(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 07 பிற்பகல் 12.10) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். (குறித்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.)
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுபட்டு சென்ற சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியுடன் ஐக்கிய தேசிய கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கணக்கில் எடுக்காமல் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக்கூட சஜித் தரப்பு தயாரித்து முடித்து விட்டது.
அதனால் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் இழைத்த குழுவினரை ஒதுக்கி வைத்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் மேலும் சில கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
வெளியாகும் தகவலின் அடிப்படையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 40 உறுப்பினர்கள் இம்முறை யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளனர். ஊழலற்ற திறமையான தொழில் வல்லுனர்கள் அடங்கிய குழுவுடன் யானை சின்னத்தில் தேர்தலை சந்திக்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
"சஜித் பிரேமதாசவை ராஜபக்சக்களே வழி நடத்துகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆரம்ப விழா வைபவம் தாமரைத் தடாக அரங்கில் நடத்தப்பட்டமை ஆகும். பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம் மற்றும் தாமரைத் தடாக அரங்கு போன்றவை அரசியல் நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற போதும் சஜித் பிரேமதாசவுக்கு தாமரை தடாக அரங்கு வழங்கப்பட்டமை இந்த அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் சஜித் பிரேமதாச முன்னெடுக்கவில்லை என்பதனாலாகும். எனவே சஜித் குழுவின் பின்னணியில் செயல்படுவது யார் என்பதை சொல்லித் தெரிய தேவையில்லை" என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் இணைந்து செயல்படாது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்படும் அரசியல் தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கை ராஜபக்ச குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-03-07 12:02:03)
Leave a Reply