~

கோட்டாவின் இருபதாம் திருத்த தீர்ப்பு கள்ளத்தனமாக வெளியீடு..! ஐந்து நீதிபதிகளின் பயந்த சுபாவம் காரணமாக நாட்டில் கணக்கே இல்லாமல் இரத்த ஆறு ஓடும்..!

எழுதுவது விமல் தீரசேகர

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 11 பிற்பகல் 4.45) 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவினரின் வியாக்கியானம் மக்கள் மத்தியில் கசிந்துள்ளது. காட்டு வழியாக இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. இவ்வாறான மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு அல்லது வியாக்கியானம் உயர் நீதிமன்றத்தினால் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோருக்கு மாத்திரமே அனுப்பி வைக்கப்படும் என அரசியல் யாப்பின் 121 (3) சரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதி அல்லது பாராளுமன்றின் ஊடாக மனுதாரர்களுக்கு தீர்ப்பின் பிரதி அனுப்பி வைக்கப்படுவது சம்பிரதாயம் ஆகும். எனினும் நேற்றைய தினம் குறித்த உயர் நீதிமன்றத்தின் ரகசிய தீர்ப்பு இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரங்கப்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனக்கு உயர் நீதிமன்றம் அனுப்பிய தீர்ப்பு அடங்கிய கடிதம் இன்னும் பிரித்து பார்க்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனினும் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த வழக்கின் தீர்ப்பு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதில் இருந்து அவரது சகோதரர் ஒருவர் மூலமாக (பாராளுமன்றத்தில் இல்லாத) காட்டு வழியில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு உள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய நீதிபதிகளான புவனேக அழுவிஹாரே, விஜித் மலல்கொட மற்றும் சிசிர டி ஆப்ரூ ஆகிய நீதிபதிகள் கையொப்பமிட்ட தீர்ப்பில் 'நான் இணங்குகிறேன்' என்று மாத்திரம் தெரிவிக்கப்பட்டு கையொப்பம் இடாமல் மற்றுமொரு சரத்து சேர்க்கப்பட்டு நீதிபதி பிரியந்த ஜயவர்தன கையொப்பம் இட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அல்லது இணக்கம் இல்லாமல் வேறு கருத்தை கொண்டிருந்தால் மாத்திரமே இவ்வாறு செய்யப்படும். ஆனால் நீதிபதி பிரியந்த ஜெயவர்தன ஏனைய நான்கு நீதிபதிகள் கூறுவதை வேறு வழியில் தெரிவித்துள்ளார். தான் குறித்து நல்ல வகையில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்குவதற்கு பிரியந்த ஜயவர்தன கையாண்டுள்ள மோசமான நடைமுறையே இதுவாகும். பிரியந்த ஜெயவர்த்தன என்பவர் பெசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணியாக செயல்பட்டு நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நல்லாட்சி காலத்தில் நடுநிலையான தீர்ப்புகளை வழங்கிய பிரியந்த ஜெயவர்த்தன தற்போது தன்னுடைய முதலாளிகள் ஆட்சியாளர்களாக வந்திருப்பதால் மீண்டும் பழைய நிலைக்குச் சென்று தனது திருகுதாளங்களை காட்ட ஆரம்பித்துள்ளார். அடுத்த பிரதம நீதியரசராக வருவதற்கு தேவையான வழியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பிரியந்த ஜயவர்தன ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தமது முதலாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் திட்டத்தை ஒருபோதும் பிரியந்த ஜெயவர்தன விரும்பாமல் இருக்க மாட்டார். 

எனினும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு வழங்கிய தீர்ப்பில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது. உத்தேச 20 ஆம் திருத்தச் சட்ட மூலத்தில்   3, 6, 7, 14, 15, 16, 17(4), 20(3), 27, 28, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 மற்றும் 40 ஆகிய சரத்துக்கள் மக்கள் விருப்பம் பெறாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுடன்  3, 5, 14, 22 ஆகிய சரத்துக்கள் குறித்து மக்கள் விருப்பம் பெறப்படுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மூன்றாம் மற்றும் 14ஆம் சரத்துக்கள் குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்கள் செய்யப்படுமானால் அதற்கு மக்கள் விருப்பம் பெறப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  ஐந்தாம் மற்றும் 22ஆம் சரத்துக்கள் நீக்கப்பட்டால் மக்கள் தீர்ப்பு அவசியம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

வழக்குத் தீர்ப்பின் சாதகமான தன்மைகள்..

இது தொடர்பில் லங்கா ஈ நியூஸ் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட சட்ட வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் சாராம்சம் வருமாறு, 

இந்த வழக்கு தீர்ப்பானது இலங்கை உயர் நீதிமன்றத்தின் எதிர்கால நோக்குகள் அல்லாத அந்நிலையை எடுத்துக் காட்டுவதுடன் நீதிமன்றம் தனது தலையை தானே நிறைவேற்று அதிகாரியிடம் காட்டிக் கொடுப்பது மாத்திரமன்றி பாராளுமன்றத்தை முழுமையாக நிறைவேற்று அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வழி என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். நல்ல விடயமாக எடுத்துக் கொண்டால் திருத்தத்தில் ஐந்தாவது சரத்தில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதியின் விடுவிப்பு தொடர்பான விடயத்தில் மக்கள் விருப்பம் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் அரசியல் யாப்பில் கூட ஜனாதிபதி ஒருவர் அமைச்சராக இருக்கும் போது மேற்கொள்ளும் குற்றங்களுக்கு ஜனாதிபதி விடுவிப்பு இருக்கவில்லை. ஜனாதிபதி ஒருவர் அமைச்சராக செயல்படும் போது இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடும் உரிமை பொது மக்களுக்கு இருந்தது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வோட்டர்ஸ் எஜ் மோசடி வழக்கின் தீர்ப்பும் அவ்வாறே வழங்கப்பட்டது. எனினும் பத்தொன்பதாவது திருத்தம் இன்னும் கொஞ்சம் முன்னோக்கி சென்று ஜனாதிபதி ஒருவர் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து செய்யும் குற்றங்கள் மோசடிகள் தொடர்பிலும் நாட்டு பிரஜைகளுக்கு நீதிமன்றத்தை நாட முடியுமென ஏற்பாடு கொண்டு வரப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தது தவறு என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியமை இந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் ஆகும். இவ்வாறு இருக்கும் நிலையில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜெயவர்த்தனவின் யாப்பை நோக்கி பின் செல்லும் நிலையே காணப்படுகிறது. இன்று உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் நாட்டு மக்களின் உடைய அதிகாரம் பறிக்கப்படும் ஏற்பாடுகளை கொண்டு வர கட்டாயம் மக்கள் தீர்ப்பு பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பின் சாதகமான விடயமாக சட்ட வல்லுனர்கள் இதனை சுட்டிக்காட்டி உள்ளனர். 

இருபதாவது திருத்தச் சட்ட மூலத்தின் மூன்றாவது சரத்தில் கோட்டாபய ராஜபக்ச அபூர்வமான கதை ஒன்றை கூறியுள்ளார். அதுதான் 33வது சரத்தில் இதுவரை இருந்த முக்கியமான விடயத்தை நீக்குவதாகும். ஜனாதிபதி அரசியல் யாப்பை கடைபிடித்து அரசியல் யாப்புக்கு அமைய செயற்படுவதாகவும் அதனை பாதுகாப்பதாகவும் பொறுப்பேற்பதுடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வலுவடையச் செய்தல் அரசியல் யாப்பு சபை மற்றும் அரசியல் யாப்பின் முக்கியமான நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு வசதி அளித்தல் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த வழி செய்வது மற்றும் மக்கள் தீர்ப்பை நடத்துவதற்கு வழி செய்வது உதவி செய்வது என்ற மிக முக்கியமான சரத்து நீக்கப்படுகிறது. அப்படியானால் ஜனாதிபதி குறைந்தது அரசியலமைப்பை பின்பற்ற வேண்டிய அவசியம்கூட இல்லை எனவும் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை எனவும் கருதப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தேவையாக இருந்தது இதுவே. என்னும் கோட்டாபய ராஜபக்ஷ இதனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் மக்கள் தீர்ப்புக்கு செல்ல வேண்டுமென நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக 14 ஆவது சரத்தில் கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுள்ளது, பாராளுமன்றம் பதவியேற்று ஒரு வருடத்தின் பின் எந்த நேரத்திலும் அதனை கலைக்க முடியும் என்ற அதிகாரத்தை பெறுவதாகும். இதற்கு முன்னர் ஜெயவர்த்தனாவின் யாப்பில் பாராளுமன்றத்தை இரண்டு வருடங்களுக்கு பின்னர் எந்த நேரத்திலும் கலைக்கலாம் என்று ஏற்பாடு இருந்தது. ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் அது மாற்றப்பட்டு ஜனாதிபதி ஒருவருக்கு பாராளுமன்றம் தனது பதவி காலத்தில் நான்கரை வருடங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னர் கலைக்க முடியாது என்ற ஏற்பாடு கொண்டு வரப்பட்டது  எனினும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறித்த சரத்தில் இரண்டரை வருடங்கள் என்று கூறப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் அவ்வாறு இல்லையேல் மக்கள் தீர்ப்பு பெற வேண்டுமென தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தை ஜனாதிபதியின் றப்பர் முத்திரையாக மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் இடம் வழங்கியது ஏன்?

மேற்கூறிய ஒரு சில விடயங்களை தவிர கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ள ஏனைய அனைத்து விடயங்களையும் செயல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதன் மூலம் நாட்டு மக்களின் இறைமை பாதிக்கப்பட்டுள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதில் பிரதானமான விடயம் பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஆகும்.  பாராளுமன்றம் நாட்டு மக்களின் இறைமை மூலமாக தெரிவு செய்யப்படுகிறது. அதன் பிரதமராக பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கை பெற்றவரே இருக்க முடியும். அந்த அதிக நம்பிக்கை இருக்கும் வரைக்கும் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அவரை பதவி நீக்க முடியும் என்றால் இந்த விடயத்தில் பாதிக்கப்படுவது மக்களின் இறைமை ஆகும். ஆனால் கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கையை பெற்றவராக இருந்தாலும் பிரதமரை பதவி நீக்கக் கூடிய முழுமையான அதிகாரம் ஜனாதிபதி வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விடயமானது நாட்டு மக்களின் இறைமையை பறித்தெடுக்கும் செயல் என்பதுடன் இதனை செயற்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பிழையான செயல் என லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் கருத்து தெரிவித்த அனைத்து சட்ட வல்லுனர்களும் கூறியுள்ளனர். இதன் பின்னர் ஜனநாயகம் கூடிய பாராளுமன்றம் ஒன்று நாட்டு மக்களுக்கு இல்லாமல் போகும். பாராளுமன்றம் ஜனாதிபதியின் றப்பர் முத்திரையாக மாத்திரமே காணப்படும். 

ஐந்து நீதிபதிகளில் பயந்த சுபாவம் காரணமாக நாட்டில் அடிக்கடி இரத்த ஆறு ஓடும் ..

இதில் உள்ள அபூர்வமான விடயம் என்னவென்றால் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தற்போது தெரிவுசெய்யப்படும் ஜனநாயக முறைமையில் இருந்து தலைகீழாக மாறி மீண்டும் ஜனாதிபதியின் நேரடி நியமன அதிகாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இது தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் 5 நீதிபதிகள் குழு வழங்கியுள்ளது. தங்களது தலைகளை வாள் எடுத்து தாங்கள் கைகளாலேயே வெட்டிக் கொள்வது என்ற உதாரணத்துடன் இணைத்து தங்களுடைய தலைகளை வெட்டிக் கொள்ளுமாறு வாள் எடுத்து ஜனாதிபதி கையில் கொடுக்கும் வகையிலான தீர்ப்பில் இவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். சிரிசங்கபோ செய்ததை விட ஒரு படி மேல் சென்று இவர்கள் செய்துள்ளனர். இதன் பின்னர் எந்த ஒரு காலத்திலும் சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பை இலங்கையில் காண முடியாது. காரணம் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் அவருக்கு தேவையான தீர்ப்பினை வழங்குவார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் இருந்த போது ராஜபக்சகளுக்கு தேவையான தீர்ப்புகளை வழங்கியது அவர் ராஜபக்சகளின் முகாமில் இருந்ததனால் எனினும் உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் ஐவரும் கோட்டாபய ராஜபக்சவின் மீதுள்ள பயத்தினால் இந்த தீர்ப்பினை வழங்கிய உள்ளதாக சட்ட வல்லுநர்கள் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமையானது நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த கூடும். இந்த நீதிபதிகளின் பயந்த சுபாவம் காரணமான தீர்ப்பினால் எதிர்கால சந்ததி பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி நாட்டில் இரத்த ஆறு ஓடுக் கூடும். 

விமல் தீரசேகர்

---------------------------
by     (2020-10-11 20:21:31)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links