~

இலங்கையில் உருவாகிய மிக சிறந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு PTI சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டத்துறை சார்ந்தவர்கள் அதிருப்தி..!

சந்திரபிரதீப் எழுதுவது

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 15 பிற்பகல் 11.30) மனித உரிமைகள் மற்றும் மனித விடுதலைக்காக சிவில் மற்றும் குற்ற வழக்குகள் மூலம் முன்னிலையாகும் இலங்கையில் உருவாக்கிய சிறந்த சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கோட்டாபய ராஜபக்சவின் பொலிஸ், இராணுவ அரசாங்கத்தால் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு செயலாளரின் தடுத்து வைக்கும் உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிலுள்ள சட்டத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் சுதந்திரத்தை விரும்பும் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்தி வந்துள்ளது.

இந்த கைது தொடர்பில் செய்தி வெளியிடும் ராஜபக்ஷக்களுக்கு சார்பான கைக்கூலி ஊடகங்கள் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. எனினும் இந்த பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் யார் என்பதை சாதாரண சிங்கள வாசகர்களுக்கு  எடுத்துக் கூற வேண்டியது  உண்மையில் லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பொறுப்பாகும். 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என்பவர் யார்?..

'ஹிஸ்புல்லா' என்று சொல்லும்போது கிழக்கு மாகாணத்தில் அரசியலில் பிரபலமடைந்துள்ளது 'ஹிஸ்புல்லா' நினைவுக்கு வருகின்ற போதும் அவரது பரம்பரையுடன் இந்த ஹிஸ்புல்லா தொடர்பு பட்டுள்ளார் என்ற சந்தேகமும் வரும் நிலையில் அப்படி எந்த வித உதவிகளும் இல்லை. சட்டத்தரணி ஹிஸ்புல்லா கொழும்பு கல்கிசை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த சட்டத்தரணி ஹிஸ்புல்லாவின் பரம்பரையில் உள்ளவர்கள் அனைவரும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் பேராசிரியர்கள் என கல்வி கற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் புகழ்பெற்ற கல்கிஸ்ஸ சென் தோமஸ் கல்லூரியில் கல்வி கற்றவர். குறித்த கல்லூரியில் மாணவர் தலைவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சட்டத்துறை கல்வி கற்ற இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக சுமார் பத்து வருடங்கள் சேவையாற்றிய பின்னர் அரச சேவையிலிருந்து விலகி தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணியாக செயல்பட்டு வருகிறார். இதன்போது மனித உரிமை மீறல் மற்றும் மனித சுதந்திரம் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்திய சட்டத்தரணி ஹிஸ்புல்லா, தான் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உரிமை மீறல் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தினார். சிறுபான்மை மக்கள் தொடர்பில் சிவில் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி செயல்பட்டு வந்த சட்டத்தரணி ஹிஸ்புல்லா கருத்தரங்குகளில் சட்டத்துறை தொடர்பான செயலமர்வுகளிலும் விரிவுரைகளிலும் கலந்து கொண்டுள்ளார். 

43 தொடக்கம் 45 வயதுடைய இளம் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தனது சட்டத்துறை திறமையின் மூலமாக வழக்குகளில் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாத விவாதம் செய்யும் அறிவு திறமை காரணமாக சட்டத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக திகழ்கிறார். இதனை உறுதிப்படுத்தும் முகமாக கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற 52 நாள் சூழ்ச்சியான ஆட்சி மாற்றத்தின் போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கட்சிகள் மற்றும் 10 சிவில் அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனித உரிமை மீறல் வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தாக்கல் செய்த மனு சார்பில் நீதிமன்றில் ஆஜராகி ஹிஸ்புல்லா முன்வைத்த வாதங்கள் குறித்த வழக்கில் வெற்றி பெறுவதற்கு ஏதுவான காரணியாக அமைந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வழக்குகளை பொறுப்பேற்கும் போது எவருடைய அழுத்தங்கள் பயமுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டார் என்பது விசேட அம்சமாகும். கிறிஸ்தவ தேவாலயங்கள் பள்ளிகள் மீது அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்திய விடயம் தொடர்பான வழக்குகளை பொறுப்பேற்க பல சட்டத்தரணிகள் பின் வாங்கிய போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், பிரபல சட்டத்தரணிகளான ஜே.சி வெளிமுன, லக்சான் டயர்ஸ் போன்றவர்களுடன் இணைந்து குறித்த வழக்குகளுக்கு ஆஜரானார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டார் என்பதற்கு சிறந்த சான்றாக கடந்த காலங்களில் இனவாதிகளால் குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் சாபி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராகி வெற்றிகரமாக அந்த வழக்கை வாதாடியவர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அன்று கொல்வின் மீது சுமத்தப்பட்டது..

சட்டத்தரணிகள் என்போர் தனது கட்சிக்காரர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைத்து தனது கட்சிக்காரர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும் பணியை செய்பவர்களாவர். எனவே தனது கட்சிக்காரர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி மீது கட்சிக்காரர் தொடர்புபட்டுள்ள விடயங்களில் சட்டத்தரணியும் தொடர்பு கொண்டுள்ளார் என்று யாராவது கூறினால் அவர்கள் சட்டம் தொடர்பில் அறியாத முட்டாள்கள் என்பதே சரியான நிலைப்பாடு ஆகும். அப்படி கருதினால் சட்டத்தரணி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இலங்கையில் உருவான பெயர் பெற்ற சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா ஆவார். இவர் நீதிமன்றில் அதிகளவு ஆஜரான வழக்குகளை எடுத்து நோக்கினால் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபர்களின் விடுதலைக்காகவே முன்னிலையாகி உள்ளார். கொல்வின் ஆர் டி சில்வா தனது முதலாவது நீதிமன்ற வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையானார். அந்த வழக்கின் இறுதியில் பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொல்வின் ஆர் டி சில்வா வெற்றி பெற்றார். வழக்கு வெற்றியுடன் வீடு சென்ற கொல்வின் ஆர் டி சில்வாவிற்கு தனது தாயிடம் இருந்து வாழ்த்துக்களுக்கு பதிலாக குறைகூறலே இடம்பெற்றது. "நான் உனக்கு சட்டம் கற்பித்தது மனிதர்களை கொலை செய்வதற்கு உதவி செய்ய அல்ல. மனிதர்கள் வாழ உதவி புரிவதற்கே" சென்று கொல்வின் ஆர் டி சில்வாவின் தாய் கடும் தொனியில் திட்டியுள்ளார். அன்று தனது தாய்க்கு வழங்கிய உறுதிமொழியை அடுத்து அதன் பின்னர் குற்றவியல் வழக்குகள் எதிலும் கொல்வின் ஆர் டி சில்வா ஆஜராகவில்லை. அந்த சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணியாகவே கொல்வின் ஆர் டி சில்வா நீதிமன்றில் முன்னிலையானார். மரண தண்டனையிலிருந்து இவரால் காப்பாற்றப்பட்ட நபர்கள் பலர் உள்ளனர். மரண தண்டனையில் இருந்து தனது கட்சிக்காரரை காப்பாற்றுவதற்காக நீதிமன்றில் கொல்வின் ஆர் டி சில்வா முன்வைத்த வாதங்கள் இன்றும் சட்டத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றன. பல கொலை வழக்குகளில் இருந்து கொலை சந்தேகநபர்களை காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவ்வாறு வழக்குகளில் முன்னிலையானதால் கொலைகாரர்களுக்கு உதவி செய்ததாக கொல்வின் ஆர் டி சில்வா மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. இவரது வாதத்திறமையால் அவருக்கு சட்டத் துறையில் புகழ் பெருகியதே தவிர குறையவில்லை. சட்டத்தரணி ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் அப்போது மிகத் தெளிவாக இருந்தனர்.

சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டை சட்டத்தரணி மீது செலுத்தி தாக்கும் ரகசியம்.. 

ஆனால் இன்று ராஜபக்சக்கள் நாட்டு மக்கள் மத்தியில் இனவாதம் மதவாதம் என்பவற்றைப் பரப்பி பிரச்சாரம் செய்து வருவதால் இன்றைய சமூகம் அன்று போல் இல்லை. பாதிக்கப்பட்டவர் மாத்திரமன்றி சந்தேகநபர் சார்பிலும் நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள் மீது சந்தேகநபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்த விடயத்தில் சட்டத்தரணி தமிழ் அல்லது முஸ்லிமாக இருந்தால் குறித்த பிரச்சாரம் மிகவும் பிரபலமானதாக மாறிவிடும். இந்த கேடுகெட்ட கேவலமான பிரச்சாரத்திற்கு ராஜபக்சக்களில் கைக்கூலிகளாக செயல்படும் ஊடகங்கள் சில உடந்தையாக உள்ளன.

எனவே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பல சந்தேக நபர்களின் தரப்பு சட்டத்தரணியாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் காணப்படுகிறார். அது அவருடைய சட்டத்துறை தொழிலாகும். கட்சிக்காரரிடம் வழக்கிற்கு செலவாகும் பணத்தை அளவிடுவது சட்டத்தரணியின் செயல்பாடாகும். வழக்கு விடயம் தொடர்பில் சந்தேக நபர்கள் அல்லது பிரதிவாதிகளின் உறவினர்கள் சட்டத்தரணியை சந்தித்து கலந்துரையாடுவது இந்த சட்டத்துறையின் அங்கமாக இருக்கிறது. இவற்றை அடிப்படையாக வைத்து ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புடைய சந்தேகநபர்கள் வரிசையில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வையும் சேர்த்து குண்டுத் தாக்குதல் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாதுகாப்பு செயலாளரின் தடுப்புக்காவல் உத்தரவில் விளக்கமறியலில் வைத்துள்ளமை சட்டத்தை குழிக்குள் புதைத்து ஏகாதிபத்திய ஆட்சி கோலொச்சி இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

இந்த சம்பவத்தின் மூலம் ஏகாதிபத்திய ராஜபக்சக்களின் பொலிஸ் இராணுவ அரசாங்கம் எதிர்பார்ப்பது எதிர்வரும் காலத்தில் தமக்கு எதிராக எந்த ஒரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாக கூடாது என்பதாகும். இந்த சம்பவங்கள் மூலம் சட்டத்துறை சார்ந்தவர்களை அச்சுறுத்துவது இவர்களது பிரதான இலக்காகும்.

சட்டமா அதிபருக்கு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கவில்லை..

சட்டத்தரணி ஒருவரை கைது செய்ய வேண்டுமாயின் அதற்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென ஒரு படிமுறை உள்ளது. இந்த படிமுறை 1988 தொடக்கம் ஆயிரத்து 1989 காலங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி லியனாராட்சி கொலை சம்பவத்தின் பின்னர் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இந்த வழிமுறையை கடைபிடித்து வந்தது. ஆனால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சட்டத்தரணி கைது செய்யப்படுவதற்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் எவ்வித முன்னறிவிப்பும் எடுக்கப்படவில்லை. மேலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களில் தெரிவிப்பது போன்று கைது செய்யப்படவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க வருமாறு அழைக்கப்பட்டு அங்கு வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்படவில்லை. 

இந்த கைது சம்பவத்தின் பின்னர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்துறை நண்பர்கள் ராஜபக்சேவின் கைக்கூலி சட்டத்தரணியான அலி சப்ரியை சந்தித்து உதவி கோரிய போதும் அலி சப்ரி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இத்திரதிஸ்ஸவை சந்தித்து உதவி கோரிய போதும் அவர் ராஜபக்சக்களை ஆட்சிக்கு கொண்டு வர கடும் பிரயத்தனம் செய்தவர் என்ற அடிப்படையில் அவரும் கைவிரித்து விட்டார்.

நீதிமன்றத்தை மூடி பூரண ஏகாதிபதித்துவ இராணுவ ஆட்சி வரை...   

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் முறையிடுவதற்கு நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு தற்போது கிடையாது. உயர்நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தின் காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால் கோத்தாபய ராஜபக்சவின் பொலிஸ் இராணுவ பகுதி நிர்வாகம் தற்போது முழுமையான ஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி படிப்படியாக சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க இல்லாது போனாலும் இலங்கையில் அது இல்லாது போகுமா என்பது சந்தேகமே. காரணம் ராஜபக்ஷக்களுக்கு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வதற்கு கொரோனா வைரஸ் முக்கிய ஆயுதமாக இருக்கிறது. 

இறுதியில் ஒன்றை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இன்று இராணுவ அரசாங்கம் ஒன்றை கோரும் ராஜபக்ச வாதிகளுக்கு இறுதியில் அதுவே கிடைக்கும். அதன் பின்னர் எந்த ஒரு கோரிக்கையை முன்வைக்கவும் ராஜபக்ச வாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் சந்தர்ப்பமே கிடைக்காது. 

சந்திரபிரதீப் 

---------------------------
by     (2020-04-17 15:56:55)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links