~

ஜனநாயகம் கதறி அழுது கொண்டிருக்கும் போது உயர் நீதிமன்றம் கொடுத்த மிக மோசமான தீர்ப்பு..!

விமல் தீரசேகரவின் ஆய்வு

(லங்காஈநியூஸ் 2020 ஜூன் 4 முற்பகல் 08.45) எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட இருந்த பொதுத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் காரணங்கள் இன்றி கடந்த 2 ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டன. இது தொடர்பில் அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள் மற்றும் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டவையாகும். இது தொடர்பான உண்மை நிலையை எடுத்துக் கூற வேண்டியது எமது பொறுப்பாகும்.  

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய, புவனேகா அழுவிஹரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய ஐந்து நீதியரசர்கள் குழு முன்னிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் பரிசீலனை செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா என்பது தொடர்பில் பல தரப்பு கருத்துக்கள் கேட்கப்பட்டதே தவிர மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறவில்லை. அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் மிக நீண்ட நாட்களாக ஆய்வு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இறுதியில் குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்ய நீதியரசர்கள் குழு தீர்மானித்தது. மனுக்களை விசாரணை செய்யாது தள்ளுபடி செய்வதற்கான எவ்வித காரணங்களையும் நீதியரசர்கள் குழு அறிவிக்கவில்லை என்பது அதி விசேட அம்சமாகும். காரணம் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று காரணங்கள் அறிவிக்கப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். 

சட்டத்தரணி சரித்த குணரத்ன, ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித மத்தும பண்டார, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் புதிய இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளின் படி பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என கோரி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறான பிரச்சாரங்களை செய்வது உண்மையை திரிபுபடுத்தும் செயலாகும். உண்மையான நிலை இதோ. 

குழப்பத்தின் உண்மை பின்னணி...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவர் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். அதன் அடிப்படையில் ஏப்ரல் 25ஆம் திகதி புதிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு திகதி அறிவித்தது. இந்த காலகட்டத்திலேயே கொரோனா வைரஸ் நாட்டில் பரவ ஆரம்பித்தது. இந்த தொற்று நோய் சூழலில் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என கருதிய தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் மாதம் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என திகதி மாற்றம் செய்தது. ஆனாலும் இந்த இடத்தில் அரசியல் யாப்பு மீறல் இடம்பெறுகிறது. அதுதான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் ஒன்று மூன்று மாதங்களுக்கு மாத்திரமே செயல்பட முடியும் எனவும் அந்த காலத்திற்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசியல் யாப்பின் 70 (5) (அ) பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதம் இரண்டாம் திகதி தொடங்கி ஜூன் மாதம் இரண்டாம் திகதி வரையில் மூன்று மாதங்கள் நிறைவு பெறுகின்றன. அதாவது உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த ஜூன் 2 ஆம் திகதியுடன் மூன்று மாதம் நிறைவடைந்துள்ளது. எனவே ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்தினால் அதுவும் அரசியல் யாப்பு மீறலாகும்.

அரசியல்யாப்பு மீறப்பட்டது மாத்திரமன்றி ஜூன் மாதம் 2 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றம் ஒன்று இல்லாமல் முன்னோக்கி செல்லவும் முடியாது. அவ்வாறு இருந்தால் அது ஒரே ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே இருக்க முடியும். அரசியல் யாப்பின் 70 (7) பிரிவுக்கு அமைய மாத்திரமே இருக்க முடியும். இவ்வாறான கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் நாட்டின் ஜனநாயகத்தை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல் யாப்பில் குறித்த சரத்து உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் 70 (7) சரத்து இதோ. 

"பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றம் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னராகக் கூட வேண்டும் என்பதை அவசியம் ஆக்குகின்ற அத்தகைய இயல்பினதான நெருக்கடி நிலை ஒன்று எழுந்துள்ளது என ஜனாதிபதி திருப்திபட்டால் அவர் கலைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை பிரகடனத்தின் மூலம் அத்தகைய பிரகடன தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு முற்படாத ஒரு தேதியில் கூடுமாறு அழைக்கலாம் என்பதோடு அத்தகைய பாராளுமன்றம் அந்த நெருக்கடி நிலை முடிவுற்ற உடனும் அல்லது பொதுத் தேர்தல் முடிவுற்றவுடனும் இவற்றுள் எது முன்னர் நிகழ்கின்றதோ அது முடிவடைந்தவுடனும் கலைக்கப்பட்டு விடும்"

ஆனாலும் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று நிலைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது என 'ஜனாதிபதி திருப்திப்பட்டால்' மாத்திரமே இந்த சரத்தினை செயல்படுத்த முடியும். ஆனால் பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான எவ்வித தேவைகளும் தனக்கு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். 

எனவே ஜூன் மாதம் இரண்டாம் திகதிக்கு பின்னர் வரும் ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டாலும் அதன் பின்னர் ஒரு திகதியில் தேர்தல் நடத்தப்பட்டாலும் "பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்கள் செல்வதற்கு முன்னரான ஒரு திகதியில் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்" என்ற இலங்கை அரசியல் யாப்பின் 70(5) (அ) பிரிவு மீறப்பட்டுள்ளது. 

உண்மையான குழப்பம் என்ன?

ஜனாதிபதியும் பாராளுமன்றத்தை அரசியல் யாப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே கலைத்துள்ளார். தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் தேர்தல் நடத்தப்பட முடியாமல் போனதும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் ஆகும். பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் கூட்டாமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் அதிகாரங்கள் உள்ளன. 'ஜனாதிபதி திருப்திப்பட்டால்' என்று அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள வாக்கியத்தின் அர்த்தம் 'ஜனாதிபதி நினைத்தால்' என அர்த்தமாகும். ஆனாலும் ஜூன் 2ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தொடர்ந்தும் இடைக்கால அரசாங்கத்தின் மூலம் ஆட்சியை நடத்திச் சென்றால் அது அரசியல் யாப்பை மீறும் விடயமாக மாத்திரம் அல்லாமல் ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டி புதைக்கும் விடயமாகவும் அமையும். காரணம் ஜூன் மாதம் 2 ஆம் திகதியின் பின்னர் ஒரு மணித்தியாலம், ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் அல்லது ஐந்து வருடங்கள் ஆட்சி நடந்தாலும் இந்த யாப்பு மீறல் ஜனநாயக மீறலே தொடரும். அதனால் நாட்டினுடைய அதி உயர் அரசியல் யாப்பு மீறப்படுவது ஜனநாயகத்திற்கு விழும் பாரிய அடியாகும். 

ஆகவே மேற்கூறிய மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்ல காரணம் இந்த குழப்ப நிலைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே. அதற்கு மாறாக ஊடகங்கள் கூறுவது போல தேர்தலை போடுவதற்காக அல்ல. 

குழப்பத்திற்கு தீர்வு கிடைத்ததா?

இறுதியில் ஜூன் மாதம் இரண்டாம் திகதி உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழு காரணங்கள் இன்றி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதிலிருந்து தள்ளுபடி செய்ததன் மூலம் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்ததா? இல்லை ஒரு போதும் இல்லை. 

ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் இவ்வாறு குழப்ப நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில் அதனை தீர்த்துக் கொள்வதற்காக அதற்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக அதிஉச்ச நிலை நிறுவனமான உயர் நீதிமன்றத்திற்கு செல்லும்போது இவ்வாறான ஏமாற்றம் அடையக்கூடிய தீர்ப்பு வழங்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டினுடைய சட்டம் மற்றும் நியாயம் குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா? உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புக்கான காரணத்தை கட்டாயம் அறிவிக்க வேண்டும். அப்படி இல்லையேல் 5 நீதியரசர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதன் காரணம் என்ன? அத்துடன் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவை மனுதாரர் தரப்பில் அல்லாமல் பிரதிவாதிகள் தரப்பினரே கேட்டிருந்தனர். பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் செயல்பட்டபோது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் காணப்பட்ட குழப்பம் தொடர்பான பிரச்சினைக்கு அச்சமின்றி காரணத்துடன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

காரணம் கூறாமல் இருந்தமை 'உண்மை காரணத்தை' சொல்ல முடியாது என்பதாலா? 

"நீங்கள் காரணம் சொல்லாமல் இருந்தால் அதன் அர்த்தம் நீங்கள் உண்மையான காரணத்தை சொல்லாமல் இருப்பதாகும்" என்று நிர்வாக அடிப்படை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு ஏற்ப பிரதம நீதியரசர் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட குழு மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை கூறாமல் இருந்தமை 'உண்மையான காரணத்தை' வெளியிட முடியாததனாலாகும். அது அவ்வாறு என்றால் 'உண்மையான காரணம்' என்ன என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வர். அந்த விளக்கம் விரைவில் வெளிவரும். அதற்கு முகக் கவசம் அணிவிக்க முடியாது. அது சுயாதீன நீதிமன்றத்திற்கு கொரோனாத் தொற்றை விட மோசமான நிலையை ஏற்படுத்தும். 

தற்போதும் அவ்வாறு மறைக்கப்பட்ட கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரதம நீதியரசரின் பாடசாலை நண்பரான ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஒருவர் பிரதம நீதியரசரை சந்தித்து தீர்ப்பை 'தீர்மானித்தார்' என்று கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் திட்டமிடப்பட்டிருந்த குழுவினர் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சி வெளியிட்டனர். இதிலிருந்து குறித்த குழுவினருக்கு ஏற்கனவே தீர்ப்பு குறித்து தெரிந்து உள்ளமை புலப்படுகிறது. இவ்வாறு ஊகிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்துவது சுயாதீன நீதிமன்றத்தின் சுகாதாரத்துக்கு சிறந்ததல்ல. 

மனுக்கள் விசாரணை செய்யப்பட்டபோது சிரேஷ்ட சட்டத்தரணி கிரிஷ்மல் வர்ணசூரிய மற்றும் நீதியரசர்கள் குழுவின் செயற்பாடுகள் மக்களின் அனுமானத்திற்கு ஏதுவாக அமைந்தன. வேறு நோக்கத்திற்காக மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த போதும் சட்டத்தரணி கிரிஷ்மல் அரசியல் யாப்பின் 70 (7) சரத்தின் கீழ் பாராளுமன்றத்தை கூட்டுமாறு உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் அவர் மனுதாரருக்கு சாதகமற்ற வகையில் பரஸ்பர கருத்துக்களை கூறுவதாக தெரிவித்து விவாதிப்பதில் இருந்து நீதியரசர்கள் குழுவால்  நிறுத்தப்பட்டார். அதன்பின்னர் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்த சட்டத்தரணி கிறிஸ்மல் தனது இரண்டு தசாப்த நீதிமன்ற அனுபவத்தில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதில்லை என தெரிவித்திருந்தார். இவை காரணமே இல்லாமல் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் குழுவின் 'உண்மை காரணம்' தொடர்பில் நாட்டு மக்கள் ஊகித்துக் கொள்ளக்கூடிய காரணிகளாக அமைந்தன. 

தாங்களே கழுத்தை இறுக்கிக் கொண்ட மோசமான தீர்ப்பு..

இந்த மனுக்கள் காரணங்கள் அறிவிக்காமல் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏற்படுவது என்ன? அரசியல் யாப்புக்கு மாறாக பாராளுமன்றத்தை கணக்கில் எடுக்காது நிறைவேற்று அதிகாரத்தின் சார்பில் செயல்பட நீதிமன்றத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டு மக்களின் இறைமையை செயல்படுத்தக் கூடிய மிக முக்கியமான 3 பிரிவுகள் உள்ளன.  நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் அவையாகும். இதில் இரண்டு ஒன்றை மீறி செயல்பட அனுசரணை வழங்குவது மிகவும் ஆபத்தான விடயம். 

மற்றுமொரு பக்கம் ஐந்து நபர்கள் அடங்கிய நீதியரசர்கள் குழு தங்களுக்கு நீதிமன்ற பலத்தை வழங்கும் அரசியல் யாப்பை கழுத்து நிறுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்கு அதற்குத் தேவையான அதிகாரத்தை வழங்குவது அரசியல் யாப்பு என்று சொல்லக்கூடிய பாராளுமன்றம் ஆகும். இதனை அரசியல் யாப்பின் 4 (இ) பிரிவு மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. 

"மக்களின் இறைமை செயல்படுத்தப்படுவதும் அனுபவிக்கப்படுவதும் நிறுவப்படும் நீதிமன்றத்தின் ஊடாக 'பாராளுமன்றத்தினால்' செயல்படுத்தப்பட வேண்டும்" என கூறப்படுவதற்கு அமைய தெரிவிக்கப்படுவது என்னவென்றால் நீதிமன்றத்திற்கு மக்களின் இறைமையை செயல்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் இருந்து அதிகாரம் வழங்கப்படுகிறதே தவிர நிறைவேற்று அதிகாரத்திலிருந்து அல்ல. அப்படியானால் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழு தமக்கு அதிகாரத்தை வழங்கும் பாராளுமன்றத்தை இல்லாமல் செய்ய தீர்ப்பு வழங்கிய உள்ளமை நிறைவேற்று அதிகாரத்திற்கு அனுசரணை வழங்குவது போலாகும். இது தமது மூச்சை தாமே நிறுத்திக் கொள்வதற்கு சமனான ஒன்றாகும். எனவே இது சாதாரண நிலையை மாற்றி மிக பயங்கரமான நிலையை ஏற்படுத்தக்கூடிய வகையான மோசமான தீர்ப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.  

உயர்ந்த சட்ட நண்பர்களின் வாதம்..

உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் நமது உயர் சட்டம் கற்ற நண்பர்களும் உள்ளனர். இந்தக் குழப்பத்தை நீதிமன்ற வழியில் அல்லாது அரசியல் ரீதியில் தீர்த்துக் கொள்ள வேண்டுமென கூறும் சிலரும் உள்ளனர். காரணம் 'ஜனாதிபதிக்கு திருப்திபட்டால்' என்ற கருத்து அரசியல் யாப்பின் 70 (7) பிரிவில் கூறப்பட்டுள்ளதால் நீதிமன்றத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது என கூறுகின்றனர். 

ஆனால் மெண்டாமுஸ் கட்டளை கோரி நீதிமன்றம் செல்வது 'திருப்திபடுதல்' செயற்படுத்தப்படாவிட்டால் அதனை செயற்படுத்த கோரியே ஆகும். இங்கு ஜனாதிபதிக்கு எதிராக மெண்டாமுஸ் கட்டளை கோரி கிடைக்காவிட்டால் செய்ய வேண்டியது மனுதாரர்கள் கூறியது போல அரசியல் யாப்பில் உள்ள ஏற்பாடுகளின் படி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவின் மூலம் அந்த 'திருப்திப்படுத்தலை' செயல்படுத்திக் கொள்வதாகும். ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு இதனை புறந்தள்ளி உள்ளது. 

உயர் சட்ட நண்பர்கள் கூறுவது போல இதனை நீதிமன்ற வழியில் அல்லாது அரசியல் இணக்கப்பாட்டின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் யாப்பை வியாக்கியானம் செய்யக்கூடிய அதிகாரத்தை உயர் நீதிமன்றமே கொண்டுள்ளது. யாப்பு என்பது அரசியல் எழுத்து வடிவமே தவிர மன்னராட்சி சட்டம் கிடையாது. இதனை வியாக்கியானம் செய்வதென்பது அரசியல் செயல்பாடு தவிர அரசியலுக்கு அப்பாற்பட்ட செயல்பாடும் கிடையாது. எனவே இவர்கள் கூறும் அரசியல் ரீதியான இணக்கப்பாடு என்பது இங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு அந்த நிவாரணத்தை வழங்க தவறியுள்ளது. 

சென்றி மீட்டர் மூழ்கினாலும்  கிலோ மீட்டர் மூழ்கினாலும் ஒன்றுதான்.. 

இறுதியில் ஒன்று தான் கூற முடியும். உயர் நீதிமன்றத்தின் மிக மோசமான தீர்ப்பு காரணமாக நாட்டின் ஜனநாயகம் மூக்குக்கு மேல் ஒரு சென்ரி மீட்டர் மூழ்கியுள்ளது. சென்ரி மீட்டர் மூழ்கினாலும் கிலோ மீட்டர் அளவு மூழ்கினாலும் முடிவு ஒன்றுதான். 

தனக்கு பிரச்சினை இல்லாத பாராளுமன்றம் இருக்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இவ்வாறான நபர் பாராளுமன்றம் இல்லாமல் ஆட்சியை கொண்டு செல்ல மிகவும் ஆவலுடன் இருப்பார். ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்த 69 லட்சம் மக்கள் தற்போதும் 225 பேர் தேவையில்லை ஜனாதிபதி இருந்தால் போதும் என கூவத் தொடங்கி விட்டனர். தனக்கு 'வாக்களித்த மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்' என ஜனாதிபதி நினைக்கக் கூடும். ஆனால் அவர் அதிகாரத்திற்கு வந்தது இராணுவ சூழ்ச்சியினால் அல்ல மக்களுடைய வாக்கினால் ஆகும். அதனால் தற்போது மீதமிருப்பது ஜனாதிபதி பொதுமக்களின் வாக்கினால் மிக விரைவில் பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிரார்த்தனையாகும். அது நடைபெறாவிட்டால் அதற்கு எதிராக போராடுவதை விட ஜனநாயக விரும்பிகளுக்கு வேறு மாற்று வழியில்லை. 

விமல் தீரசேகர 

---------------------------
by     (2020-06-04 17:02:20)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links