எழுதுவது விசேட எழுத்தாளர்
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 4 பிற்பகல் 01.10) இயேசு உயிர்த்த ஏப்ரல் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது இலங்கையில் வாழும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு மாத்திரமன்றி இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானவர்கள் நிரந்தரமாக உடல் அவயவங்களை இழந்ததோடு இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் இலங்கை அரசியலை புரட்டிப் போடும் மாற்றம் ஏற்பட்டது.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட இருந்த பாரிய அழிவுகளை மோதல்களை தடுத்து நிறுத்திய பெருமை காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை சாரும் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை. நீர்கொழும்பு, துவ, பிட்டபன, மண்குளிய, வெள்ள வீதி போன்றவற்றில் இடம்பெறவிருந்த வெட்டுக் குத்துக்கள் மற்றும் பெரியமுல்ல, கொச்சிக்கடை போன்ற பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த ஒத்துழைப்பு வழங்கியது காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்பது மறைக்க முடியாத உண்மை. அந்த கவுரவத்தை காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு வழங்குவதில் நாம் பின்நிற்கவில்லை.
அதேபோன்று தாக்குதலின் பின்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தை வீழ்த்தி ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வர முன்னிலை பெற்றதும் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்பதை கூறாமல் இருக்க முடியாது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் நாள் ஒன்றுக்கு பல தடவைகள் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்து தாக்குதல் தொடர்பில் நியாயமான விசாரணை இடம்பெறவில்லை என விமர்சித்து வந்தார். அப்போதைய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குரல் கொடுத்து வந்த கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் திடீரென மாயமாகி விட்டார். சுமார் பத்து மாதங்களாக அவர் அமைதியாகவே இருக்கிறார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் கால எல்லை நீடித்துக் கொண்டே செல்கிறது. புலனாய்வு பிரிவினர் தாக்குதல் தொடர்பில் முன்னெச்சரிக்கை தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கினார்களா இல்லையா என்று இதுவரையில் உறுதிப்பட தகவல்கள் வெளியாகவில்லை. விசாரணைஆணைக்குழுவிற்கு வரமுடியாது வேண்டுமானால் வீட்டிற்கு வந்து வாக்குமூலம் பெற்று செல்லுமாறு மைத்திரிபால சிறிசேன கூறியபோது அமைதியாக இருந்தனர். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இதுவரையில் வரவில்லை.
சட்ட நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் வழங்கும் திட்டங்கள் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள அறநெறி பாடசாலை கட்டிட வேலைகள் நிறுத்தப்பட்டு கட்டிட வேலைகளுக்கு கொண்டுவரப்பட்டிருந்த மணல், கல், சீமேந்து ஆகியவற்றை ஒப்பந்தக்காரர்கள் புதிய அரசாங்கம் வந்ததன் பின்னர் எடுத்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் அமைத்துக் கொள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்று லட்சம் ரூபா வழங்க அனுமதி பெறப்பட்டு அதில் முதல் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசாங்கத்தில் ஏனைய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அமைதியாகவே இருக்கிறார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட கட்டுவாபிட்டி பிரதேச கூலி வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை புதிய ஜனாதிபதியும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுமே அறிவர்.
இதனால் கத்தோலிக்க மக்கள் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அண்மையில் தேவத்த பசிலிக்கா தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பாதுகாப்பு மற்றும் போலீஸ் துறை அமைச்சரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இதற்கு சான்றாக அமைவதுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நியாயத் தன்மை குறித்தும் பேசப்பட்டது.
வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அந்த பயனாளிகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வீட்டு இலக்கங்களும் வழங்கப்பட்டு சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் கட்டான பிரதேச சபைக்கு முழுமையான நிதியும் ஒதுக்கப்பட்டது.
அண்மையில் கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திற்கு இரகசியமாக விஜயம் செய்த காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சில அருட்தந்தையர்களை மாத்திரம் அழைத்துக் கொண்டு புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தார்.
தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த கட்டுவாபிட்டி பிரதேச கூலிவீட்டு குடும்பத்தார் கஷ்டத்தில் இருக்கும் போது அருட்தந்தைகளுக்கு இரண்டு மாடி வீடு கொண்ட கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியமை மிக மோசமான செயலாகும்.
இந்த கட்டுரையுடன் தற்போதைய அரசாங்கம் மற்றும் காடினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை ஆகியோர் குப்பைத் தொட்டிக்குள் போட்ட அனுமதி கிடைத்த வீடமைப்பு திட்ட வரைபு இணைக்கப்பட்டுள்ளது.
---------------------------
by (2020-09-04 15:14:49)
Leave a Reply