~

உலக சாதனை படைத்து தனது கூட்டணியை உருவாக்கிய சஜித்..! அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றும் செய்யாமல் தனது சிரேஷ்ட தலைவர்கள் மீது தாக்குதல்..! (Video)

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 02 பிற்பகல் 04.15) மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியை தழுவிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்று கூட்டணி சேர்ந்து இருந்த கட்சிகளை விடவும் குறைந்த அளவான கட்சிகளைக் கொண்டு 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இன்று கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சிகளில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் மாத்திரமே இந்த கூட்டணியில் இடம் பிடித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு பிரதானமாக ஆதரவை வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் கூட்டணியில் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. அதற்கு காரணம் கூட்டணி மீது விருப்பம் இல்லாமல் அல்ல. மாறாக கூட்டணியின் யாப்பில் உள்ளடக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முன்வைத்த விடயங்கள் இன்னும் கூட்டணி யாப்பில் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும். 

ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் பலர் கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போதும் சஜித் பிரேமதாசவுடன் தொடர்ந்து இருந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. வேறு கட்சியாக செயல்படும் ராஜித சேனாரத்ன கூட பங்கேற்கவில்லை.

சஜித்தின் கீழ்த்தர பேச்சு எதிர்க்கட்சிக்கு புதுமை.. 

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதான உரையை ஆற்றிய சஜித் பிரேமதாசவின் கீழ்த்தரமான உரை எதிர்க்கட்சியினரை புதுமையில் ஆழ்த்தியது. காரணம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்காமல் தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மீது மூன்று சந்தர்ப்பங்களில் அவதூறு பேசி உள்ளார். இந்த உரையை பார்க்கும் போது உண்மையில் சஜித் பிரேமதாச உருவாக்குவது ராஜபக்சக்களின் கைக்கூலியாக செயல்படக் கூடிய கூட்டணியா என்ற சந்தேகம் வலுக்கிறது. அரசாங்கம் உருவாகி 100 நாட்களின் பின்னரே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இயலாமை மற்றும் நிர்வாகத் திறமை இன்மையை இந்த அரசாங்கம் காட்டி உள்ள போதும் அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் விமர்சனங்களை முன்வைத்து இருக்க வேண்டும் என்ற போதும் அபூர்வத் தலைவரான சஜித் பிரேமதாச அதனை செய்யவில்லை.

வழமை போலவே இன்றும் மகன்..

அதற்கு பதிலாக பிரேமதாசவின் மகன் என்ற புகழைப் பாடி தனது தந்தை பிரஜைகள் முன்னணி என்ற பெயரில் நண்பர்கள் கூட்டத்திற்கு எதிராக உருவாக்கிய கூட்டணி போன்றே தானும் இன்று கூட்டணியை உருவாக்கி உள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஆனால் தந்தை சிறிது காலத்திலேயே தனது பிரஜைகள் முன்னணியை கலைத்து விட்டார் என்பதை மகன் சஜித் கூறவில்லை. 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள யாப்பு மாற்றங்களை ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி யாப்பில் இணைத்து ஐக்கிய தேசிய கட்சியையும் உத்தியோகபூர்வமாக கூட்டணியில் இணைத்துக் கொள்வதாக ஒரு வார்த்தை கூட சஜித் பிரேமதாச தனது உரையில் கூறவில்லை. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரையும் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறும் இணைந்து கொள்பவர்களை 'பாதுகாப்பதாகவும்' சஜித் பிரேமதாச அறிவித்தார். யாரிடம் இருந்து பாதுகாப்பார் என்பது தெரியாது. ராஜபக்சக்களினால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியினர், சட்டத்தை மதிக்கும் போலீசார், அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரின் பாதுகாப்புக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதுவரை முன்னிலை ஆகவில்லை.

மஹிந்த செய்ததை சஜித்தினால் செய்ய முடியுமா?

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தாமரை மொட்டு கட்சியை உருவாக்கி வெற்றி நடை போட்டது போன்று செய்ய முடியும் என சஜித் பிரேமதாச நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றாலும் தெற்கில் 10 மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச படுதோல்வி அடைந்த போது அவரால் தெற்கில் மலையக தமிழ் மக்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்தை மாத்திரமே வெற்றி கொள்ள முடிந்தது. எனவே யதார்த்தம் ராஜபக்சக்கள் சென்ற சிங்கள பௌத்த இனவாத அடிப்படையிலேயே சஜித் பிரேமதாச செல்ல முயற்சிக்கிறார். ராஜபக்சகளை விட தான் ஒரு சிறந்த சிங்கள பௌத்தர் என சஜித் பிரேமதாச தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற போதும் ஐக்கிய மக்கள் சக்தி அங்குரார்ப்பண நிகழ்வில் குறைந்தளவான பௌத்த பிக்குகளே கலந்து கொண்டனர். சிங்கள பௌத்த வாதிகளுக்கு மஹிந்த ராஜபக்ச தலைவராக இருக்கும் நிலையில் அதற்கு டுப்ளிகேட் தலைவர் தேவையில்லை என்பதை சஜித் பிரேமதாச உணர வேண்டும். சீசோ விளையாடும் போது ஒரு தடவை மேலே செல்லும் பக்கம் மறு தடவை கீழ் நோக்கி செல்லும் என்பது சஜித்திற்கு தெரியாதா. யுத்தம் நடைபெற்ற சமயத்தில் பிரபாகரனுக்கு 10 வருட இடைக்கால நிர்வாகத்தை தருவதாக கூறிய சந்திரிகா குமாரதுங்க 64 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார் என்பது சஜித் பிரேமதாசவிற்கு தெரியாது.

ராஜபக்ச மொடலில் மற்றும் ஒருவர் ஆனால் உலக சாதனை..

இளைய சமுதாயத்தினருக்கு பாரம்பரிய அரசியலில் வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் புதிய அரசியல் பாதையில் பயணிக்க வேண்டும் என இன்றைய உரையில் சஜித் பிரேமதாச தெரிவித்த போதும் அவருடைய வேலைத் திட்டங்களில் பாரம்பரிய அரசியலே உள்ளது. புதிய போத்தலில் பழைய வைன் அல்ல, பழைய போத்தலில் பழைய வைன் என்பது போலவே உள்ளது. எனவே ராஜபக்ச மொடலின் மற்றும் ஒன்றே என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த ஐக்கிய மக்கள் சக்தி அங்குரார்ப்பண நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது என சஜித் பிரேமதாச கூறினார். அது உண்மைதான். சின்னம் இல்லாமல் இலங்கையில் அரசியல் கூட்டணி ஒன்றை ஆரம்பித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கையில் மாத்திரமல்ல உலகத்திலும் இது சாதனைக்குரிய சம்பவமே.

சந்திரபிரதீப்   

ஐக்கிய மக்கள் சக்தி அங்குரார்ப்பண நிகழ்வின் முழுமையான வீடியோ கீழே

---------------------------
by     (2020-03-03 00:06:16)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links