(லங்கா ஈ நியூஸ் 2020 மே 19 பிற்பகல் 07. 40) இராணுவத்தினருக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் செயல்படும் சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அறிவித்தார். யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகே இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இராணுவ வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய இடம் மற்றும் கௌரவத்தை இல்லாது செய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எனது அரசாங்கத்தின் கீழ் இந்த நாட்டின் இராணுவ வீரர்களின் கௌரவத்தை எப்போதும் பாதுகாப்பேன் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அவர்களுடைய உரிமைகளை எப்போதும் பாதுகாக்க வேண்டியது தேசிய பொறுப்பாகும். உலகில் பலமான நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளின் தலைவர்கள் கூட தனது நாட்டு இராணுவ வீரர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க இடமளிக்க முடியாது என உறுதியாக தெரிவித்திருக்கும் நிலையில் எம்மைப் போன்று சிறிய நாட்டில் இராணுவ வீரர்களை அனாவசியமாக பாதிப்புக்கு உட்படுத்தும் எந்தத் திட்டத்திற்கும் நான் இடமளிக்க மாட்டேன். அந்த வகையில் எமது நாட்டிற்கு அசாதாரணம் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்து செயல்படுமாயின் அந்த நிறுவனங்கள் அல்லது அமைப்புகளில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை நீக்கிக் கொள்ள நான் ஒருபோதும் பின் நிற்க மாட்டேன்."
மிருசுவில் கூட்டுக் கொலைக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த விடயத்தை மாத்திரம் ஆங்கில மொழியில் கூறியமை தான் யார் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் நோக்கத்திற்காக இருக்கலாம்.
கொரோனா தொற்றினால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த ஒரே நாடாக இலங்கை காணப்படுகிறது. இந்த நிகழ்விற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த கடற்படை வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. அப்படி இருந்த போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இந்த நிகழ்வில் பாதுகாப்பு முகக் கவசம் மற்றும் கையுறை அணியாது கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பாதுகாப்பு முகக் கவசம் அணிந்திருந்தனர்.
யுத்தம் காரணமாக தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் யுத்தம் காரணமாக எதிரிகளின் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு இலக்காகி மயிரிழையில் உயிர் தப்பிய யுத்தத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோன்று ஜனாதிபதி தன்னுடைய உரையில் இவர்களது பெயரைக்கூட நினைவுபடுத்த வில்லை என்பது ஒரு ஜனாதிபதி செய்திருக்கக்கூடாத விடயமாகும்.
இதேவேளை அண்மையில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்துறைக்கு பொறுப்பான நிறுவன பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தான் சிரேஷ்ட அரச நிர்வாக அதிகாரிகளுக்கு பதிலாக இராணுவ அதிகாரிகளை பதவிகளில் அமர்த்த உள்ளதாகவும் தனது கொள்கைக்கு எதிரான நபர்கள் இருந்தால் அரச சேவையில் இருந்து விலகிக் கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
---------------------------
by (2020-05-19 18:29:47)
Leave a Reply