~

அடிக்கடி வாக்குறுதிகளை மீறும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - வடக்கு தாய்மார்கள் ஐக்கிய நாடுகளுக்கு மனு

-டெரல் உனுசிங்கவின் செய்தி

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 12 பிற்பகல் 08.20) காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தினமும் கண்ணீர் போராட்டம் நடத்தும் வட பகுதி தாய்மார்கள் பத்துவருடங்கள் தங்களுக்குக் கிடைக்காத நீதிக்காக சர்வதேச தலையீட்டை கோரி ஐக்கிய நாடுகள் அமைப்பின் மகளிர் தினத்தில் வடக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

முல்லைத்தீவு செல்வபுரம் பிரதேசத்திலிருந்து மாவட்ட செயலகம் வரை 2020 மார்ச் எட்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேரணியாக வந்த காணாமலாக்கப்பட்ட நபர்களின் தாய்மார் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் நாற்பத்து மூன்றாவது அமர்வில் முன்வைக்கவென மனு ஒன்றை கையளித்தது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு இந்த மனுவை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட இந்த கவனயீர்ப்பு பேரணியின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தாய்மார்கள் தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் இந்த கோரிக்கையை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே இந்த பேரணியை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மார்ச் எட்டாம் திகதியுடன் 1097 நாட்கள் பூர்த்தி அடைவதாக குறித்த பேரணியின்போது காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சபிதா ரதீஸ்வரன் என்ற தாய் ஊடகங்கள் வாயிலாக சிங்கள மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து இறுதி யுத்தத்தின் முதல் நாளன்று இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட வைரமுத்து ராதீஸ்வரன் என்ற தனது மகனை இன்னும் காணவில்லை என தெரிவித்தார்.

அவருடன் சேர்த்து மேலும் 150 இளைஞர் யுவதிகள் பஸ் ஒன்றின் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்த அவர், இந்த அனைவரையும் கண்டுபிடித்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

"உங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஒரு நாளேனும் வெளியில் சென்று வீட்டிற்கு வராவிட்டால் நீங்கள் எவ்வளவு கவலைப் படுவீர்கள்..? நாங்கள் சுமார் பத்து வருட காலம் துன்புற்று வீதிகளில் அலைந்து திரிகிறோம். எங்களைப் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பாருங்கள்.." என்று சபிதா ரதீஸ்வரன் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.

"நீங்கள் எங்களது உறவுகளை கொடுத்தே ஆக வேண்டும்."

ஜனாதிபதியின் பதில்..

எனினும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, "யுத்தக் களத்தில் பலியான நபர்களின் சடலங்கள் உறவினர்களுக்கு கிடைக்காது" என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட சம்பவங்கள் இருப்பதாக ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இது தொடர்பான பொறுப்பை இராணுவமோ அரசாங்கமோ பொறுப்பேற்காது என தெரிவித்தார். 

"விசேட சம்பவங்களை எடுத்துக் கொண்டு அதனை ஜெனரலைஸ் (பொதுநிலை) செய்ய முயற்சிக்கின்றனர். அந்த இடத்தில் தான் பிழை உள்ளது." 

யுத்த களத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரது சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டாது அவர்கள் காணாமல் போனதாக அறிவித்த இலங்கையின் ஜனாதிபதி, யுத்த சமயத்தில் பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்த பின்னரும் நாட்டில் பல பாகங்களில் இடம்பெற்ற கடத்தல்கள் காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லாமை தொடர்பில் வாய்திறக்க ஜனாதிபதி மறுத்துவிட்டார்.

பதில் கிடைக்காமல் உயிரிழத்தல்..

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை செய்யும் அலுவலகத்தின் மூலமாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் 20,000 பேர் வரை காணாமல் ஆக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் அனேகமானோர் யுத்த காலத்தில் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை சுமார் பத்து வருட காலத்திற்கு முன்னர் பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு ஏற்பட்ட நிலை குறித்து தகவல் வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மூன்று வருட காலமாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மார்கள் பலர் எவ்வித பதிலும் கிடைக்காமலே உயிரிழந்துள்ளனர்.

யுத்த காலத்திலும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை தேடி மூன்று வருட காலமாக இடம்பெறும் வடக்கு-கிழக்கு தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் ஒருவர் அண்மையில் ஜெனிவா நகரத்தில் வெளியிட்ட தகவல் படி இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 க்கும் அதிகமாகும்.

-டெரல் உணுசிங்க-

---------------------------
by     (2020-03-12 19:36:12)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links