்பட்டனர். ஆகையால் கோட்டாபய நந்தசேன செய்யப்போவது பயங்கரவாதிகளுக்கு விடுதலை அழிப்பது தானே?

கெஸ்டாபோவன்களை விட அபாயமான கொலைக் குழுவினர்..  

உண்மையில் புலனாய்வு அதிகாரிகள் என்ற சொல் ஒற்றர்களுக்கு வழங்கப்படும் மறைமுக பெயராகும். ஹிட்லரின் ஆட்சியில் ஒற்றர்களாக இருந்த கொலைகார குழுவினரான கெஸ்டோபோவன் என்பவர்களை யாவரும் அறிவர். நந்தசேனவின் தற்போதைய சட்டமூலம் கெஸ்டோபோவன்களை விட மிகவும் அபாயகரமான கொலைக் குழுவினர்களை இலங்கையில் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்திற்குள் நந்தசேனவிற்கு  எதிராக செயற்படும் நபர்களும் பலி எடுக்கப்பட உள்ளன. எனவே யுத்த காலத்தில் புலனாய்வு பிரிவினருக்கு விடுதலை அளிக்கும் ஏற்பாடுகள் இல்லை என்றபோதும் தற்போதைய காலத்தில் அவ்வாறானதொரு விடுதலை அளிப்பு ஏன் என்ற சந்தேகம் வலுக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும்.

சந்திரபிரதீப்

---------------------------
by     (2020-01-26 11:25:14)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links