எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 17 பிற்பகல் 10.30) தேசிய தொல் பொருட்களை பாதுகாப்பதாக விகாரைகள் தோறும் சென்று பத்து விரல்களையும் நீட்டி சத்தியம் செய்து உறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த 'தேசப்பிரிய' மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருள் இடமான பெறுமதிவாய்ந்த சுமார் 700 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டாம் புவனேகபாகு மன்னரின் ராஜ்யசபை மண்டபத்தை கடந்த 14ஆம் திகதி அனைவரும் நித்திரையில் இருக்கும் நள்ளிரவு வேளையில் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கிய செய்தியை தேசிய துக்ககர சம்பவமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போதைய அரசாங்கத்தில் தேசிய தொல்பொருள்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்சவே திகழ்கின்றார். இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றது மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடும் குருநாகல் மாவட்டத்தில் ஆகும். இவ்வாறு உடைத்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ள கட்டிடம் வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருள் இடமாகும். கட்டிடத்தை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மஹிந்த ராஜபக்சவின் நம்பர் வன் எடுபிடிகள் என்பது இன்னுமொரு அம்சம். இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்கு மேலாகியும் சந்தேகநபர்களை கைது செய்யவிடாமல் போலீசாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதால் மஹிந்த ராஜபக்ச இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
இந்த குற்றத்தை செய்தது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மாவட்ட தலைவராக உள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வலதுகை என கருதப்படும் தாமரை மொட்டு கட்சியின் குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ விதாரண ஆவர். இவர் இதற்கு முன்னர் துப்பாக்கியை காட்டி பணம் பறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் என்பதுடன் குறித்த வழக்கு தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவர் எவ்வித கல்வி அறிவு அற்ற நபர் என்பதுடன் முதலில் முச்சக்கரவண்டி சாரதியாக இருந்து பின்னர் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் கப்பம் பெற்ற நபராவார். அண்மையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இணைந்து நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டு கட்சி சார்பில் போட்டியிட்டு குருணாகல் நகர மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
சுமார் 700 வருட கால பழமை வாய்ந்த இரண்டாம் புவனேகபாகு மன்னனின் ராஜசபை கூடிய ராஜசபை மண்டபத்தின் கட்டிடம் குருநாகலில் அமைந்துள்ளது. இரண்டாம் புவனேகபாகு மன்னரின் பின்னர் ஆட்சியில் இருந்த மன்னர்கள் குறித்த கட்டிடத்தை நவீன மயப்படுத்தி பயன்படுத்தி வந்தனர். இலங்கை சட்டத்தின்படி 1815 ஆம் ஆண்டிற்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அதேபோன்று கலாசார அமைச்சரின் வர்த்தமானி அறிவித்தலின் படி நூறு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கட்டிடங்களும் புராதான தொன்மை வாய்ந்த பொருட்களாக பாதுகாக்கப்பட வேண்டும். அப்படியாயின் இந்த கட்டிடம் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு குறித்த திணைக்களத்தால் பராமரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆனால் இந்த கட்டிடத்தின் உரிமையாளராக குருநாகல் நகர சபையை காணப்படுகிறது. இந்த கட்டிடம் தங்குமிட விடுதியாகவும் உணவு விடுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய மேயர் வருவதற்கு முன்னர் குறித்த கட்டிடம் வருடத்திற்கு ஒருமுறை விலை மனு கோரப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு விடுதி நடத்திச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வருடாந்த கூலி நகரசபைக்கு செலுத்தப்பட்டது. இறுதியில் 'சந்தரே' என்ற வர்த்தகர் இந்த கட்டிடத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
கப்பம் பெறும் நபரான துஷார சஞ்சீவ விதாரண மேயராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த கட்டிடத்தை தொடர்ந்து உணவு விடுதி நடத்தி செல்ல வேண்டுமாயின் தனக்கு இரண்டு கோடி ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும் என சந்தரே என்ற வர்த்தகரிடம் கேட்டுள்ளார். அந்த அளவு பணத்தை தன்னால் செலுத்த முடியாது என சந்தரே என்ற வர்த்தகர் கூறியதை அடுத்து நகர மேயர் அவரை விரட்டிவிட்டு கட்டிடத்தை மீண்டும் நகரசபைக்கு பொறுப்பெடுத்து நடத்தி வந்துள்ளார்.
கட்டிடத்தில் உள்ள புராதான பெறுமதி மற்றும் பொருட்களை பரிசோதனை செய்து ஆராய்ச்சி செய்ய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் 15ஆம் திகதி வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் நகரசபை மேயர் துசார சஞ்சீவ என்பவர் புல்டோசர் கொண்டு கட்டிடத்தை புராதான பழமைவாய்ந்த இடத்தை முற்றாக அழித்து தரைமட்டமாக்கி உள்ளார்.
சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்ட பின்னர் நகர மேயர் பல காரணங்களை தெரிவித்து வருகிறார். 16ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நகரசபைத் தலைவர் வீதி அகலப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக குறித்த கட்டிடத்தை அகற்ற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டிடம் இடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 17ம் திகதி வீதி அகலப்படுத்த கட்டிடத்தை உடைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக் கொண்டதால் உடைத்ததாக கூறியுள்ளார். நகரசபைத் தலைவர் கூறும் இந்த இரண்டு நிறுவனங்களும் யாருக்கு கீழே இருக்கிறது என்பதை தேடிப்பார்த்தால் இந்த கட்டட இடிப்பின் பின்னணியில் இருப்பது யார் என்பது தெளிவாகத் தெரியும். நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் உள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கீழ் உள்ளது. ஆனால் மஹிந்தவும் ஜோன்ஸ்டனும் அமைதியாக உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள ஆணையாளர் செனரத் திசாநாயக்க அமைதியாக உள்ளார். (செனரத் திசாநாயக்க குறித்து லங்கா ஈ நியூஸ் வேறு ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தும்) பிரதேசத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி வலயத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி ஆகியோர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு அமைதியாக உள்ளனர். அண்மைக் காலமாக 'தேசப்பிரியர்கள்' என்ற விளம்பரத்தை பிடித்துக் கொண்டு ஆடியவர்களும் அமைதியாக உள்ளனர். மன்னிக்க முடியாத மீண்டும் சரிசெய்ய முடியாத குற்றத்தை செய்த துஷார சஞ்சீவ வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்.
இலங்கை சட்டத்தின்படி (குற்றவியல் சட்ட கோவை மற்றும் பொதுசன சொத்து மற்றும் தொல்பொருள் கட்டளை சட்டத்தின்படி) தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடத்திற்கு சிறிய சேதம் விளைவித்தால் குற்றவாளிக்கு 5 வருட சிறை தண்டனையும் தண்டப்பணமும் அறவிடப்பட்டு தண்டிக்கப்படுவார். ஆனால் இங்கு ஒரு தொல்பொருள் கட்டிடம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை இடித்து பாரிய குற்றத்தை செய்த துஷார சஞ்சீவ என்பவர் இதுவரை கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரிக்கப்படவில்லை. பொது மக்களிடம் இருந்து ஏற்படும் குழப்பத்தை குறைப்பதற்கு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க மகிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார். நேரடியான குற்றங்களுடன் தொடர்புடைய நபருக்கு தண்டனை வழங்குவதை விடுத்து விசாரணை குழு அமைப்பது காலத்தை கடத்தும் செயலாகும். அத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் அது குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது போலாகிவிடும்.
நாட்டின் சட்டத்தை முறையாக பாதுகாப்பதாகவும் நாட்டைப் பாதுகாக்கும் வீரர் தான் எனவும் கூறிக் கொண்டு 69 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 'நான் அமெரிக்கர் இல்லை இலங்கையர்' என்று சான்றிதழ் காண்பிப்பதற்கு பதிலாக செயற்பாட்டில் காண்பிக்க தற்போது சந்தர்ப்பம் வந்துள்ளது. அதுதான் 700 வருடப் பழமை வாய்ந்த புராதன பெருமை பெற்ற கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கிய நபரை உடனடியாக கைது செய்து சட்டத்தை செயல்படுத்துவதாகும். நகரசபை தலைவராக இருந்து கப்பம் பெறும் தாமரை மொட்டு கட்சி நகர சபைத் தலைவரை காப்பாற்றுவதா அல்லது நெஞ்சில் அடித்துக் கொண்டு வீரம் பேசும் இராணுவ பதக்கங்களை விலைக்கு விடுவதா என்பதை கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டாக இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பர்.
---------------------------
by (2020-07-18 19:06:38)
Leave a Reply