~

மஹிந்தவின் முதலாவது வெளிநாட்டு சுற்றுலா, இந்தியாவுக்கான ஐந்து நாள் பயணம் புஸ்வானமானது..!

(லங்கா ஈ நியூஸ் 2020 பிப்ரவரி 08 பிற்பகல் 11.15) இலங்கை நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி ஏற்றதன் பின்னரான முதலாவது வெளிநாட்டு பயணமான இந்தியாவிற்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் புஸ்வானமாக மாறியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஐந்து நாள் விஜயத்தின் போது முதல் இரண்டு நாட்களிலேயே இந்தியாவினுடைய பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து முடிக்கிறார். ஏனைய மூன்று நாட்களும் இந்தியாவின் பிரபல வணக்கஸ்தலங்களான வாரணாசி, சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்ல உள்ளார். இதனால் நாட்டுக்கு எவ்வித பயனுமில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 5 நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இணைந்த ஊடக சந்திப்பும் நிறைவு பெற்றதோடு இராஜதந்திர செயல்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்கனவே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது உறுதி அளிக்கப்பட்டிருந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகை தொடர்பிலும் அதில் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்வனவுக்கு பயன்படுத்துவது குறித்தும் (பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே கொள்வனவு செய்யப்படவேண்டும்) பேசப்பட்டதே தவிர புதிதாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அரச தலைவர்கள் இருவர் உத்தியோகபூர்வமாக சந்தித்துக் கொண்டதன் பின்னர் வழமையாக இருவரும் இணைந்து வெளியிடும் 'இரு நாடுகளும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இணைவு, அதற்கு முகம் கொடுக்க வேண்டிய விதம், பொருளாதார முன்னேற்றத்திற்காக இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படல்' போன்ற பொதுவான விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டதே தவிர வடக்கு பகுதிக்கு எவ்விதமான நிவாரணங்கள் வழங்கப்படும் என்பது தொடர்பில் கூட இந்தியப் பிரதமரால் இலங்கை பிரதமரிடம் கலந்துரையாடப்படாமை புதுமையான விடயமாகும்.

இது தொடர்பில் இந்திய இராஜதந்திரிகள் வேறு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இந்திய விஜயத்தின் போது சீனாவிற்கு 99 வருடங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் தொடர்பில் மீள ஆராயப்படும் என இந்தியாவில் தெரிவித்துவிட்டு இலங்கை வந்ததும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மீள ஆராய்வு செய்யப்படாது என அறிவித்தார். இதனால் ராஜபக்சக்கள் தங்களை ஏமாற்றியதாகவே இந்தியா கருதி வருவதாக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில் வடக்கு மற்றும் மலையக பகுதிகளில் இந்தியா பல வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து இருந்த நிலையை குறித்த திட்டங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட வேண்டும் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில் அதற்கு 'ஆம்', 'இல்லை', 'சரி' என்று எவ்வித பதிலும் நரேந்திர மோடியிடம் இருந்து கிடைக்கவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் சென்றிருந்த போதும் அவர்களுக்கும் இந்த விஜயத்தின் போது எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியமான விடயம் இந்தியாவினால் வழங்கப்பட்டிருந்த மோசமான ஊடக விளம்பரம் ஆகும். இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கையில் கோட்டாபய ஆட்சியிலும் மஹிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம் தொடர்பில் ஊடகங்களில் பெரிதாக பேசப்படவில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகும். குறைந்தது மஹிந்த ராஜபக்ச - நரேந்திர மோடி இணைந்து வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய ஊடக அறிக்கையை கூட அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிடவில்லை. இதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் காணப்படும் அரசியல் பனிப்போர் வெளிப்படுவதாக இலங்கை அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருப்பதால் பதில் பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படா விடினும் நாமல் ராஜபக்ச அந்த பணியை செவ்வனே செய்வது மாத்திரம் மிகத் தெளிவாக புலனாகிறது.

-விசேட எழுத்தாளர்-

---------------------------
by     (2020-02-09 05:55:18)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links