(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 05 பிற்பகல் 05.40) நாட்டில் உள்ள விஐபிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் நாட்டிலுள்ள அவசர சிகிச்சை கட்டில்கள் ஐநூரில் 100 கட்டில்கள் அடங்கிய விசேட சிகிச்சைப் பிரிவு கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்திற்கு சொந்தமான வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்துக்கு தெரியவந்துள்ளது.
இதில் 12 கட்டில்கள் குறித்த வைத்தியசாலையின் தனி அறை ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விசேட சிகிச்சை பிரிவு முழுமையாக குளிரூட்டப்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அபான்ஸ் நிறுவனம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூறு கட்டில்கள் அடங்கிய விஐபிகளுக்கான பிரிவு கொத்தலாவல பாதுகாப்பு பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தனது முகநூலில் பதிவு வெளியிட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த தகவலை இளைஞனுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவமொன்று இதற்கு முன்னரும் பதிவானது. பிறந்த குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று இருப்பதாக முகநூலில் பதிவு வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த செய்தியை வழங்கியதாக கூறப்படும் வைத்தியரும் கைது செய்யப்பட்டார். (குழந்தையின் தகவல் உண்மையா பொய்யா என்பது லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரியாது. நாங்கள் அப்படி ஒரு செய்தியை வெளியிடவும் இல்லை. ஆனால் நூறு கட்டில்கள் விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை உண்மையான செய்தி ஆகும்.)
கடுமையான உயிர்கொல்லி வைரஸுடன் நேரடியாக போராடி நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் உலகம் முழுவதும் பலியாகி உள்ள நிலையில் வைத்தியர்களை கடவுளாக நினைத்து செயல்படக்கூடிய இந்த காலகட்டத்தில் சிறிய சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து சட்ட விரோதமான முறையில் வைத்தியர்களை கைது செய்யும் அளவிற்கு உத்தியோகப்பற்றற்ற இராணுவ ஆட்சி நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
மிலிட்டரி தலைமையுடன் இயங்கும் இலங்கை அரசாங்கம் கொரோனா- 19 தொற்று நோயை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சுதந்திரமாக கருத்து வெளியிடுவதற்கு உள்ள வாய்ப்பை தொற்றுநோயை பயன்படுத்தி இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது. இலங்கை ஆட்சியாளர்களின் இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்கது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (குறித்த அறிக்கையின் முழு வடிவம் லங்கா ஈ நியூஸ் இணையத்தின் ஆங்கில பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.)
---------------------------
by (2020-04-05 14:16:07)
Leave a Reply