(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 10 பிற்பகல் 11.30) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி செயலாளர் ஜெயசுந்தரவின் கையொப்பத்தில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் PS/SP/Circular/07/2020 சுற்றறிக்கை இலக்கம் மூலமாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட தனிப்பட்ட செயலாளர்கள் குழுவினால் அரச வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக தொலைபேசி அழைப்பு விடுத்தல் கடிதம் அனுப்புதல் போன்றவற்றை உடனடியாக நிறுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பிரதமரின் செயலாளர் அல்லது அமைச்சர்களின் செயலாளர்கள் மாத்திரமே செயற்படுத்த முடியும் எனவும் இதற்கு முன்னர் அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள கடிதங்களை ரத்து செய்யுமாறும் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (முழுமையான சுற்றறிக்கை கீழே தரப்பட்டுள்ளது)
வெள்ளை சித்திரம் பொய்யானது..
அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற ஊழல் மோசடிகளை நிறுத்துவதன் நோக்கமாகவே இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக 'வெள்ளை சித்திரம்' ஒன்று வெளியில் உருவாக்கப்பட்டுள்ள போதும் அது அவ்வாறு இல்லை. அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள் மூலம் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்தவே ஜனாதிபதி கோட்டாபய இவ்வாறான கட்டளையை பிறப்பித்துள்ளார் என்று கூறினால் அது பச்சை பொய்யாகும். உண்மையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவ்வாறான திட்டம் இருக்குமாயின் அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் மூன்று வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட லலித் வீரதுங்கவை தனது ஆலோசகராக நியமித்திருக்க மாட்டார்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களின் பல் பிடுங்கல்...
இது மிகத் தெளிவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பற்களை பிடுங்கும் செயலாகும். கைகளை இறுக்கி கட்டிப் போடும் நடவடிக்கையாகும். அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடாகும். காரணம் சுற்றறிக்கை மூலம் குறிப்பிடப்படும் அமைச்சின் செயலாளர்கள் அனைவரையும் நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியே கொண்டுள்ளார். எனவே அமைச்சின் செயலாளர்கள் தன்னை நியமித்த ஜனாதிபதியின் கருத்துக்களுக்கே முன்னுரிமை அளிப்பார். மாறாக தனது அமைச்சர்களுக்கு அல்ல.
அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் ஒரு அமைச்சருக்கு பல அமைச்சுகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் கீழ் உள்ள அமைச்சரவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அமைச்சருக்கான பொறுப்புகளும் அதிகமாகும். எந்த ஒரு அரசாங்கத்திலும் பொது மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதியே அமைச்சராகிறார். அவர்கள் தன்னை தெரிவு செய்த பொது மக்களுக்கு எப்போதும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளனர். தனது அமைச்சு செயலாளர்களின் மூலமாக தனது வாக்காளர்களுக்கு நிறைவேற்ற முடியாத அரசியல் சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கமாகவே அமைச்சர்களுக்கு பிரத்தியேக செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், இணைப்பு செயலாளர்கள் என தனிப்பட்ட செயலாளர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்களும் தனக்குக் கீழான தனிப்பட்ட செயலாளர் குழுவை தனக்கு நெருங்கிய மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களையே நியமிக்கின்றனர். இந்த தனிப்பட்ட செயலாளர்கள் அமைச்சரை பிரதிநிதித்துவப்படுத்தி பணிகளை முன்னெடுக்கின்றனர். அதேபோன்று தனிப்பட்ட செயலாளர்கள் ஊடக முன்னெடுக்கும் ஊழல் மோசடிகளுக்கு அமைச்சரும் பொறுப்புக் கூற வேண்டியவர். காரணம் அது அமைச்சரின் தனிப்பட்ட பணிக்குழு என்பதனாலாகும். எல்லா விடயங்களுக்கும் அமைச்சரினால் முகம் கொடுக்க முடியாது என்பதால் அமைச்சரின் தனிப்பட்ட பணிக்குழு அந்த விடயங்களுக்கு அமைச்சரின் அனுமதியுடன் முன்னின்று செயற்படுகின்றது.
அமைச்சர்களுக்கு பல முகங்கள் பல கைகள் வழங்க வேண்டும்..
தற்போது ஜனாதிபதி நந்தசேன பிறப்பித்துள்ள புதிய கட்டளை மூலமாக அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்களால் எதனையும் செய்ய முடியாது. பதவியை வைத்துக் கொண்டு அவர்களால் இனிமேல் செய்யக்கூடியது அமைச்சர்களின் உடைகளை துவைப்பது, உடைகளை மடிப்பது, உணவு தயாரிப்பது, கோப்பை கழுவுவது, நாய்களை கழுவுவது, அமைச்சரின் மனைவியோடு கடைக்குச் செல்வது போன்ற செயல்களாகும். ஜனாதிபதி நந்தசேனவின் இந்த கட்டளையானது விசேடமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவையே அதிகம் பாதிக்கும். காரணம் தனது தனிப்பட்ட பணி குழுவை வைத்து மகிந்த ராஜபக்ச பல வேலைகளை செய்து கொள்கிறார். மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத சமயத்தில் ஜனாதிபதி கோட்டாபய இவ்வாறான கட்டளையை பிறப்பித்துள்ளமை மஹிந்த மூலம் தனக்கு பிறப்பிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கத்தில் ஆகும். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவர் வெளிநாடு செல்லும் சமயங்களில் பாதுகாப்பு செயலாளராக இருந்து பல சட்ட விரோத கட்டளைகளை பிறப்பித்து கோட்டாபய செய்யப்பட்டதை மறந்துவிடக்கூடாது.
அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர் பணிக்குழுவை செயலிழக்கச் செய்வதானால் ஜனாதிபதி நந்தசேன ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் பல தலைகள் பல கைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
நினைத்ததற்கு முன்னரே ஆபத்து நெருங்கி விட்டது..
எனினும் நாட்டின் ஒரு பிரிவினர் இணைந்து எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஏகாதிபத்திய மன நிலையில் இருந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்து கொண்டனர். இதனால் அரசியல் யாப்பு சபை, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்க இந்த அளவு விரைவாக சந்தர்ப்பம் வரும் என லங்கா ஈ நியூஸ் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நினைத்ததற்கு முன்பாகவே அந்த சந்தர்ப்பம் விரைவில் வந்து விட்டது.
---------------------------
by (2020-02-10 18:30:24)
Leave a Reply