(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 23 பிற்பகல் 10.00) இலங்கை கடற்படை வீரர்கள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த அனைத்து கடற்படை வீரர்களும் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர் கடந்த 17ஆம் திகதி பொலனறுவையில் உள்ள சுகுதிபுர என்ற பிரதேசத்தில் தனது வீட்டுக்குச் சென்று பின்னர் கடற்படை முகாமுக்கு திரும்பியதும் அவரோடு தொடர்பு வைத்திருந்த கடற்படை சிப்பாய்களுக்கு இவ்வாறு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெளிசர கடற்படை முகாமில் சுமார் 60 கடற்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 43 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து வெலிசர கடற்படை முகாம் முற்றாக இழுத்து மூடப்பட்டுள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் 43 பேருக்கு மேலதிகமாக நாட்டின் வேறு பகுதிகளில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 51 தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் ஒரேநாளில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகளவான கொரோனா நோயாளர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் இதுவரை 381 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனாலும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் படி வெலிசர கடற்படை முகாமில் 30 கடற்படை சிப்பாய்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் தொகை 368 ஆகும். வழமை போலவே எஞ்சி உள்ளவர்களை நாளைய தினம் சேர்த்து அரசாங்கம் அறிவிக்கும்.
கடற்படை சிப்பாய்கள் அதிகமானோர் ஒரே தடவையில் இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு வேலை (குழப்பம்) செய்யும் வீரரான ஜனாதிபதி மற்றும் கொரோனா வீரரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரின் கவனமற்ற செயல்பாடே காரணம் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். அபாயம் மிகுந்த பகுதிகளில் கடமை நிமித்தம் அனுப்பப்படும் இராணுவ வீரர்கள் கடமை முடிந்து மீள அவர்களது முகாம்களுக்கு வரும்போது அவர்கள் பராமரிப்பு செயற்பாடுகளுக்கோ அல்லது கொரோனா பரிசோதனைக்கோ உட்படுத்தப்படும்தில்லை. அவ்வாறு செய்யாமல் சிப்பாய்கள் முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் எதிர்காலத்தில் இந்நிலைமை தொடர்ந்தால் மேலும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என இராணுவத்தினர் பலர் தெரிவிக்கின்றனர்.
---------------------------
by (2020-04-23 18:11:35)
Leave a Reply