(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 18 முற்பகல் 06.30) பிரபல்யமான மிக் விமான ஊழல் மற்றும் யுக்ரேன் நாட்டின் கிளர்ச்சி படைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்தமை மற்றும் நபர் ஒருவரை ரகசியமாக கொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உறவு சகோதரனும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப் படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உதயங்க வீரதுங்க மீது குற்றவியல் சட்டத்தின் 454, 457 மற்றும் 400 ஆகிய சத்துக்களின் கீழ் பொது சொத்து சட்டத்தின் எட்டாவது பிரிவின் கீழ் குற்றவாளியாக பெயரிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன்போது கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க கடுமையான கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்தார். அதில் பிரதானமான விடயம் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஐந்து வருட காலங்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் என்பவர் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சஞ்சீவ என்ற புதிய அதிகாரி ஒருவரை நியமித்து குறித்த புதிய அதிகாரி இந்த விடயம் தொடர்பில் எவ்வித தகவல்களும் அறிந்திராமல் செயல்பட்டதாகும். அத்துடன் இந்த விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட சட்ட அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளார்.
சுமார் ஐந்து வருடங்கள் விசாரணை நடத்திய அதிகாரியை இடமாற்றம் செய்து சட்ட அதிகாரியை மாற்றம் செய்துள்ளதால் சந்தேக நபருக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் பிணை கோரிக்கை தொடர்பில் கடுமையாக ஆராயப்பட வேண்டும் என நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்து சேதம் சட்டத்தின் கீழ் உதயங்க வீரதுங்க மீதான விசாரணைகள் நிறைவடைந்து முடிவதில்லை என்பதால் தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைத்திருக்க வேண்டுமாயின் 25,000 ரூபாவுக்கு அதிகமான நட்டத்திற்கு தேவையான ஏஎஸ்பி அல்லது உயர் போலீஸ் அதிகாரியின் சான்று அடங்கிய பீ அறிக்கை தேவை என்ற போதும் அவ்வாறானதொரு அறிக்கை நீதிமன்றில் போலீசாரால் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பில் இதற்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பீ அறிக்கையில் 7 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் புதிய பீ அறிக்கையில் 25,000 ரூபா நட்டம் தொடர்பிலும் கூட உயர் போலீஸ் அதிகாரியின் சான்றுபடுத்தல் முன்வைக்கப்படவில்லை என நீதவான் சுட்டிக்காட்டினார். 25 ஆயிரம் ரூபாவைவிட ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் பெரிது என்பதை போலீசார் அறியவில்லையா என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்காலத்தில் போலீஸ் துறை உள்ள நிலைமை தொடர்பில் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என நீதவான் ரங்க திசாநாயக்க கூறியுள்ளார்.
இந்த விசாரணைகளை ஏற்கனவே முன்னெடுத்துச் சென்ற பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் மற்றும் அதனை மேற்பார்வை செய்த ஏஎஸ்பி பவித்ர தயாரத்ன ஆகிய அதிகாரிகளிடம் இந்த விசாரணைகளை மீண்டும் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கும் படி சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் ஆஜரான துசித் முதலிகே நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தார். எனினும் தனக்கு அவ்வாறானதொரு உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதவான், புதிதாக விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே விசாரணை செய்த அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க முடியுமா என தெரிவிக்கும் படி பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இலங்கை அரசாங்கத்திற்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற மிக அதிகமான நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிசார் அதற்குத் தேவையான சான்று படிவத்தை முன்வைக்காமை அசாதாரண நிலை என நீதவான் அறிவித்தார். எந்த அதிகாரி விசாரணை முன்னெடுத்தாலும் இறுதியில் வழக்கு தொடுனராக போலீசார் முன்நிற்க வேண்டும் எனவும் அதனால் விசாரணைகளில் பொலிஸார் தகவல்கள் தெரியாதது போன்று செயல்படுவது புதுமையான விடயம் என நீதவான் தெரிவித்தார். இந்த பி அறிக்கையில் ஏஎஸ்பி சான்று உறுதிப்படுத்தல் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை தெரிந்துகொண்டே செய்த காரியம் என சந்தேகம் ஏற்படுவதாகவும் வரலாற்றில் சந்தேகநபர்களுக்கு பிணை கொடுப்பதற்கு தேவையான பின்புலன் விசாரணை அதிகாரிகளால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்த நீதவான் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பொறுப்பற்ற வகையில் செயல்படுவதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் நிலையை பார்க்கும்போது சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டால் அது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதால் சந்தேகநபருக்கு பிணை வழங்க முடியாது என கூறிய நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் பின்னர் போலீசார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் நீதவான் ரங்க திசாநாயக்க விமர்சனங்களை முன்வைத்தார். சில நேரங்களில் சட்டமா அதிபரின் செயற்பாடுகளை புரிந்துகொள்ள முடிவதில்லை என தெரிவித்தார். இந்த வழக்கில் சட்டமா அதிபர் போலீசாருடன் இணைந்து தான் செயற்படுகிறார் என்பது தொடர்பில் நினைத்து பார்க்க முடியவில்லை எனவும் போலீசார் மற்றும் சட்டமா அதிபர் இடையே கருத்து வேறுபாடு காணப்பட்டால் அது தீர்த்துக் கொள்ளப் பட வேண்டும் எனவும் தெரிவித்தார். விசாரணைகளின் ஆரம்பத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என்ற ஒரு ஏற்பாடு சட்டத்தில் இல்லை எனவும் ஆனால் தற்காலத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று அந்த ஆலோசனைகளை நிராகரித்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நீதவான் ரங்க திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உதயங்க வீரதுங்க தொடர்பில் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு உதயங்க வீரதுங்கவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கையிடம் யுக்ரேன் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிக் விமான கொடுக்கல் வாங்கல் மற்றும் யுக்ரேன் கிளர்ச்சிப் படைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பில் விசாரணைகளை யுக்ரேன் முன்னெடுத்துள்ளது. உதயங்க வீரதுங்க யுக்ரேன் பிரஜை என்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கையிடம் கோருவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. யுக்ரேன் ரஷ்யாவின் கீழே இயங்கிய போது உதயங்க வீரதுங்க தனது விளையாட்டை காட்டிய போதும் தற்போது நிலைமை மாறி யுக்ரேன் தனி நிர்வாகத்தை முன்னெடுத்து வருகிறது. அதனாலேயே உதயங்க வீரதுங்க யுக்ரேன் செல்லாமல் துபாயில் மறைந்திருந்தார்.
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வரும் நோக்கமாக அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் டுபாய் நாட்டிற்கு சென்று இருந்தனர். அவர்களே உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து உதயங்க வீரதுங்க இறங்கிய போது கொழும்பிலிருந்து சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர் உதயங்கவை நோக்கிச் சென்று கையடக்கத் தொலைபேசி ஒன்றைக் கொடுத்து 'உங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று இருக்கிறது' என்று கூறியுள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பை மறைவான இடத்தில் சென்று சுமார் அரை மணித்தியாலங்கள் உதயங்க வீரதுங்க கதைத்துள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பை எடுத்தது வேறு யாருமல்ல ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ என தெரியவந்துள்ளது.
இதேவேளை உதயங்க வீரதுங்க தொடர்பில் லங்கா ஈ நியூஸ் இதற்கு முன்னர் வெளியிட்ட செய்தியில் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் வைத்தே உதயங்க வீரதுங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது என வெளியான செய்தியை குற்றப் புலனாய்வு பிரிவினர் நிராகரித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் உள்ள குற்றப் புலனாய்வு பிரிவினரின் அலுவலகத்தில் வைத்தே உதயங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அதன் பின்னர் நேரடியாக நீதவான் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட உதயங்க வீரதுங்கவை விடுமுறையில் இருந்த சிறைச்சாலை வைத்திய அதிகாரியை அழைத்து வந்து அன்றைய தினம் இரவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் இந்த வழக்குகளில் பிரதான சந்தேகநபர் உதயங்க வீரதுங்க அல்ல தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே. உதயங்க கஷ்டத்திற்குள் விழும் போதெல்லாம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மூச்சடைக்கும். இரு நாடுகளும் உதயங்க தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளை கோட்டாபய ராஜபக்சவினால் நிறுத்த முடியாது போனால் உதயங்க வீரதுங்கவின் வாழ்க்கை விளக்கமறியலில் 'இயற்கை' மரணமாகவே முடிவுற்று விடும் வாய்ப்பு உள்ளது. அதிகாரம் என்ற விடயத்தை வைத்துப் பார்க்கும் போது உறவுமுறை மாத்திரமன்றி தந்தை மகன் உறவு கூட கணக்கில் எடுக்கப்படாது என்பதை இலங்கையின் வரலாறு ஒப்புவிக்கிறது.
---------------------------
by (2020-02-18 15:56:54)
Leave a Reply