~

வாருங்கள்! பாருங்கள்! இப்போது காண்பிக்கப் படுகிறது "வரலாற்றில் மிகப் பெரிய காடழிப்பு"- ஒரு வாரம் கூட இல்லை 220 ஏக்கர் அழிப்பு..!

எழுதுவது தமயந்தி கமகே

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 16 பிற்பகல் 06 .15) கடந்த சில தினங்களாக மாத்திரம் டோசர் இயந்திரத்தை பயன்படுத்தி சுமார் 220 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. வன பதுகாப்பு சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாக கருதப்படும் வன அழிப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளதுடன் ரத்மலே வனப் பகுதியில் 150 ஏக்கரும் அடியாஹின்ன வனப் பகுதியில் 30 ஏக்கரும் உடவலவ வனப்பகுதியில் 40 ஏக்கரும் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த காடழிப்புடன் ஏதோ ஒரு முக்கிய விடயம் தொடர்பு பட்டிருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இந்த வன அழிப்பு இடம் பெற்றுள்ளதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்மலே வனத்தில் 150 ஏக்கர் அழிப்பு..

ஹொரவாபத்தான பிரதேச செயலகத்தில் எல்லை கொண்டுள்ள ரத்மலே வனத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன ஜீவராசிகள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வரும் சுமார் 150ற்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. ஏக்கபேதிவெவ, கடவக்க ஆகிய கிராமங்களை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ள இந்த வனத்தில் பெறுமதி வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. அத்துடன் வெட்டப்பட்ட மரங்கள் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில பெறுமதி வாய்ந்த மரங்கள் வெட்டி இழுத்துச் செல்லப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

அடியாகின்ன வனத்தில் 30 ஏக்கர் அழிப்பு..

இதேவேளை வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மகாதிவுல்வெவ நீர்தேக்கத்திற்கு அருகாமையிலுள்ள அடியாகின்ன வனத்தில் சுமார் 30 ஏக்கர் வனப்பகுதி சில நாட்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. பல வருட காலங்களாக காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் இந்த வனத்தில் வாழ்ந்து வருவதுடன் இயற்கையான வனமாக இது கருதப்படுகிறது. வனம் இருப்பதால் காட்டு யானைகள் அங்கு வாழ்ந்து வருவதால் காட்டு யானைகள் மனிதர்களுக்கு இடையிலான தாக்குதல்கள் இங்கு குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே காடு அழிக்கப்பட்டுள்ளது. 

உடவளவை வனத்தில் 40 ஏக்கர் அழிப்பு..

அதுமாத்திரமன்றி உடவளவை தேசிய பூங்காவில் எல்லை கொண்டுள்ள உடவலவ வனத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் இயற்கை வனம் டோசர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தனமல்வில பிரதேச செயலகத்திற்கு சொந்தமான பொதகம கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியே இவ்வாறு டோசர் இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. பொதகம் வாவிக்கு அருகில் அமைந்துள்ள தேயிலை செடிகளுடன் இணைந்ததான இந்த அழகிய வனத்தில் யானைகள் மான் மரை பன்றி மீன் வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த வனம் அழிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள வனப் பாதுகாப்பு சட்டங்களை சிறிதளவேனும் மதிக்காமல் 'எல்லை மீறி' இந்த வன அழிப்பு இடம் பெற்றுள்ள நிலையில் இதன் பின்னணியில் பணம் படைத்தவர்கள் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுடைய அடியாட்களை வைத்து இந்த வன அழிப்பை செய்து வருவதாகவும் வன பாதுகாப்பு அதிகாரிகள் இதுதொடர்பில் அமைதி காத்து வருவதாகவும் ஊடகவியலாளர்கள் சிலரும் மௌனமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் விஜயத்தின் பின்னர் வன அழிப்பு வேகமாக இடம் பெறுகிறது..

இந்த வன அழிப்பின் பிரதிபலனாக யானை மனித மோதல் அதிகரிப்பு, மனித உயிர்கள் பலி எடுக்கப்படல், சொத்துக்கள் மற்றும் பயிர் நிலங்கள் அழிக்கப்பட்டு யானைகள் வன விலங்குகளான மான் மரை பன்றி போன்றவை வேட்டையாடப்படும் விலங்குகளாக மாற்றப்பட்டுள்ளமை போன்ற அழிவுகள் இடம்பெற்று வருவதுடன் காடுகள் அழிக்கப்படும் பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிப்பதோடு இயற்கை குடிநீர் மற்றும் சுத்தமான காற்று இல்லாமல் போவதாகவும் இதனால் குறித்த பகுதி 'பாலைவனமாதல்' நிலைமைக்கு மாற்றம் பெற்று வருவதாகவும் சூழலியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய காடழிப்பு தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கராஜ வரலாற்று புகழ்பெற்ற வனத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டதன் பின்னர் வன அழிப்பு மேலும் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் எதற்கு?' என புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் எழுப்பிய மிக கேவலமான கேள்வி தற்போதைய ஜனாதிபதியால் 'அரச கொள்கையாக' இணைத்துக் கொள்ளபட்டுள்ளதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

தமயந்தி கமகே

---------------------------
by     (2020-09-16 23:07:12)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links