(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 28 பிற்பகல் 07.15) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய இலங்கை நிர்வாக சேவையில் பிரிவான போலீஸ் துறையை இராணுவ மயமாக்கி வரும் உச்சக்கட்ட நிலையில் 1797 ஆம் ஆண்டு பெட்ரிக் பேரன் மயிலியஸ் என்பவரினால் நாட்டு மக்களின் சிவில் சேவைக்கான ஏற்படுத்தப்பட்ட பொலிஸ் துறையின் குற்ற விசாரணை திணைக்களம் என்ற சிஐடி பிரிவிற்கு மிலிட்டரி பிரிவை அனுப்பி பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்த 37 விசாரணைகளுக்கான கோவைகளை 25ம் திகதி இரவு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோதமாக கடத்திச் சென்றுள்ளதாக இலங்கை சட்டத்தை மதிக்கும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளை கண்காணிக்கவென தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையில் 6 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மறுநாள் இந்த கோவைகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குற்ற புலனாய்வு திணைக்கள விசாரணைகளை கண்காணிக்க இராணுவ புலனாய்வு பிரிவு அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பிலான சட்ட விரோதத் தன்மை மற்றும் விளைவுகள் தொடர்பில் லங்கா ஈ நியூஸ் முன்கூட்டியே செய்திகளை வெளியிட்டு இருந்தது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்த இந்த முக்கியமான விசாரணை கோவைகளை எடுத்துச் செல்வதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புதுமையான காரணத்தைக் கூறி உள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச நியமித்த அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைக் குழுவை இரத்து செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஊழல் நிறைந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன என்ற பிஸ்சு பூசா, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரஸ்ரீ ஜயதிலக்க மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு இரண்டில் குற்றவாளியாக கருதப்பட்ட முன்னாள் போலீஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவின் பெயரிலேயே இந்த விசாரணை கோவைகள் எடுத்துச் செல்லப்படுவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்வாறானதொரு அதிகாரம் கிடையாது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் உள்ள விசாரணை கோவைகளை பொலிஸ் மா அதிபரால் கூட அங்கிருந்து அகற்ற முடியாது. ஆனால் 25 ஆம் திகதி இந்த விசாரணை கோவைகளை எடுத்துச் சென்ற அதிகாரிகள் தங்களுடைய பெயர்களைக் கூட பதிவு செய்யவில்லை.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 37 விசாரணைகளுடன் தொடர்புடைய கோவைகளில் முக்கியமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு கோவைகள், பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை கோவைகள், 11 மாணவர்களை கடத்தி கப்பம் பெறும் நோக்கில் அவர்களை கொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை கோவைகள் இதில் உள்ளடங்குகின்றன.
வழக்கு விசாரணை கோவைகளை எடுத்துச் சென்றது மாத்திரமன்றி குற்ற விசாரணைகள் தொடர்பான விசாரணை பொருட்களாக பதியப்பட்டிருக்கும் விடயங்கள் அடங்கிய PR என சொல்லப்படும் பிரடர்ஷன் ரெஜிஸ்டர் ஆவணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த கோவைகள் கடத்திச் செல்லப்பட்டு உள்ளமையால் மேற்கூறிய முக்கிய மூன்று குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பல வருட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்வரும் விசாரணைகளுக்கு கோவைகள் ஆவணங்கள் எதுவும் இன்றியே குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு பொருட்கள் பதிவு செய்யப்படும் பதிவு புத்தகமும் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதால் மேலும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் உடனடியாக செய்த விடயம் போலீஸ் துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினை அழிப்பதாகும். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக செயல்பட்ட இலங்கையின் மிகச் சிறந்த போலீஸ் அதிகாரியாக கருதப்படும் ஞானி அபேசேகர என்பவரை அந்த பதவியில் இருந்து நீக்கி பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் பிரத்தியேக உதவியாளராக இடமாற்றம் செய்துள்ளார். அதன் பின்னர் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை பதவி நீக்கம் செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளின் பெயர்களையும் உலகத்திற்கு தெரியப்படுத்தி அவர்களை வெளிநாடு செல்வதில் இருந்து தடுத்தனர். இதில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்ற 11 அதிகாரிகளும் அடங்குவர். அதன் பின்னர் இரகசிய பொலிஸ் பிரிவில் பணியாற்றிய பல சிரேஷ்ட அதிகாரிகள் நாட்டின் பல பாகங்களுக்கும் சாதாரண போலீஸ் சேவைக்கு மாற்றம் செய்து ராஜபக்ஷக்களுக்கு மாத்திரம் செல்யூட் அடிக்கக்கூடிய 43 போலீசார் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் அமர்த்தி உள்ளன.
இதில் பிரதான நபராக ராஜபக்ஷக்களுக்கு வாகன கதவைத் திறந்து விடும் அவர்களுக்கு மாத்திரம் சல்யூட் அடிக்கும் திறமை கொண்ட வாழ்க்கையில் ஒரு நாளேனும் குற்ற விசாரணை தொடர்பில் ஏதேனும் செய்திராத MSD, PSD பிரிவில் மாத்திரம் இருந்துள்ள 'சேரம்்' என்பவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
25 ஆம் திகதி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கூறிய சேரம் என்ற நபரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரிவின் கோவைகளையே எடுத்துச் சென்றுள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் இந்த சட்ட விரோதக் குற்றங்கள் மோசடிகள் தொடர்பில் வாய் திறந்து கதைப்பதற்கு எதிர்க்கட்சியில் ஒரு நாய் கூட இல்லை என்பதை கவலையுடன் தெரிவிக்க வேண்டும். இந்த செயற்பாடுகளுக்கு எதிராக வாளை கையில் எடுக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது கிளி மகாராஜாவின் ஊடாக நந்தசேன உடன் இணைந்து உறக்கத்தில் இருக்கிறார். அதனால் அவர் பயணிக்கும் போது தலையில் இடி விழாமல் பாதுகாத்துக் கொள்ள இடிதாங்கி உடன் கூடிய விசேட ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு நாம் முன்னெச்சரிக்கை விடுகிறோம்.
---------------------------
by (2020-02-28 06:24:43)
Leave a Reply