(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 26 பிற்பகல் 06.25) கொரோனா வைரஸுக்கு மத்தியில் தனது தனிப்பட்ட காட்டாட்சி விளையாட்டு நடத்தும் ஆட்சியாளரை இலங்கையில் அன்றி வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. கொரோனா வைரஸினால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஈரான் தனது நாட்டில் உள்ள 85 ஆயிரம் கைதிகளை 'தற்காலிகமாக' சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்ய தீர்மானம் எடுத்தமை கைதிகள் மத்தியில் வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்க்கவுமே ஆகும். இவ்வாறு தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அனைவரும் பாரிய கொலை குற்றங்களைப் புரிந்தவர்கள் அல்ல. சாதாரண குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் ஆவர். ஈரானில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இது இவ்வாறு இருக்கையில் இலங்கையில் காட்டாட்சி நடத்தும் ஆட்சியாளரான நந்தசேன கோட்டாபய 26 ஆம் தேதி ஆகிய இன்று ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட யுத்தத்தால் கைவிடப்பட்ட 8 பேரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கூட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சாஜன் சுனில் ரத்னாயக்க என்பவரை மாத்திரம் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.
இது கொரோனா வைரஸுடன் தொடர்புபட்டு எடுத்த தீர்மானம் அல்ல முழுமையாக ஜனாதிபதி அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தான் தோன்றித்தனமாக எடுத்த முடிவாகும். குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய படிமுறைகளை சரியான வகையில் பின்பற்றாது ஜனாதிபதி நந்தசேன இந்த பொது மன்னிப்பை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் தரப்பு விருப்பம், வழக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் விருப்பம், நீதி அமைச்சரின் விருப்பம், சட்டமா அதிபரின் விருப்பம் போன்றவற்றை பெற்றதன் பின்னரே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியும். இவை எதுவுமே இல்லாமல் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய படுகொலை குற்றவாளியான சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கி உள்ளார்.
2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் உள்ள தமது பழைய வீட்டினை பார்வையிடுவதற்காக உடுப்பிட்டி அகதி முகாமிலிருந்து வருகை தந்த யுத்தத்தால் கைவிடப்பட்ட 8 பேர் கூரிய ஆயுதத்தால் வெட்டி துப்பாக்கிச் சூடு நடத்தி மிகவும் கொடூரமான வகையில் கொலை செய்து மலசலகூட குழியில் புதைக்கப் பட்டிருந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். மிருசுவில் கூட்டுக் கொலை என்ற பெயரில் விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கில் 13 இலங்கை இராணுவத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கொலை செய்யப்பட்ட எட்டு பேரில் சிறுவர்களும் அடங்கியதாக மரண விசாரணையில் இருந்து தெரிய வந்தது. மரண விசாரணை நடத்திய மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்வேல்பிள்ளை அவர்களின் அறிக்கையின்படி கொலை செய்யப்பட்ட அனைவரும் கழுத்து வெட்டப்பட்ட இந்நிலையில் காணப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் ஐந்து வயதுடைய வில்வராஜா பிரசாத் என்ற சிறுவனும் மேலும் மூன்று சிறுவர்களும் காணப்பட்டதாக தெரியவந்தது.
இந்த கூட்டு கொலை அடிப்படையாக வைத்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் முறையான விசாரணை கோரி இராணுவம் மற்றும் அப்போதைய சந்திரிகா அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை வழங்கிய நிலையில் அதன் விளைவாக அப்போது இராணுவ சேவையில் இருந்த 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. முதலாவது வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்றதுடன் பிற்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வழக்கு கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு சுமார் 13 வருடங்கள் விசாரணை இடம்பெற்று வந்தது.
இறுதியில் வழக்கு விசாரணையின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 14 பேரில் 9 இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் சட்டமா அதிபரால் ஏனைய ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இந்த வழக்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்தது. குறித்த மிருசுவில் கூட்டுக் கொலை வழக்கை 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி நிறைவு செய்த மேல் நீதிமன்றம் Staff Sergeant சுனில் ரத்னாயக்கவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.15 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுனில் ரத்னாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட அதே நேரம் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுவன் உள்ளிட்ட யுத்தத்தால் கைவிடப்பட்ட 8 பேரை மனிதாபிமானமற்ற முறையில் கூட்டுப் படுகொலை செய்த குற்றவாளி என்று நீதிமன்றம் மரண தண்டனை விதித்த நிலையில் தற்போது ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய அந்த குற்றவாளிக்கு முறையற்ற வகையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி உள்ளார்.
இலங்கையின் சட்டத்தின் ஆட்சி சுயாதீன நீதிமன்றம் என்பவற்றிற்கு சங்கூதப்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்த காட்டாட்சி நிர்வாகியிடம் இருந்து நமது இலங்கையை நாடு என அங்கீகரித்தால் அதுவே புதுமையான விடயமாக இருக்கும். வளங்கள் குறைவாக இருக்கும் ஆனால் கொடுமையான தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள இலங்கை போன்ற தீவிற்கு உலகத்தினுடைய உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் உலகத்திலிருந்து நம்மை ஒதுக்கி வைக்கும் செயற்பாடாக நாட்டினுடைய தலைவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன...!
---------------------------
by (2020-03-27 15:50:05)
Leave a Reply