(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 20 அதிகாலை 01.30) கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஒரே ஒரு வாக்குறுதியான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது போன்றவற்றை செயல்படுத்துவதற்கு சுமார் 4 வருடங்களாக தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ராஜபக்ச அரசாங்கம் நேற்று (19) நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் போது 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கவும் 20ஆவது திருத்தச் சட்டம் என 'தேசிய' அரசியல் யாப்பை உருவாக்கவும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதிலுள்ள விசேஷமான அம்சம் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ அணியினரே குறித்த திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவு செய்யப்பட்டதுடன் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர் ரமேஷ் பதிறன மற்றும் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களது முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நாராஹென்பிட்டியில் உள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்தாலும் அதில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடம் மாத்திரமே என்ற பிரிவும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் ஐந்து வருடம் என்ற பிரிவும் ஒருவர் இரண்டு முறை மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற பிரிவையும் நீக்காது இருக்க முடிவு செய்யப்பட்டதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தகவல் அறியும் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார்.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது. அதில் அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் மற்றும் குழுக்களின் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதன்பின்னர் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் அக்கிராசன உரை இடம்பெறவுள்ளது. இந்த வருடத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு வரவு-செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்காமல் இடைக்கால நிதி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை கூடிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் குழு கூட்டத்தில் புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவை தெரிவு செய்யவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவை தெரிவு செய்யவும் குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதனை தெரிவு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
ஆளும் கட்சி பிரதம கொரடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
---------------------------
by (2020-08-20 08:28:35)
Leave a Reply