(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 04 பிற்பகல் 09.35) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தன்னகத்தே வைத்திருந்த ஏகாதிபதித்துவத்தை அதிகரிக்கும் அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமர் மற்றும் பாராளுமன்றத்திற்கு வழங்கி ஜனநாயக நிலையை ஏற்படுத்தவென கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்கி பிரதமரை பிச்சைக்காரனாக மாற்றி அமைச்சரவை பாராளுமன்றம் நீதிமன்றம் என்பவற்றை பொம்மையாக மாற்றி ஜனாதிபதி பதவிக்கு ஜே ஆர் ஜெயவர்தன வசமிருந்த அதிகாரங்களையும் மேவிச் சென்று 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அங்கீகாரம் பெற்று அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டு குறித்த உப குழு ஒரு தடவையேனும் கூடாத நிலையில் 41 பக்கங்கள் அடங்கிய 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சினால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குறித்த நாற்பத்தி ஒரு பக்கங்களையும் ஒரே நாளில் படித்து முடித்த சட்டமா அதிபர் இந்த 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மக்கள் விருப்பத்தை பெற வேண்டிய அவசியம் கிடையாது எனவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் அறிவித்தார். எனவே குறித்த 20ஆம் திருத்தச் சட்டமூல ஆவணம் இரண்டாம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. நேற்று இரவு 'அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம்' என்ற பெயரில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன்மூலம் பிரதமர் என்பவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பத்திற்கு நியமிக்கப்படும் ஒருவராக அல்லாமல் விஜயதுங்க, தி.மு.ஜயரத்ன போன்ற பொம்மை பிரதமர்கள் நியமிக்கப்பட்டமை போன்று ஜனாதிபதியினால் தனக்கு விருப்பமான ஒருவரை பிரதமராக நியமிக்க கூடியவாறு யாப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமருக்கு தனக்குத் தேவையான அமைச்சரவை ஒன்றை தெரிவு செய்துகொள்ள முடியாது என்பதுடன் ஜனாதிபதியினால் அனைத்து அமைச்சர்களும் நியமிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி ஒரு கடிதத்தின் மூலம் அமைச்சர் ஒருவரை உடனடியாக நீக்க முடியும் என்பதோடு அமைச்சர்களுக்கான பொறுப்புகளையும் தான் நினைத்தால் மாற்ற முடியும். அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களை அமைச்சர்களின் விருப்பமின்றி ஜனாதிபதி தான் நினைத்தால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாற்ற முடியும். அமைச்சர்களுக்கான செயலாளர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார் என்பது 20ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர் அல்ல. ஆனால் அவர் அமைச்சரவையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு எத்தனை அமைச்சுப் பதவிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்று காணப்பட்ட சரத்து நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக எந்த ஒரு விதத்திலும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என 20ஆம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசியல் யாப்பில் இல்லாத விடயம் இங்கு உள்ளது. அதாவது ஜனாதிபதி ஒருவர் தான் பதவி வகித்த காலத்தில் செய்த பிழைகள் தவறுகள் அல்லது மோசடிகள் தொடர்பில் அவருடைய ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பின்னர் வழக்கு தாக்கல் செய்ய இருந்த ஏற்பாடு 20ஆம் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது செய்த குற்றங்கள் தொடர்பில் ஒரு காலமும் ஜனாதிபதியாக பதவி வகித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் அரசியல் யாப்பில் புதிய பாராளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னரே அதனை கலைக்க முடியும் என்ற ஏற்பாடு காணப்பட்டது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் புதிய பாராளுமன்றம் நியமிக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்கு பின்னரே ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியுமென ஏற்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் இவை எல்லாவற்றையும் மீறி புதிய பாராளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க கூடிய அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அக்கிராசன உரை தோல்வி அடைந்தாலோ அல்லது வரவு செலவுத் திட்டம் நிதி அறிக்கை போன்றவை தோல்வியடைந்தாலோ பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. வரவு செலவு திட்டம் அல்லது நிதி அறிக்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்படா விட்டால் அதனை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வர முடியும். இரண்டாவது தடவை கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் அல்லது நிதி அறிக்கை தோல்வியடைந்தால் மாத்திரமே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.
19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அமைச்சரவை எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு இருந்த போதிலும் அந்த ஏற்பாடு நீக்கப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதி விரும்பிய அளவு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களை நியமித்துக் கொள்ள முடியும் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 'அரசியல் யாப்பு பேரவை' நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 'பாராளுமன்ற பேரவை' என்ற பெயரில் வேறு ஒரு பொம்மை நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. யாப்பு பேரவையிலிருந்து சுயாதீன உறுப்பினர்கள் மூவரும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளும் புதிய பாராளுமன்ற பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரின் பிரதிநிதி (பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி (பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்) ஆகிய 5 பேர் மாத்திரமே பாராளுமன்ற பேரவையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு கீழ் காணும் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும் போது பாராளுமன்றப் பேரவையின் 'அனுமதி'யைப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. பரிந்துரை மாத்திரமே அவசியம். அதனால் இந்த நியமனமானது ஜனாதிபதியினால் வழங்கப்படும் ரப்பர் முத்திரை போன்றது மாத்திரமே.
பாரிய அளவான விலை மனுக்கள் தொடர்பில் தேவைப்படும் 'தேசிய பயன்பாடுகள் ஆணைக்குழு' மற்றும் அரச ஊழியர்களின் லஞ்ச ஊழல் விடயத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 'கணக்காய்வு சேவை ஆணைக்குழு' ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் செயற்பாட்டிற்கு பாராளுமன்றப் பேரவையின் பரிந்துரை அவசியமில்லை. இவர்கள் அனைவரும் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படுவர்.
அதன்படி பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், கணக்காய்வாளர், சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், அரச சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு போன்ற அனைத்திற்கும் தலைவர்கள் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் ஆணைக்குழுவிடம் காணப்பட்ட போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் மற்றும் அங்கீகரித்தல் ஆகிய அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதிய 20 ஆவது திருத்தச் சட்டத்தில் அபூர்வமான திருத்தமும் உள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கு இருந்த வயதில்லை 35-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஏதேனும் சட்டம் தொடர்பில் வியாக்கியானத்தை கோரும் போது உயர் நீதிமன்றம் அதனை மூன்று நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும்.
அனைவரும் எதிர்பார்த்தது போன்று இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய முடியாது என்று காணப்பட்ட சரத்து நீக்கப்பட்டு இரட்டை குடியுரிமை கொண்ட நபர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்ல முடியும் என 20ஆம் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச் சட்ட வரைவு கீழ்காணும் இணைப்பில் உள்ளது.
http://www.documents.gov.lk/files/bill/2020/9/22-2020_T.pdf
---------------------------
by (2020-09-05 13:18:20)
Leave a Reply