(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 14 பிற்பகல் 11.30) இலங்கையின் தற்போதைய இராணுவ தளபதியும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர் போம்பியோ 2020 பெப்ரவரி 14ஆம் திகதி வெளியிட்டுள்ளதுடன் அது தொடர்பான செய்தி ஒன்று ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான பிரதான காரணம் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார செயற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய விதிகள் அடங்கிய 7031 (சீ) என்ற சரத்தின் கீழ் பாரிய அளவான மனித உரிமை மீறல்களை முன்னெடுத்துள்ளதாக சவேந்திர சில்வா மீது அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 58-வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக செயல்பட்ட சவேந்திர சில்வா சட்ட விரோதமான கொலைகள் மற்றும் கொலைகளுக்கான கட்டளைகளை பிறப்பித்து வழி நடத்தி பாரிய அளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வாவிற்கு எதிராக பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் வேறு அமைப்புக்கள் தகவல்கள் திரட்டி ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி உள்ளதை ஐக்கிய அமெரிக்கா நம்பிக்கையானது என ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்பு ஏற்க வேண்டிய பொறுப்புக் கூற வேண்டிய உயர் பாதுகாப்பு பிரிவு புனரமைப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றி நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.
ஜனநாயக சம்பிரதாயங்களை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் இலங்கை மக்களுடன் நீண்ட காலமாக இருந்து வரும் உறவுகள் மற்றும் தொடர்பாடல்கள் தொடர்பில் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேபோன்று தற்காலிகமாக எழுந்துள்ள இலங்கையின் பாதுகாப்பு துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து மீளமைப்பு சவால்களுக்கு முகம் கொடுத்து இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஐக்கிய அமெரிக்கா தங்குதடையின்றி ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட போதும் ஐக்கிய அமெரிக்கா கடுமையான கவலையை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சவேந்திர சில்வாவிற்கு சேவை கால நீட்டிப்பு வழங்கியதுடன் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த போது ஐக்கிய அமெரிக்கா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. அதனால் ஐக்கிய அமெரிக்காவின் சவேந்திர சில்வா குறித்த தடை இலங்கையில் தற்போதுள்ள கோட்டாபய அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவ தளபதி ஒருவருக்கு வெளிநாடு ஒன்றுக்கு நுழைய இராஜதந்திர ரீதியில் தடை விதிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை கீழே..
---------------------------
by (2020-02-15 17:30:04)
Leave a Reply