(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 05 முற்பகல் 11.30) 2019 ஜூலை மாதம் 19ஆம் திகதி 10 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பிணை முறி மோசடி வழக்கில் அரசியல் பழிவாங்கல் மற்றும் தேர்தல் பிரச்சார நலன்களை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்கவினை குறித்த வழக்கில் சிக்க வைத்து அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளமை சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருக்கின்ற புதுமையான விடயம் என்னவென்றால் கைது செய்வதற்காக நீதிமன்றில் பிடியாணை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள பதினோரு சந்தேகநபர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தவிர்ந்த ஏனைய 10 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யப்படுவதுடன் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
01.பர்பச்சுவல் ட்ரெசரிஸ் லிமிடெட்
02.சந்தோஷ் ரவீந்திர கருணாநாயக்க
03.லக்ஷ்மன் அர்ஜூன மகேந்திரன்
04.அர்ஜுன் ஜோசப் அலோசியஸ்
05. பலிசேன அப்புஹாமிலாகே தொன் ஓசாதி
06.ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ்
07.சித்த ரஞ்சன் ஹுலுகல்ல
08.முத்துராஜா சுரேந்திரன்
09.ஆஜான் கார்த்தியே புரிஞ்சிஹேவா
10.துய்ய ஹென்னதிகே புத்திக்க சரத்சந்திர
11. சங்கரப்பிள்ளை பத்மநாபன்
12. புதுகொடஹேவா இந்திக்க சமன்குமார்
மேற்கூறிய பட்டியலில் உள்ள ஏழு சந்தேகநபர்கள் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி குற்றப் பத்திரிகையை ஏற்றுக் கொண்டதன் பின்னர் சந்தேக நபர்கள் தலா 10 லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 லட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும் விடுவிக்கப்பட்ட நபர்களாவர். எனவே சட்டமா அதிபர் மீண்டும் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ள நபர்கள் இவர்களே. பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை மீண்டும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாயின் சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளை மீறி செயல்பட்டிருக்க வேண்டும். அப்படியே செய்தாலும் வழக்கு விசாரணை செய்யும் நீதிமன்றத்தின் நீதிபதியே பிடியாணை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறின்றி நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு உள்ள சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு சட்டமா அதிபருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
வழக்கு விசாரணை செய்யப்பட்டு கொண்டிருக்கும் போது புதிதாக சந்தேகநபர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும் அது வழக்கு விசாரணையின் போது வெளியாகும் சாட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபராக பெயரிடப்படும் நபராக இருக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையின் போது எந்த ஒரு சந்தேக நபரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்கவின் பெயரை குறிப்பிடவில்லை.
மேலும் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது மத்திய வங்கியை அல்லது வர்த்தக வங்கிகள் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. மத்திய வங்கி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டின் கீழும் வர்த்தக வங்கி கபீர் ஹாசிமின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் எவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்படாத நிலையில் சம்பந்தமே இல்லாத ரவி கருணாநாயக்க சந்தேக நபராக பெயரிடப்பட்டு உள்ளமை புதுமையான விடயமாகும். அத்துடன் ரவி கருணாநாயக்க அர்ஜுன அலோசியஸ் வீட்டில் தங்கியிருந்தமை குற்றம் என்றால் அது பிணை முறி மோசடி வழக்கில் அல்லாமல் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். அவ்வாறான ஒரு விசாரணை இதுவரை நடைபெறவில்லை.
பிணைமுறி மோசடி வழக்கு அது தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் பிணை முறி மோசடி தொடர்பில் சர்வதேச கணக்காய்வு விசாரணை அறிக்கையும் வெளியாகியுள்ளது. இந்த விசாரணைகள் எதிலும் ரவி கருணாநாயக்கவின் பெயர் சந்தேக நபராக குறிப்பிடப்படவில்லை. ஆனால் சர்வதேச பிணைமுறி கணக்காய்வு விசாரணை அறிக்கையில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மோசடியில் ஈடுபட்டதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரவி கருணாநாயக்கவின் கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் அஜித் நிவாட் கப்ராலை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
எனவே சட்டமா அதிபர் தனது உத்தரவின் மூலம் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நாடகக் கொட்டகையாக மாற்றியுள்ளார். தப்புல லிவேரா சட்ட மாஅதிபர் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அரசியல் லாபம் ஈட்டும் வகையில் செயல்படுபவர் என்பது தெளிவாக புரிகிறது.
சட்டமா அதிபர் தப்புல லிவேராவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க குறித்த சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பான பிடியாணையை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க இது சிறந்த கேலிக் கூத்து என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளி கீழே
---------------------------
by (2020-03-06 05:02:56)
Leave a Reply