(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 01 பிற்பகல் 08.50) கோவிட் 19 எனப்படும் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கமாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்த வட பகுதி ஊடகவியலாளர் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதும் இதுவரை தாக்குதலுடன் தொடர்புபட்ட எவ்வித சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை.
மார்ச் 30ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கிளிநொச்சியை சேர்ந்த நடராசலிங்கம் துசாந்த் என்ற ஊடகவியலாளரே பாதிக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் தனது வீட்டில் செயற்படுத்தி வந்த அலுவலகத்துக்குள் மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.45 அளவில் அடாவடித்தனமாக உள்நுழைந்த 4 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதாக ஊடகவியலாளர் நடராசலிங்கம் துசாந்த் வடக்கு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது தனது வீட்டில் இருந்த நண்பர்கள் இருவர் மீதும் பொல்லால் தாக்குதல் நடத்தியதாகவும் வீட்டில் இருந்த கண்ணாடி குவளை ஒன்றை உடைத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
நடராசலிங்கம் துசாந்த் கூறுவதுபோல அவரது கை பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதுடன் நண்பர்கள் இருவருக்கும் பலத்த அடி காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினம் மாலையே கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர் மார்ச் 31ம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக தனது மடிக்கணினி சேதமடைந்து உள்ளதுடன் செய்தி சேகரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் இது தொடர்பில் இதுவரை எவ்வித சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.
நாட்டில் ஏனைய மாவட்டங்களை போலவே கிளிநொச்சி மாவட்டத்திற்கும் மார்ச் 30ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-04-02 08:07:39)
Leave a Reply