(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 17 பிற்பகல் 11.50) கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய பணி பரிசோதனை செய்வது பரிசோதனை செய்வது பரிசோதனை செய்வது.. என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வரும் நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று உள்ளதா என்று செய்யப்படும் PCR பரிசோதனை கூட அரசியல் மயமாக்கப்பட்டு உள்ளதாக லங்காஈநியூஸ் இணையத்திற்கு தகவல் வந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்கின்ற போதிலும் இலங்கையில் மிகக் குறைவான பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகிறது. நாளொன்றுக்கு இலங்கையில் 230 பேர் மாத்திரமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஒரு வாரத்தின் பின்னர் நாளொன்றுக்கு 3000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என அரசாங்கம் அறிவித்த போதும் இன்று ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் 230 பேருக்கே நாளாந்தம் பரிசோதனை செய்யப்படுகிறது. ஜனவரி 20ஆம் திகதி முதலாவது கொரோனா தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இது வரையான காலப்பகுதிக்குள் 4,748 பேருக்கு மாத்திரமே பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கும் நிலையில் நேற்றைய தினம் சுமார் 230 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும் அதில் 206 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் வெளிநபர்கள் 24 பேருக்கு மாத்திரமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஜனாதிபதி அலுவலக உத்தியோகத்தர்கள் 206 பேரின் இரத்த மாதிரிகளை பொரளை (MRI) வைத்திய பரிசோதனை நிறுவனத்திற்கு இராணுவத்தினரே கொண்டுவந்து கையளித்துள்ளனர்.
இவ்வாறான நிலை தொடர்ந்தால் நாளைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கானவர்கள் நாளை மறுதினம் பசில் ராஜபக்ஷவை சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான நபர்கள் அதன்பின்னர் சமல் ராஜபக்ஷவை சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான நபர்கள் என ராஜபக்ச பரம்பரையில் உள்ளவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அமைச்சர்களை சுற்றியுள்ள நபர்கள் பொலிஸ் மற்றும் இராணுவ பிரதானிகளை சுற்றியுள்ள நபர்கள் என பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு நாட்டினுடைய நிலை அதல பாதாளத்துக்கு சென்றுவிடும்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் ராஜபக்சக்கள் மற்றும் அவர்களை சுற்றியுள்ள விஐபிகளுக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டால் இந்த தொற்று மேலும் மேலும் அதிகரித்துச் செல்லும். இவ்வாறான அத்தியாவசிய பரிசோதனைகளை செய்யாது நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகவில்லை என பொய் கணக்குகள் கூறுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும். இதனால் ஏமாற்றப்படுவது வைரஸ் அல்ல நாட்டு மக்களே.
இதேவேளை கொரோனா பரிசோதனை செய்யப்படும் 20,000 கருவிகள் சீனாவில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டதாகவும் பின்னர் மீண்டும் ஒரு தொகுதி இலவச பரிசோதனை உபகரணங்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் சீனாவில் இருந்து அனுப்பப்படும் இந்த பரிசோதனையை உபகரணம் தரம் குறைந்தது என உலகம் முழுவதும் ஒரு பொதுவான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா தொடக்கம் இந்தியா வரை இந்த விமர்சன குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் பரிசோதனை உபகரணங்கள் 30% மாத்திரம் தரமானவை என இங்கிலாந்து பகிரங்கமாக அறிவித்து உள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பிபிஇ PPE எனப்படும் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும் அவற்றுள் சுமார் 60,000 பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவின் தரத்திற்கு அருகில் கூட கொண்டு வர முடியாது என இந்திய சுகாதார தரப்பினரும் மறுத்துள்ளனர். இந்தியா போன்ற நாடுகள் இவ்வாறு கூறினால் வேறு என்ன சொல்வது?
---------------------------
by (2020-04-18 16:25:47)
Leave a Reply