(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 18 பிற்பகல் 11.10) கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இலங்கையில் முதலாவது நபர் கடந்த 11ஆம் திகதி அடையாளம் காணப்பட்டு ஒரு வாரம் கழிந்துள்ள நிலையில் 18ஆம் திகதி வரையில் உறுதியாகியுள்ள கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இத்தாலி நாட்டில் பெப்ரவரி 23ஆம் திகதி இரண்டு கொரோனா புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் நான்கு வாரங்களுக்குள் சுமார் 17500 புற்று நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். இவ்வாறு இந்த நோய் பரவுவதற்கான அபாயம் காணப்படுவதால் இலங்கை மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மாறாக பொது மக்களுக்கு தகவல்களை மறைப்பதும் அதனை வெளியிடுபவர்களை தண்டிப்பதுமாக செய்து கொண்டிருக்கிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டமை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சித்த போதும் லங்கா ஈ நியூஸ் அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியது.
இதேவேளை 10 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கருத்து வெளியிட்டமைக்கு எதிராகவும் மற்றும் இத்தாலியில் இருந்து வந்த இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தமை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவா என்ற சந்தேகம் இருப்பதாக கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை புத்தளம் பிரதேசத்தில் 11 பொலீஸ் பிரிவுகளுக்கு சிலாபம் பிரதேசத்தில் 7 பொலீஸ் பிரிவுகளுக்கும் நீர்கொழும்பு பிரதேசத்தில் கொச்சிக்கடை போலீஸ் பிரதேசத்திற்கும் 18 ஆம் திகதி மாலை நான்கு முப்பது மணியுடன் மீள் அறிவிப்பு வழங்கும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனமடுவ, சாலியவெவ, நவகத்தேகம, முந்தலம, உடப்பு, நுரைச்சோலை, கல்பிட்டிய, வனாத்தவில்லு, பல்லம, கருவலகஸ்வெவ ஆகிய பகுதிகளிலும் சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரச்சிகட்டு, சிலாபம், மாரவில, வென்னப்புவ, கொஸ்வத்த, தங்கொட்டுவ மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொச்சிக்கடை ஆகிய 19 பிரதேசங்களுக்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய சுமார் 1400 பேர் வரை புனர்வாழ்வு முகாமில் பராமரிக்கப்படாமல் வெளியில் இருப்பதாக நம்பப்படும் நிலையில் அதில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை கண்டு பிடிப்பதற்காகவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன் 10 வருடங்களில் மீள் செலுத்தும் நிபந்தனைகளுடன் சீனா அரசாங்கத்தால் 500 மில்லியன் டொலர் கடன் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் இந்த கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது தெரியவரவில்லை.
---------------------------
by (2020-03-19 13:59:16)
Leave a Reply