(லங்கா ஈ நியூஸ் 2020 மே 27 பிற்பகல் 11.00) இலங்கையில் சுமார் இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அதிகரித்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி மாத்திரம் 137 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 27 ஆம் திகதி சுமார் 150 கொரோத் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,500 கிட்டியுள்ளது.
27 ஆம் திகதி கடற்படையைச் சேர்ந்த 55 வீரர்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெலிசர இராணுவ முகாமில் இருந்து யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 125 கடற்படை வீரர்கள் வெலிசர கடற்படை முகாமில் இருந்து யாழ்ப்பாணத்தில் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதில் 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு வந்துள்ள தகவல்படி கடற்படை முகாமில் உள்ள வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடற்படை அம்புலன்ஸ் வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த அம்புலன்ஸ் வண்டியில் பயணித்த வைத்தியர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்போது வைத்தியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது குறித்து வைத்தியருடன் இணைந்து செயல்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு செயற்பாடுகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் மேல் மாகாண கட்டளையிடும் அதிகாரியின் செயலாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் கட்டளையிடும் அதிகாரியும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடற்படையின் ரங்கல முகாம் கொரோனா தொற்று கொத்துக் கொத்தாக பரவக் கூடிய இடமாக மாறும் அவதானம் இருப்பதுடன் கடற்படை தலைமையகமும் கொத்துக் கொத்தாக கொரோனா பரவக் கூடிய இடமாக மாறக் கூடும் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய கொரோனா பரவல் இடமாக அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் இருந்த நான்காயிரம் கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன் கடற்படை முகாமின் பாதுகாப்பிற்கு மாத்திரம் சில கடற்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் வெலிசர கடற்படை முகாம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோகமான நிலைக்கு காரணம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் சில்வாவின் முட்டாள்தனமான செயற்பாடுகள் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கடற்படைத் தளபதி பியல் சில்வா கடற்படையின் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகாமைத்துவ சபையின் ஆலோசனைகளை புறந்தள்ளி செயற்படுவதனால் இவ்வாறான துரதிஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக கடற்படையின் கொழும்பு கமாண்டர் பதவிக்கு கேப்டன் கத்திரி ஆராய்ச்சி நியமிக்கப்பட்டமை மற்றும் கேப்டன் சுகததாச வெலிசர உள்ளிட்ட 4 கடற்படை முகாம்களுக்கு கமாண்டராக நியமிக்கப்பட்டமைக்கு கடற்படையின் முகாமைத்துவ சபை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கத்திரி ஆராய்ச்சி என்பவர் காலை தொடக்கம் மாலை வரை குடி போதையில் இருப்பவர். சுகததாச என்பவரின் திறனற்ற செயற்பாடுகளால் அவர் இருந்த பதவிநிலை குழுவிலிருந்து (Relegated ) ஒரு நிலை தரம் குறைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கடற்படை முகாமையேனும் ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாதவர் என்று நிலையில் 4 கடற்படை முகாம்கள் இவருக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வெலிசர கடற்படை முகாம் நிலைக்கு இதுவே காரணம் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடற்படையை குழப்பி அடித்த பாஸ்கட் போல் வீரர் வைஸ் அட்மிரல் பியல் சில்வா ஜூலை மாதம் 13 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார். ஆனால் அவர் மேலும் 6 மாதங்களுக்கு சேவை நீடிப்பை எதிர்பார்த்து உள்ளார். அட்மிரல் பியல் சில்வாவிற்கு ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டால் இலங்கை கடற்படையில் அவருக்கு அடுத்தபடியாக சிரேஷ்ட நிலையில் உள்ள நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னரே செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவார். அதன் பின்னர் கடற்படை தளபதியாக ரியல் அட்மிரல் கப்பில சமரவீர நியமிக்கப்படுவார். அவர் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொடவின் கையால் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கபில சமரவீரவை கடற்படைத் தளபதியாக்கும் முயற்சியில் வசந்த கரன்னாகொட ஈடுபட்டுள்ளார். கபில சமரவீர 2021 ஆம் ஆண்டில் ஓய்வுபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-05-28 18:54:05)
Leave a Reply