~

நோய் தொற்றாளர்களை குற்றவாளிகள் போல நடத்த வேண்டாம்..! பேரழிவின் நிலையை மீண்டும் பரிசீலிக்கவும் - ஜனாதிபதிக்கு கருவினால் புதிய யோசனைகள் சில

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 12 பிற்பகல் 04.30) கொரோனா வைரஸ் பேரழிவின் ஆரம்ப நிலையை மீள் பரிசீலனை செய்து பார்க்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய அறிவுறைகள் அடங்கிய கடிதம் ஒன்றை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்வைத்துள்ளார். குறித்த கடிதத்தின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.  

அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ,
இலங்கை சனாதிபதி,
சனாதிபதி செயலகம்,
காலி முகத்திடல்,

கொழும்பு 01

அதிமேதகு சனாதிபதி அவர்களே,

கோவிட்-19 நெருக்கடி: பயணத் திசையை மாற்ற வேண்டியதன் அவசியம்..

அரசாங்கத்தினால் பொது மக்களின் நடமாட்டம் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரையறைகள் கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவியுள்ள அதேவேளை, சுகாதார சேவைகளும் ஆயுதப் படையினரும் பொலிசாரும் பொது மக்களுக்கு அத்தியவசியத் தேவைகளை வழங்கும் செயற்பாட்டை பிரமிக்கத்தக்க முறையில் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். நாடு புதிய கள நிலவரங்களுக்கு ஏற்ப தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளாதவிடத்து பொதுச் சுகாதார அழிவும் பொருளாதாரப் பேரழிவும் ஏற்படுமோ என்ற கவலை எனக்கு அதிகரித்து வருகின்றது. உயிரிழப்ப்புக்களையும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சேதங்களையும் குறைக்கும் நோக்கில், பொதுச் சுகாதார நிபுணர்களும் ஏனைய தொழில்சார் நிபுணர்களும் என்னிடம் முன்வைத்துள்ள பின்வரும் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமையாகும்.

1. பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்குதலும் களங்கப்படுத்துதலும்..

கோவிட்-19 தொற்றியவர்களிடம் காணக்கூடிய அறிகுறிகள் காய்ச்சல், தொண்ட நோவு, தடிமல் போன்றவை சாதாரண காய்ச்சலுக்குரிய அறிகுறிகளாகவே உள்ளன. ஒரு சாதாரண நிலையில் கூட, சாதாரண தடிமல் மற்றும் இருமலின் மூலம் பல்லாயிரக் கணக்கான இலங்கையர்கள் இந்த அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது, தாங்கள் குற்றவாளிகளைப் போன்று நடாத்தப்படுவோமோ என்ற அச்சத்தினால் அத்தகைய அறிகுறிகளைக் கொண்டவர்களில் மிகச் சொற்பமான தொகையினரே பரிசோதனைக்கு முன்வருகின்றனர்.

தனியார் வைத்தியசாலைகள் கூட பரிசோதனைகளை நடாத்துவதற்கு ஊக்குவிக்கப்படாமையின் காரணமாக. அத்தகைய நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றன. அதனால் ஆயிரக் கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக் கணக்கான கோவிட்-19 நோயாளிகள் “ஒளிந்திருப்பதற்கு” தூண்டப்படுவதுடன் கவனக் குறைவான முறையில் மற்றையவர்களுக்கும் இந்த நோயைப் பரப்புவதற்கான சாத்தியம் மிக அதிகமாகும். கடுமையாக நடாத்தப்படுவோம் என்ற அச்சமின்றி தாங்களாகவே பரிசோதனைக்கு முன்வரக்கூடியதாக இல்லாவிட்டால், தொற்றியுள்ள சிலரும் அவ்வாறே செய்வர்.

கோவிட்-19 வைரஸ் தொற்றியவர்களில் சுமார் அரைவாசிப் பேருக்கு எந்தவொரு அடையாளமும் காணப்படுவதில்லை என ஏனைய நாடுகளின் அனுபவங்கள் கூறுகின்றன. ஆனால், அவர்கள் மூலம் பிறருக்கு வைரஸ் தொற்ற முடியும். சாதாரண தடிமல் மற்றும் இருமல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதனாலும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் சில நோயாளிகளுக்கு மாத்திரம் பரிசோதனை வரையறுக்கப்பட்டிருப்பதனாலும் சிலவேளை இப்போது கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில் நாட்டில் இந்த வைரஸ் பரவிக் கொண்டிருக்க முடியும். மிகவும் சாத்தியமான நோயாளிகள் பரிசோதிக்கப்படாத போது, அடையாளம் காணப்படாத போது, பரந்தளவிலான பெருந் தொற்று நோய் ஏற்படக் கூடிய அபாயத்தை எங்களால் நிராகரிக்க முடியாது என்பதுடன் ஊரடங்குச் சட்டம் மற்றும் பொருளாதார முடக்கலின் விளைவாக நாட்டு மக்கள் இது வரையில் செய்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

ஒரு நோயாளியாக அடையாளம் காணப்படும் என்ற பொது அச்சத்தின் கூட்டுச் செலவு நிரந்தரமானதாக இருக்கும். கோவிட்-19 நோயாளிகளுக்கும் அது தொற்றும் அபாயத்திலுள்ள நோயாளிகளுக்கும் அவர்களை பகிரங்கப்படுத்தி சமூகத்தினால் ஒதுக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகக் கருதாமல் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகின்ற சாதாரண நோயாளிகளாகக் கருதி சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அவசரமானதும் பயனுறுதி வாய்ந்ததுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உங்களிடம் கெளரமான முறையில் வலியுறுத்துகிறேன். இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன் தொற்றியிருக்க முடியுமான அனைவரும் இனங்கண்டு சிகிச்சையளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும்.

2. ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு..

இலங்கையிலிருந்து கோவிட்-19 நோயை ஒழிப்பது ஐந்து வருடங்களுக்கு முன்பு மலேரியாவை ஒழித்தது போன்று அமையாது. ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையிலாவது இந்த நோயை ஒழிப்பது சாத்தியமற்றது என்பதை ஏனைய நாடுகளின் அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆகக் குறைந்தது ஒரு வருடத்திற்காவது அத்தகைய தடுப்பு மருந்தொன்று கிடைக்கக் கூடியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த நோய் இலங்கையிலும் உலகம் முழுவதிலும் எதிர்காலத்திலும் தொடர்ந்தும் நீடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க வேண்டும். பொதுச் சுகாதாரமானது வெறுமனே இந்த நோயை ஒழிப்பதில் கவனம் செலுத்தாமல் இந்த வைரஸ் பரவும் வேகத்தைக் குறைப்பதன் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் போதுமான ஆற்றல் எமது வைத்தியசாலைகளிடம் இருக்கும். 

கோவிட்-19 வைரஸ் தொற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் எந்தவொரு சிகிச்சையும் இன்றி குணமடையும் அதேவேளை ஒரு சிறிய தொகையினரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவில் உயிருக்கு அச்சுறுத்தலான நோய் நிலைமைகள் தோற்றம் பெறுகின்றன. அத்துடன், இந்த வைரஸ் தொற்றுவோரில் சுமார் அரைவாசிப் பேரிடம் எந்தவொரு நோய் அறிகுறியும் தென்படுவதில்லை என்பதுடன் தாங்கள் நோய் தொற்றியவர்கள் என்பதைக் கூட அறியாதவர்களாகவும் அவர்கள் உள்ளனர். அத்தகைய ஆட்கள் தொடர்ச்சியாகவும் நம்பகமான முறையிலும் கண்காணிக்கப்பட்டு ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக அடையாளம் காணப்பட வேண்டும். கோவிட்-19 நோய் நினைத்துப் பார்க்க முடியுமான எதிர்காலம் வரை எங்களுடன் இருக்கும் என்ற உண்மையை அரசாங்கம் மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். எமது சுகாதாரப் பராமரிப்பு முறையினால் ஈடுகொடுக்க முடியுமான அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருக்கக் கூடிய வகையில் எமது நாட்டின் வேலை செய்யும் நடைமுறைகளை மாற்றியமைப்பதே நாம் எதிர்நோக்கும் சவாலாகும். இந்த வேலை செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்கியதன் பின்னர், ஊடரங்குச் சட்டத்தைப் படிப்படியாகத் தளர்த்துவது சாத்தியமானதாக அமையலாம்.

3. பரிசோதனை..

ஒரு பரந்தளவிலான தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, எமது மக்களை பாரியளவில் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகும் என்று பொதுச் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். PCR (உமிழ்நீர்) பரிசோதனைகள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பது தொடர்பில் நான் கவலைப்படுகிறேன். தொற்று திடீரென அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில், பெருந்தொகையான நோயாளிகளை தனியாக முகாமை செய்வது அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிரமமானதாக அமையும். இயன்ற வரையில் விரைவாக PCR பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கும், கிளினிக்குகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். PCR பரிசோதனைக்கு தேர்ச்சிபெற்ற ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். பல்கலைக்கழகங்களின் மூலக்கூற்று உயிரியல் துறைகளில் இந்த ஆற்றலைக் கொண்டவர்கள் உள்ளனர். அவர்கள் அவர்களின் பட்டப்பின் கற்கை மாணவர்களுடன் இந்தப் பரிசோதனை முயற்சியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், கோவிட்-19 இற்காக மிகப் பரந்த சமூக மட்டத்திலான நோய் எதிர்ப்பு (இரத்த) பரிசோதனைகளை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பரிசோதனைக் கருவிகள் தற்போது கிடைக்கக் கூடியவையாக மாறிவருகின்றன. அவை மிகவும் செலவு குறைந்தவையாகவும் PCR பரிசோதனைகளை விட மிக இலகுகவாகக் நிர்வகிக்கக் கூடியவையாகவும் உள்ளமையினால் அவை தெரியாத நிலையில் நோய் காணப்பட்டு குணமடைந்தவர்களை அடையாளம் காண்பதற்கு உதவும். இந்த நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள ஆட்கள் மிகவும் பெறுமதியானவர்களாவர். ஏனெனில் அவர்கள் மீண்டும் நோய் தொற்றும் அபாயம் குறைந்தவர்களாகவும் அவர்கள் ஏனையோருக்கு தொற்றுக்களை ஏற்படுத்தாமல் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடக் கூடியவர்களாகவும் இருப்பர். பாரியளவிலான இரத்தப் பரிசோதனைகள், கோவிட்-19 நோயாளிகள் அதிகளவில் காணப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் உதவும்.

செலவுகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அனைவரையும் தனியார் துறையினர் மூலம் பரிசோதனைகளைச் செய்து கொள்ளத் தூண்ட வேண்டும். இயன்றவரை விரைவாக NMRA யினால் உருவாக்கப்பட முடியுமான தரநியமங்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் உட்பட்டவகையில் பரிசோதனைக் கருவிகளை உற்பத்தி செய்யவும் பரிசோதனைகளை நடாத்தவும் அரசாங்கம் தனியார் துறையினரை ஊக்குவிக்க வேண்டும்.

இலங்கையில் நோய் எதிர்ப்புப் பரிசோதனைக் கருவிகளை உற்பத்தி செய்வதற்காகத் தனியார் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பொன்றைக் கூட்ட வேண்டும் என்று நான் உங்களுக்குப் பரிந்துரைக்கின்றேன். இதற்குத் தேவையான தேசிய ஆற்றல் எங்களிடம் காணப்படுவதுடன், அத்தகைய பரிசோதனைகள் எமது தேசிய பாதுகாப்புக்கு அத்தியவசியமாக இருப்பதனால் அவற்றை நாங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்வது அவசியமாகும். எவ்வாறாயினும், இந்தப் பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு விளக்கங்கள் தேவையாக இருப்பதனால், இந்த நோய் எதிர்ப்புப் பரிசோதனைகள் வைத்தியசாலைகளாலும் சுகாதாரப் பராமரிப்பு தொழில் வல்லுநர்களாலும் மாத்திரமே நிர்வகிக்கப்பட வேண்டும்.

நாங்கள் தனியார் துறையினரை அடுத்துவரும் வருடங்களில் முகமூடிகள், கை சுத்திகரிப்பான்கள், கையுறைகள், மேற்பரப்பில் தெளிக்கும் தொற்றுநீக்கிகள், ஒரு முறை பாவித்து விட்டு வீசக் கூடிய காகிதத் துவாய்கள் மற்றும் டிசுக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற கோவிட்-19 பரவாமல் வேரறுப்பதற்குத் தேவையான ஏனைய பொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்த வேண்டும். பரிசோதனைக் கருவிகளைப் போன்றே, இந்தப் பொருட்களுக்கும் உலகம் முழுவதிலும் அதிக கேள்வி நிலவும் என்பதனால் மிகை உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியும்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், பொது மக்களுக்கான பரிசோதனையின் ஒரு முக்கிய பகுதியாக, அலுவலகங்கள், நவீன சந்தைத் தொகுதிகள், புகையிரத நிலையங்கள் போன்ற சனநெருக்கடிமிக்க இடங்களில் நுழையும் ஒவ்வொருவரினதும் உடல் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கண்காணிக்கும் பணியை கையில் வைத்திருக்கக் கூடிய தொலை வெப்பமானிகளால் இலகுவாகவும் குறைந்த செலவிலும் மேற்கொள்ள முடியும். உயர் வெப்பநிலையைக் கொண்டுள்ளவர்களை அடையாளம் கண்டு சுய-தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூற முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பரிசோதனை ஒரு பழக்கபட்ட நாளாந்த அம்சமாக மாறும்.

4. பொருளாதார மீட்சி..

இலங்கையின் பொருளாதார மீட்சி பல்வேறு சவால்களைக் கொண்டதாக அமையும். போக்குவரத்து, வேலை நடைமுறைகள், பொருட்களை வாங்கும் நடைமுறைகள் மற்றும் அன்றாட வாழ்வின் ஏனைய அம்சங்கள் விடயத்தில் எமது வேலைகளைச் செய்யும் விதத்தை நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டி ஏற்படும். இதனை நாங்கள் இப்போதே ஆரம்பித்து தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும். அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகளையும், இராஜதந்திர சமுதாயத்தையும் அணுக வேண்டும். அதேபோன்று உலக வங்கி, ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட கடன்வழங்கும் நாடுகளிடமிருந்து படுகடன் மீளச் செலுத்தலை இடைநிறுத்துதலையும் மனிப்பையும் பெறுவதற்கான பரந்த முயற்சியில் இதே போன்ற நிலைமையிலுள்ள ஏனைய நாடுகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நினைத்துப் பார்க்க முடியுமான எதிர்காலம் வரை நிலைத்திருக்கும் இந்த நோயின் மிகப் பரந்த கட்டத்தில், கட்டாயமாக சனநெரிசல் ஏற்படக் கூடிய வேலை நிலையங்களில் அபாயத்தை மிகப் பாரியளவிலான பரிசோதனையினால் மாத்திரமே குறைக்க முடியும். இதில் பொலிஸ், ஆயுதப் படை முகாம்கள், தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், பொதுப் போக்குவரத்து என்பன போன்ற இடங்கள் உள்ளடங்கும். நாங்கள் இந்தப் பரிசோதனை முறைகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்த ஆரம்பிப்பது அவசியமாகும்.

எமது சமூகத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய தொகை கோவிட்-19 நோயாளிகள் இருந்தாலும் கூட, சர்வதேச பயணங்களுக்கும் உல்லாசப் பயணங்களுக்கும் பாதுகாப்பாக பிரயாணம் செய்வதற்கு இடமளிப்பது பற்றி நாங்கள் இப்போது சிந்தித்தாக வேண்டும். இலங்கைக்கு பயணம் செய்யும் எந்தவொரு ஆளும் பயணம் செய்வதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னரான கோவிட்-19 பரிசோதனையில் எதிர்மறையான முடிவைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை இலங்கையில் நுழைவதற்கு அனுமதியளிப்பதற்கான ஒரு நிபந்தனையாக விதிப்பது அதற்காக ஒரு வழிமுறையாகும். இலங்கையிலிருந்து வெளிநாட்டுகளுக்குச் செல்பவர்களும் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். PCR பரிசோதனைத் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. ஒரு சில மணித்தியாலங்களில் பரிசோதனைகளுக்கான முடிவுகளைப் பெறுவது விரைவில் சாத்தியப்படும். மீண்டும் சர்வதேசப் பயணங்கள் ஆரம்பிக்கும் போது அனைத்து நாடுகளும் இந்தப் பரிசோதனையை கட்டாயமாக்க முடியும் என்பதுடன் எதிர்பாராத நிலைக்கான திட்டமிடலை இலங்கை இப்போதே ஆரம்பிக்க வேண்டும்.

பொருளாதார மீட்சிக்கான தொழில்துறைசார் வழிகாட்டல்களை உருவாக்குவதற்கு முன்னணி வர்த்தக சம்மேளனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில், வேலை நிலையங்கள் தொடர்ச்சியான முறையில் ஊழியர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தில் சனநெரிசலைக் குறைக்க வேண்டுமாயின், எமது அலுவலக வேலை நேரங்களையும், அனைவரும் வாரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நாட்கள் செய்யக் கூடிய விதத்தில் வேலை நாட்களையும் மாற்றியமைக்க வேண்டும். எதிர்வரும் வருடத்தில் விடுமுறை நாட்களை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படலாம். உதாரணமாக ஊழியர்களுக்கு சமய வணக்க வழிபாட்டுக்காக தங்களது வருடாந்த லீவு ஒதுக்கீட்டிலிருந்து விடுமுறைகளை எடுத்துக் கொள்ள இடமளித்தல்.   இது பொருளாதாரம் மீட்சியடையும் வரையில் அனைத்து இலங்கையர்களுக்குமான ஒரு நல்ல செயற்பாடாக அமைய முடியும்.

கழுவல் அறைகளில் சவர்க்காரம் மற்றும் காகித துவாய்களை வைத்தல், கதவுகள், கை ரேகை வாசிப்பு இயந்திரங்கள் போன்ற பலரால் பயன்படுத்தப்படும் மேற்பரப்புக்களுக்கு அருகில் கை சுத்திகரிப்புத் திரவ விடுவிப்பான்களை வைத்தல் போன்ற சுத்திகரிப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு வேலை நிலையங்கள் கட்டாயப்படுத்தப்படும். கட்டடங்களில் இழுத்து திறப்பதற்குப் பதிலாக தள்ளித் திறக்கும் அல்லது கையினால் அல்லாது காலினால் தள்ளித் திறக்கும் கதவுகளை அமைத்தல் போன்ற மாற்றங்களைச் செய்வது அவசியமாகும். காய்ச்சல் போன்ற அடையாளங்களைக் கொண்ட எந்தவொரு ஆளும் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படவும் வேலைக்கு சமுகமளிப்பது தடைசெய்யப்படவும் கூடிய விதத்தில் சுகயீன விடுமுறைக்கான விதிமுறைகளையும் திருத்த வேண்டும். அத்தகைய பரிசோதனைக்கான செலவுகளை தொழில்வழங்குநர்கள் பொறுப்பேற்க வேண்டி ஏற்படலாம்.

5. ஊழியம்..

பெரும்பாலான தொழில் வழங்குநர்கள் 2020 மார்ச் மாதத்துக்கான சம்பளங்களைச் செலுத்தியுள்ள போதிலும், ஏப்ரல் மற்றும் தொடர்ந்து வரும் மாதங்களில் பெரும்பாலான தொழில் வழங்குநர்கள் சம்பளங்களைச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர். இலங்கையில் கோவிட்-19 நிலைமை சுமுக நிலைக்குத் திரும்ப முன்னர் மிக மிக மோசமாக மாற முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்க வேண்டும். அதனால், பொது மக்களின் நடமாட்டம் தொடர்பான வரையறைகள் தவிர்க்க முடியாத மற்றும் துக்ககரமான பொருளதாரப் பின்விளைவுகளுடன் இன்னும் சில மாதங்கள் தொடர முடியும். அத்தகைய எதிர்பாராத நிகழ்வின் போது தொழில்வழங்குநர்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளங்களைச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வர். அதனால் பொருளாதாரம் சரிவுற்று சமூக ஒழுங்கில் கடுமையான தாக்கங்கள் ஏற்பட முடியும்.

அதனால், வியாபாரத் துறை தொடர்பில் அவசரமான மதிப்பீடொன்றை மேற்கொள்ளுமாறும் வங்குரோத்து அபாயங்களையும் மிகப் பாரியளவிலான வேலையின்மையையும் எவ்வாறு குறைக்க முடியும் என்பதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு வர்த்தக சம்மேளனங்களிடம் கோர வேண்டும் என்று நான் முன்மொழிகின்றேன். அரசாங்கம் பாரியளவிலான மற்றும் தீவிர பரிசோதனைகளை அறிமுகப்படுத்துவது அல்லது அவற்றுக்கான வசதி ஏற்பாடுகளைச் செய்வது சாத்தியப்பட்டவுடன் பொருளாதாரத்தை கட்டம் கட்டமாக மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

6. ஊரடங்குச் சட்டத்தைத் தணித்தல்..

கோவிட்-19 கட்டுப்படுத்தல் உபாயமுறை தொடர்பில் அரசாங்கத்தினால் பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும். எமது குறிக்கோள் இந்த நோய் எமது வைத்தியசாலைகளின் ஆற்றலை அழிக்கும் அளவுக்கு ஒரு பெருந் தொற்றுநோயாக மாறாமல் தடுப்பதாகவே இருக்க வேண்டும். அதேநேரம், கோவிட்-19 உடன் நாங்கள் இணைந்து வாழக்கூடியவாறு எமது பொருளாதாரத்தை நிலைவேறாக வைத்திருக்கும் சமூக, பொருளாதார முறையயொன்றை நாங்கள் உருவாக்க வேண்டும். தொற்றுநோயியல் ஆலோசனைகளையும் சீனா, தென்கொரியா, தாய்வான், ஹொங் கொங், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற தங்களது பொருளாதாரத்தை திறந்து வைத்திருந்த ஏனைய நாடுகளின் உதாரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை நாங்கள் படிப்படியாகத் தளர்த்த வேண்டும்.

இந்த ஊரடங்குச் சட்டம் பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் மனோ வலிமை மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. நேர வரையறையின்றி அதனை நீடிப்பது நடைமுறைச் சாத்தியமானதன்று. ஊரடங்குச் சட்டத்தின் பிரதான குறிக்கோள் மக்கள் அதிகளவில் ஒன்று சேர்வதை தடுப்பதே என்பதனால், ஒவ்வொரு நாளும் மக்களில் ஒரு சிறு பகுதியினரை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும். அப்போது குடும்பங்கள் உணவு, மருந்து மற்றும் வங்கித் தேவைகள் போன்ற அத்தியவசியத் தேவைகளை வாரத்தில் ஒரு முறையாவது நிறைவேற்றிக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிமேதகு சனாதிபதி அவர்களே, எமது நாட்டுக்காக அன்பையும், எமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அர்ப்பணிப்பையும் பகிர்ந்துகொள்வோம்.   இந்தக் கடிதத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்துவமாறு உங்களை வலியுறுத்துகிறேன்.   இந்த நெருக்கடியிலிருந்து எமது மக்களை விடுவிப்பதற்காக தமது அரசியல் அபிலாஷைகளையும் வேறுபாடுகளையும் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு கூட்டாகச் செயற்படுவது உலகத் தலைவர்கள் அனைவரதும் கட்டாயக் கடமையாகும்.

உங்கள் உண்மையுள்ள,

கரு ஜயசூரிய

---------------------------
by     (2020-04-12 15:07:28)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links