~

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து அவரது மகனுக்கு முன்னுரிமை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 27 பிற்பகல் 09.45) இடைக்கால அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஆகிய ஆறுமுகன் தொண்டமான் நேற்று இரவு உயிரிழந்ததை அடுத்து வெற்றிடமாக நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் பட்டியல் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர்சபை கூடி எடுத்த முடிவு பொதுஜன பெரமுன கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட பின் பொதுஜன பெரமுன அதனை ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்ததாவது,

"தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்மிடம் பல தடவைகள் கூறியிருந்தார்.

இதன்படி காங்கிரஸின் உயர்மட்டக்குழு இன்றுகூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆராய்ந்தது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்துக்கு ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலமான பின்னர் கட்சி தலைமைத்துவம் சுமார் ஒருவருடம் வரை வெற்றிடமாக இருந்தது. எனவே, தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சியின் தொண்டர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அது சம்பந்தமாக தேசிய சபை முடிவெடுக்கும்.

தலைவரின் மறைவையடுத்து இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் எம்மை இன்று அழைத்திருந்தார். இதன்படி சென்றோம். பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் ஜீவன் தொண்டமானை போட்டியிட எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தோம். சிறந்த முடிவு என பிரதமரும் கூறினார்.

ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கும்." - என்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தனது 55 வயதில் காலமானார். எதிர்வரும் 29ஆம் திகதி அவரது 56 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருதய நோய் காரணமாக தலங்கம கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார். வீட்டில் திடீரென கீழே விழுந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலங்கம கொஸ்வத்தை வைத்தியசாலையில் அவசர இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்க எவ்வித வசதிகளும் இல்லை. அது தற்போது கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வைத்தியசாலை ஆகும். ஆனாலும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி கூட அங்கு இல்லை. கொரோனா தொற்று உள்ளவர்கள் கூட திடீர் இருதய நோயினால் உயிரிழக்கின்றனர்.

ஆனாலும் ஆறுமுகன் தொண்டமானுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை.

ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

---------------------------
by     (2020-05-27 18:10:15)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links