கலாநிதி லயனல் போபகே
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 28 பிற்பகல் 11.25) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் பல்வேறு குடிமக்கள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து முன்னெப்போதும் இல்லாதளவு எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
அரசில் அங்கம் வகிப்பவர்களும் அதன் ஆதரவாளர்களும் கூட இதையிட்டுக் கவலை தெரிவித்துள்ளனர். இது நியாயமானதும் கூட. கடந்த ஆகஸ்ட் மாத பொதுத்தேர்தலில் 'காரியங்களை நிறைவேற்றுவதற்கென' அரசுக்குக் கொடுக்கப்பட்ட மக்கள் ஆணையை, சட்டத்திற்குட்படாத சகல வல்லமைமிக்க ஜனாதிபதி ஒருவரை உருவாக்கக் கொடுத்த அங்கீகாரமாகக் கருதமுடியாது.
ஒரு ஜனநாயகக் கட்டமைப்பில், பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் கட்டுப்படாதவரும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து முற்றுமுழுதாக விதிவிலக்கு செய்யப்பட்டவருமான ஒரு ஜனாதிபதியை விவேகமுள்ள எந்தவொரு குடிமகனும் விரும்பமாட்டார். அத்துடன், இவ்விடயம் தேர்தலுக்கு முன் தெளிவாக வாக்காளர்களிடம் முன்வைக்கப்படாததால், இத்திருத்தச் சட்டம் மக்கள் கொடுத்த ஆணைக்கு முரணானதும்கூட. இது 19வது திருத்தச்சட்டத்தினால் நீக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் உள்வாங்குவது மட்டுமன்றி, வல்லாட்சியை நோக்கி நகர்கிறது.
இச்சட்டம் நாட்டின் பங்கேற்பு ஜனநாயகத்துக்குக் குந்தகமான பல திருத்தங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில:
1) நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியைக் கண்காணிக்கவல்ல அதிகாரச் சமநிலை நீக்கப்பட்டுள்ளது;
2) தேர்தல் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆற்றலிழக்கம் அல்லது நீக்கம் செய்யப்பட்டுள்ளன;
3) பாராளுமன்றத்தை அதன் ஒருவருடகால முடிவின்பின் தாம் நினைத்தபொழு கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது;
4) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ செயற்படுகள்பற்றி உயர் நீதிமன்றத்தில் வினா எழுப்புவதற்கான அடிப்படை உரிமைகள் அகற்றப்பட்டுள்ளன;
5) இலங்கை விமான சேவை போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கணக்காய்வு செய்வதற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளதால் ‘தேசிய கணக்காய்வு அலுவலகம்’ பலவீனப் படுத்தப்பட்டுள்ளது.
இப்பரந்துபட்ட மாற்றங்கள், அரச நிர்வாகங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் அரசமைப்புக் காப்புகளை தேய்த்தொழித்துவிடும். பாராளுமன்ற அதிகாரக்குறைப்பானது மக்களின் குரல் மற்றும் குடிஉரிமைகளை ஒடுக்கி, மக்கள் முக்கியத்துவம்வாய்ந்த விடயங்களில் பொது விவாதம் அற்றுப்போகச் செய்வதுடன், அரசு பொதுமக்களுக்குப் பொறுப்புக்கூறாமல் செயற்படுவதற்கும் இடமளிக்கும்.
அதிலும் முக்கியமாக, முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தங்கள் அங்கீகரிக்கப்படுமாயின் அது மக்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம், இறைமை என்பவற்றைப் பாதிப்பதோடு –– அரசியலமைப்பின் அடிப்படைச் சட்டப்பிரிவு 83ஐயும் மீறுவதால், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்கள் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
மேலும், ஜனாதிபதி சட்டத்திற்குட்படாதவராகவும் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளவராகவும் ஆக்கப்படுவதால் நீதித்துறைச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன், நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் என்றுமில்லாதளவு அதிகரித்துள்ளது.
எமது நாட்டில் மனித உரிமைகள், சமத்துவம், நீதி, சமாதானம் என்பன நிலவ வேண்டுமாயின், அரச மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசியஅளவில் நன்மதிப்பைப்பெற்ற கல்விமான்களும் அடங்கிய சுதந்திர ஆணைக்குழு ஒன்றினால் நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதியையும் நீதியரசர்களையும் கொண்ட ‘சுதந்திரமான ஒரு நீதித்துறை’ அவசியமாகும்.
எனவே, அனைத்து இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாம் விநயமாய் கேட்பது என்னவென்றால், விழிப்புடனும் நேர்மைத்தனமுடனும், தூரநோக்குடனும் செயற்பட்டு, ஓர் வல்லாட்சி அரசு உருவாகுவதை தடுத்து நிறுத்துங்கள். தமக்கு சேவைசெய்யவென உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடன் இது. ஏனெனில், 20ஆவது திருத்தச்சட்டம் இந்த வடிவில் வருமென்று அவர்கள் என்றுமே நினைத்திருக்கவில்லை.
மக்கள் பெயரில் சட்டம் இயற்றும் உங்களை, இலங்கையைக் கைவிடவேண்டாமென நாம் வேண்டுகிறோம். மாறாக வாக்காளர்களை முதன்மைப்படுத்தி, முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தை நிராகரித்து, நன்கு விவாதித்து, விவேகமும் நியாயமுமான திருத்தங்களை குழு நிலையில் மேற்கொண்டு, உங்கள் மனச்சாட்சிக்கேற்ப வாக்குகளை அளியுங்கள்.
இச்சட்டமூலம் நிறைவேறுவதை தடுக்கத் தவறுவீர்களாயின், ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பன விரைவில் முடிவுக்கு வருவது மட்டுமல்லாது, அபிவிருத்தியும் சுபீட்சமும் தோல்வியையே தழுவும்.
தலைவர்
இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை (இணை)
மெல்பன், ஆஸ்திரேலியா
---------------------------
by (2020-09-28 16:22:37)
Leave a Reply