(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 12 பிற்பகல் 05.00) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று 12ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி சூடுபட்ட சடலம் கொலையா அல்லது தற்கொலை என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது தற்கொலை என விசாரணை நடத்திய குருந்துவத்த பொலிசார் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய உத்தியான வீதியில் வசிக்கும் 63 வயதுடைய ரஜீவ் ஜெயவீர என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிகாலை ஆறு முப்பது மணி அளவில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்துக்கு அடியில் மில்லி மீட்டர் 9 ரக துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தை பார்க்கும் போது தற்கொலை என தெரிய வருகின்ற போதிலும் கொலை என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சந்தேகத்திற்கான காரணம் குறித்த நபர் அந்த இடத்திற்கு வந்த வாகனம் அங்கு இருக்கவில்லை என்பதுடன் அவருடைய சடலம் காணப்பட்ட இடத்தில் புட்கள் சேதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் யாரேனும் இவரை கொலை செய்து குறித்த இடத்தில் கொண்டுவந்து விட்டுச் சென்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மற்றொரு பக்கத்தில் சுதந்திர சதுக்க வளாகம் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பதால் அங்கு துப்பாக்கி விளையாட்டு போட முடியாது என்பது மற்றுமொரு காரணமாகும். சாதாரண குடிமகனான ரஜீவவிடம் கைத்துப்பாக்கி இருந்ததா என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த ரஜீவ ஜயவீர என்பவர் முன்னாள் பிரபல அரச நிர்வாக சேவை அதிகாரியான ஸ்டான்லி ஜெயவீரன் மகன் என்பதுடன் மற்றுமொரு முன்னாள் பிரபல நிர்வாக சேவை அதிகாரியான நெவில் ஜெயவீரன் சகோதர மகனுமாவார். அவர் எயார் லங்கா நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் ஆவார். அவரது மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
ரஜீவ் ஜெயவீர என்பவர் வெளிநாட்டில் இருந்து இயங்கும் என்று சொல்லப்படுகின்ற ஆனால் இலங்கையின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவினால் கொடுப்பனவு வழங்கப்பட்டு இலங்கையில் இருந்து இயங்கும் ஆங்கில இணையதளம் ஒன்று மற்றும் ராஜபக்ச வாதிகளின் பிரபல ஆங்கில பத்திரிகையான 'தி ஹைலன்ட்' பத்திரிகை போன்றவற்றிற்கு கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் வரவு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டவர் இவர் என்பதுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். நாட்டை குறைந்த மரணத்தின் மூலம் தொற்று நோயிலிருந்து மீட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பாராளுமன்றில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இவர் விமான சேவையின் முன்னாள் முகாமையாளர் என்பதால் இலங்கையில் ஸ்ரீலங்கா விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தகவல்களை வெளியிட்டு வந்தார். அண்மையில் எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்த ரஜீவ, இந்த மோசடிக்கு எரான் விக்ரமரத்ன முழுமையான பொறுப்புக் கூற வேண்டும் என கூறியிருந்தார்.
எனவே ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ரஜுவவின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளமை நியாயமான விடயமே.
இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குறுந்துவத்த போலீசாரின் தகவல்கள் படி நேற்று 11ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் ரஜீவ தெஹிவளையில் வசிக்கும் தனது சகோதரரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி தனது பயண பெட்டியைத் திறக்கும் இரகசிய இலக்கங்களை அனுப்பி அந்தப் பெட்டிக்குள் ஒரு கடிதம் இருப்பதாகவும் அதனை படித்து பார்க்கும்படியும் தெரிவித்துள்ளார். குறித்த கடிதம் ஆங்கில மொழியில் கணனியில் தட்டச்சு செய்யப்பட்டு பிரதி எடுத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் அதில் ரஜீவ தனக்கு உள்ள நோய் குறித்து எழுதியுள்ளதுடன் குறித்த நோய் சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற போதிலும் அது தனக்கு பிரச்சினையாக இருக்கும் என்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடைய சொத்துக்கள் தனது பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டிய முறை தொடர்பிலும் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் தனது கைப்பட எழுதாத கடிதத்தை நபர் ஒருவரின் தற்கொலைக்கான சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியுமா? ரஜுவவின் கையடக்க தொலைபேசியை திருடிய கொலையாளிக்கும் அதிலிருந்து குறுந்தகவல் அனுப்ப முடியும் அல்லவா? இரவு எட்டு முப்பதுக்கு கிடைத்த குறுந்தகவல் தொடர்பில் ஏன் சகோதரர் செயல்படவில்லை? இவ்வாறான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதனால் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு இது கொலையா அல்லது தற்கொலையா என்ற குழப்பத்திற்கு போலீசார் தெளிவான முற்றுப்புள்ளி வைத்து தகவல்களை வெளியிட வேண்டும்.
---------------------------
by (2020-06-13 06:40:52)
Leave a Reply