(லங்கா ஈ நியூஸ் 2020 மே 02 முற்பகல் 06.00) கொழும்பு குணசிங்கபுர பகுதியில் இருந்து பிடித்து பராமரிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு எவ்வித பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இன்றி கொரோனா என சந்தேகிக்கப்படும் மரணங்கள் வைரஸ் மற்றும் வலிப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக போலி ஆவணங்களை தயாரித்து கொரோனா மரண நபர்களை போன்று பொலித்தீன் உரையில் மூடி எரியூட்டி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்தி வந்துள்ளது.
முல்லைத்தீவு இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்புக்கு நிலையத்தில் கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட யாசகர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி 4 யாசகர்கள் உயிரிழந்த நிலையில் மே மாதம் முதலாம் திகதி இரண்டு யாசகர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆறு வாசகர்களின் சடலங்களும் விமானப் படையினரால் முல்லைத்தீவு முள்ளியவளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதலாம் திகதி உயிரிழந்தவர்களில் ஒருவர் 80 வயதான சின்னத்தம்பி கணநாதன் எனவும் மற்றைய நபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பி.ஜி மார்டின் எனவும் தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் முப்பதாம் திகதி இரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இரண்டாம் நபர் முதலாம் திகதி மாலை 6 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகம் இருந்துள்ள நிலையில் இவர்களது மரணம் வலிப்பு மற்றும் வைரஸ் காரணமாக ஏற்பட்டது என ஆவணம் தயாரிக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை போலீசாருக்கு விமானப் படையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
முப்பதாம் திகதி உயிரிழந்த நால்வர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை. இவர்களுக்கு அடையாள அட்டை இருக்கவில்லை என விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தின் முதல் பகுதியில் கொழும்பிலிருந்து யாசகர்கள் அகற்றப்பட்ட போது 360 பேர் அழைத்துச் செல்லப்பட்டதாக அப்போது ஊடக செய்திகள் வந்த போதும் தற்போது முல்லைத்தீவு முகாமில் 240 யாசகர்களே உள்ளனர்.
இதேவேளை லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைத்துள்ள தகவல்படி வவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 19 பேர் சிகிச்சை பெறுவதாக தெரியவருகிறது.
---------------------------
by (2020-05-03 19:02:42)
Leave a Reply