~

20ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் விருப்பம் அவசியம்..!

-கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 13 பிற்பகல் 11. 20) 20ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுவதானால் இலங்கையை மீண்டும் 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதிக்கு கொண்டு செல்கிறது எனலாம். 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவி காலம் ஜனாதிபதியின் பதவி எல்லை மற்றும் தகவல் அறியும் சட்டம் ஆகியன மாத்திரமே எஞ்சி இருக்கும். 

20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கம் பற்றிய சாராம்சங்கள் பல வெளியிடப்பட்டுள்ளன. அதனால் மற்றுமொரு சாராம்சத்தை வழங்காமல் அது ஜனநாயக ஆட்சி முறைக்கு ஏற்படுத்தும் தாக்கம் இடையூறுகள் மற்றும் மக்கள் இறைமைக்கு விடுக்கப்படும் சவால் என்பன பற்றிய விவரித்து அதற்கு மக்கள் விருப்பம் தேவையா இல்லையா என்பதை சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். 

கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா, 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழ் நிர்வாக முறைமையை பாராளுமன்ற ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் யாப்பு ரீதியான ஏகாதிபத்திய ஜனாதிபதி முறைமை என விவரித்திருந்தார். 18வது அரசியல் யாப்பு திருத்தத்துடன் இலங்கையின் ஜனாதிபதி முறைமையை உலகில் வலுவான மற்றும் தவறான ஜனாதிபதி முறைமை இல்லை என்றால் அதில் ஒன்று என காண்பிக்கப்பட்டது. அப்போது 19 ஆவது திருத்தச் சட்டத்தில் பெறப்பட்ட அனைத்து வெற்றிகளையும் வீழ்த்தி 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கப்படுகிறது. 

19ஆவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் பல உள்ளன. அதற்கு காரணம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காமை, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்த வரைபின் வலுவான நிலையை குறைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன ஏற்படுத்திய அழுத்தங்கள் அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டுமாயின் எதிர்க் கட்சியின் பரிந்துரைகளையும் ஏற்க வேண்டும்  என்ற நிர்ப்பந்தம் இருந்தமை ஆகும். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கி அதிகாரமுடைய பாராளுமன்ற முறைமை ஒன்றை ஏற்படுத்துவதே தவிர பின் நோக்கிப் பயணிப்பது அல்ல. 

பாராளுமன்றம் ஜனாதிபதியின் கீழ்.. 

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பாராளுமன்றம் என்பது ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்திச் செல்லப்படும் நிறுவனமாக மாறி விடும். 2004 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவான பெரும்பான்மை பாராளுமன்றத்தில் இருந்த போதும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததை உதாரணமாக கொள்ள முடியும். இங்குள்ள ஒரே ஒரு கட்டுப்பாடு பாராளுமன்றத்தை ஐந்து வருடங்கள் செல்வதற்கு முன்னர் கலைக்க வேண்டுமாயின் புதிய பாராளுமன்றம் ஒரு வருடத்தை கடந்திருக்க வேண்டும் என்ற ஏற்பாடாகும். முன்னர் பாராளுமன்றம் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்திருக்கும் ஆனால் புதிய பாராளுமன்றம் முதலாவதாக கூட்டப்படும் தினத்திற்கு மறுநாளே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை 70 (1) சரத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. 

மீண்டும் தபால்கார பிரதமர்.. 

ஆர் பிரேமதாச அவர்கள் பிரதமராக இருந்த போது 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழ் தான் ஒரு தபால்காரர் போல எனக் கூறியிருந்தார். ஆனால்19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்ற அதிகாரமுடைய ஒருவராக பிரதமர் காணப்படுகிறார். 

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் மீண்டும் தபால்காரர் ஆக மாற உள்ளார். எந்த ஒரு நேரத்திலும் பிரதமரை அகற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கும். அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. பிரதமரிடம் ஆலோசனை பெறாது கலந்துரையாடல் செய்யாது அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதி வசம் இருக்கும். அமைச்சர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொறுப்புகள் தொடர்பில் தீர்மானிக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதி வசம் இருக்கும். 

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தற்போதுள்ள ஏற்பாடுகள் மற்றும் பிரதமரை பலவீனப்படுத்தும் ஏற்பாடுகள் ஊடாக பாராளுமன்றம் கடுமையான பலவீனப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படும். மக்களின் இறைமையை செயற்படுத்தும் உயரிய நிறுவனமான பாராளுமன்றத்தை பலப்படுத்துவதன் மூலம் மக்களின் இறைமைக்கு பங்கம் ஏற்படுவதால் முன்வைக்கப்பட்டுள்ள யாப்பு திருத்த யோசனைகள் தொடர்பில் 'மக்கள் விருப்பம்' பெறப்பட வேண்டியது அவசியமாகும். 

ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப நியமனம்.. 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மீண்டும் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு சபையின் ஊடாக உயர் நீதிமன்றம் முக்கிய பதவிகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு ஆகியவற்றுக்கான நியமனங்களின் போது தேசிய இணக்கம் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டது. அதில் அரசாங்கம் எதிர்க்கட்சி அதேபோன்று சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்பட்டது.  ஜனாதிபதியின் பிரதிநிதி அங்கே உள்ளார். அரசியல் தொடர்பு அற்ற சமூக பொறுப்புடைய உண்மையான  நிபுணர்கள் மூவரும் இதில் உள்ளடக்கப்பட்டனர். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கத்துடன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசியல் யாப்பு சபைக்கு நியமிக்கப்படுவர். அவ்வாறு நியமிக்கும் போது அனைத்து கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்று தொழில் திறன் சமூக அக்கறை சமூக அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற ஏற்பாடும் உள்ளது. 

ஆனால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் அரசியல் யாப்பு சபை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பாராளுமன்ற சபை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களாக பிரதமர், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் பிரதமரின் பிரதிநிதி, எதிர்க் கட்சி தலைவரின் பிரதிநிதியாகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர். முன்னைய யாப்பு ஏற்பாட்டில் அரசியல் யாப்பு சபை உறுப்பினர்களை நியமிப்பதில் பாராளுமன்றத்திற்கு இருந்து அதிகாரம் இந்த பாராளுமன்ற சபை உறுப்பினர்கள் நியமிப்பதில் இல்லாது போகிறது. பாராளுமன்ற சபையின் ஆலோசனைகளை மாத்திரமே ஜனாதிபதி கேட்க முடியும். அதன்படி உயர்நீதிமன்றம் உயர் பதவிகள் சுயாதீன ஆணைக்குழு ஆகியவற்றுக்கு நியமனங்கள் செய்வதில் ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த நியமனம் மற்றும் பதவிகள் மீதான சுயாதீனத் தன்மை வலுவிழக்கச் செய்யப்படுவதுடன் அதுதொடர்பான மக்கள் நம்பிக்கையும் குறைவடைய வாய்ப்பு உள்ளது. 

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன்னர் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் 58 வயதை தாண்டியவுடன் சேவைகால நீடிப்பு பெற ஜனாதிபதியின் அனுமதி கோரி வேண்டும். இது அவர்களது பதவியின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எமது நாட்டில் இருந்த மிகவும் திறமை வாய்ந்த சட்டமா அதிபரான கே சி கமலசபேசன் அவர்களுக்கு மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டதன் பின்னர் அவர் மன உளைச்சலில் உயிரிழந்தமை  நினைவூட்டத்தக்கது. ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபரின் பதவி ஓய்வு வயது 60 ஆக மாற்றப்பட்டது. 20 ஆவது திருத்தச் சட்டத்தில் இது நீக்கப்படுகிறது. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்பது பொய். 2002 ஐந்தாம் இலக்கம் கொண்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்யும் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு பதவி விலகுமாறு கோரும் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதனை நிறைவேற்றி பதிவி நீக்கம் செய்ய முடியும். 

மேற்கூறிய நியமனங்கள் தொடர்பில் பாராட்டப்பட வேண்டிய தற்போதைய ஏற்பாடுகளை நீக்கி குறித்த நிறுவனங்கள் மற்றும் பதவிகளின் சுயாதீன தன்மையை நீக்கி மக்களின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் புதிய அரசியல் யாப்பு திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மக்கள் விருப்பம் பெறப்பட வேண்டியது கட்டாயமாகும். 

அடிப்படை உரிமை கேலி..

நாட்டு மக்களின் இறைமைக்கு மிகத்தெளிவான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சரத்தாக ஜனாதிபதிக்கு மீண்டும் பரிபூரண விடுதலை வழங்குவதாகும்.  தனது அடிப்படை உரிமை நிறைவேற்று அதிகாரி அல்லது நிர்வாக செயற்பாடுகள் மூலம் மீறப்படும் போது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யக் கூடிய ஆளவிற்கு அரசியல் யாப்பின் 17வது சரத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 17வது சரத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த ஏற்பாடு அடிப்படை உரிமை ஆகும். 1978 முதலாவது அரசியல் யாப்பில் இது காணப்படவில்லை. ஜனாதிபதிக்கு விடுதலை காணப்பட்டது. ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் இதனை மாற்றி அமைத்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டு இருந்தால் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய சாதாரண குடிமகனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மக்களின் இறைமை பலப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட விரோதமாக பாராளுமன்றை கலைத்த போது அதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்து மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டும் அளவிற்கு அதிகாரம் இருந்தது இந்த ஏற்பாட்டின் காரணமாகவே. எனவே 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் ஜனாதிபதிக்கு பூரண விடுதலை வழங்கப்பட்டுள்ளமை நாட்டு மக்களின் இறைமைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் மூன்றாவது சரத்தின் பிரகாரம் நாட்டு மக்களின் இறைமைக்கு நிர்வாக அதிகாரம் அடிப்படை அதிகாரம் மற்றும் வாக்குரிமை உள்ளடங்கும். 

மக்கள் விருப்பம் அவசியம்.. 

19வதூ திருத்தச் சட்டம் மக்கள் விருப்பம் பெறாமல் நிறைவேற்றப்பட்டதால் அதில் காணப்படும் ஏற்பாடுகள் மக்கள் விருப்பம் இன்றி நீக்கப்பட கூடியது என முன்வைக்கப்படும் வாதம் பொய்யானது. இறைமையை வலுப்படுத்துவதற்கு மக்கள் விருப்பம் அவசியமில்லை. ஆனால் இறைமையை பலவீனப்படுத்துவதற்கு மக்கள் விருப்பம் அவசியம். உதாரணமாக நமது யாப்பில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை இல்லை. ஆனால் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை யாப்பில் இணைத்துக் கொள்வதற்கு மக்கள் விருப்பம் பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவ்வாறான ஏற்பாடு யாப்பில் உள்ளடக்கப்பட்டு பின்னர் அதனை நீக்குவதாயின் கட்டாயம் மக்கள் விருப்பம் பெறப்பட வேண்டும். 19 ஆவது திருத்தச் சட்டத்தில் மக்களின் இறைமை கூடியளவு வலுவடைய செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றி அமைக்கும் போது மக்களின் இறைமை அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதனால் மக்கள் விருப்பம் கோர வேண்டியது மிகவும் அவசியமாகும். 

இருபதாவது திருத்தச் சட்டத்தை மக்களின் இறைமை தொடர்பில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது தற்போது நடைமுறையில் உள்ள யாப்பு திருத்தத்துடனே தவிர நடைமுறையில் இல்லாத முன்னர் இருந்த யாப்பு அல்லது 1978 ஆம் ஆண்டு முதலாவது அரசியல் யாப்பு என்பவற்றுடன் அல்ல. எமக்கு இருப்பது ஒரே ஒரு அரசியல் யாப்பு. அதுவே தற்போது உள்ள அரசியல் யாப்பு. அதில் உள்ள மக்களின் இறைமையை வலுவிழக்கச் செய்ய வேண்டுமாயின் கட்டாயம் மக்கள் விருப்பம் பெறப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே அது சாத்தியப்படும். 

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன - ஜனாதிபதி சட்டத்தரணி. 

---------------------------
by     (2020-09-13 21:46:23)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links