எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 21 முற்பகல் 09.00) இலங்கையில் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே லக்சித மதூஷ் என்ற மாகந்துரே மதூஷ் 2019 பிப்ரவரி மாதத்தில் துபாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மே மாதத்தில் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் பாதுகாப்பு செயலாளரின் கையொப்பத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை கொழும்பு மாளிகாவத்தை எப்பல்வத்த பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான வகையில் சுட்டுக் கொல்லப்பட்டு பொய் தகவல்களை வெளியிடுவதால் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய தலையிடி ஏற்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் துபாயில் கைது செய்யப்பட்டனர். அதன் போது இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச பொலிஸார் மாகந்துரே மதுஷுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தனர். இந்த சர்வதேச பிடியாணை காரணமாக தமது நாட்டில் கைது செய்யப்பட்ட நபரை துபாய் போலீசார் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர். இதனால் மாகந்துரே மதுஷ் விடயம் சாதாரண போதைப் பொருள் வியாபாரிகள் கைது அல்லாமல் சர்வதேசத்துடன் தொடர்புபட்ட ஒன்றாகும்.
துபாய் நாட்டில் குற்றம் புரிந்த ஒருவரை அந்த நாட்டின் சட்டத்தின் கீழ் தண்டிக்க நடவடிக்கை எடுக்காமல் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க துபாய் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காரணம் சர்வதேச பொலிசாரினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை ஆகும். அவ்வாறு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் உலகில் யாரும் நம்ப முடியாத அளவு சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். பல விட்டுக் கொடுப்புகளுக்கு மத்தியிலேயே குறித்த சந்தேக நபர் துபாய் பொலிசாரினால் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறான விடயங்களில் வெளிநாடுகள் பொலிசாருடன் தொடர்புபட்டே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. குறித்த சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வரவென துபாய் நாட்டுக்கு இலங்கையில் இருந்து குற்ற புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்றும் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை குழு ஒன்றும் துபாய் நாட்டிற்கு சென்று இருந்தது. இலங்கையில் இருந்து சென்ற இந்த குழுவிடமே துபாய் அதிகாரிகள் சந்தேக நபர்களை ஒப்படைத்தனர். சட்ட ரீதியான எழுத்து வடிவம் பெற்று இவ்வாறு சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அதனால் மாகந்துரே மதூஷை இலங்கையிடம் ஒப்படைத்தது தொடர்பில் துபாய் அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் ஒரு பிரிவினர் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தமது நாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கை சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் டுபாய் அரசாங்கம் தற்போது பாரிய சிக்கலில் விழுந்துள்ளது.
அதேபோன்று துபாயில் மேலும் சில இலங்கைக்கு தேவைப்படும் பாதாள உலகக் குழு தலைவர்கள் வசித்து வருகின்றனர். 'கொஸ்கொட சுஜீவ' 'மொரில்', போன்றவர்கள் இதில் அடங்குவர். தற்போது இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது என்பது சாத்தியமற்ற விடயமாக மாறியுள்ளது.
அதே போன்று சர்வதேச போலீசாரும் கஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். காரணம் துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீது அந்த நாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை விடுத்து இலங்கைக்கு நாடு கடத்த மத்தியஸ்தம் வகித்து செயல்பட்டது சர்வதேச பொலிஸார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இலங்கையினால் கோரப்படும் நபர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்காது இருக்கவும் தற்போது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் ஏதேனும் நாட்டில் கைது செய்யப்பட்டால் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு உதவி செய்யாமல் இருக்கவும் சர்வதேச பொலிஸார் தீர்மானித்தால் அது புதுமை அடைவதற்கு இல்லை. சர்வதேச போலீஸ் குற்றமிழைத்த யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்குவதையே விரும்புகின்றனர் அதனால் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனையும் இலங்கைக்கு கொண்டு வருவதென்பது பொய்யான விடயமாக மாறியுள்ளது.
ராஜபக்சக்கள் தங்களுடைய குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாகந்துரே மதூஷின் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆனால் இது இலங்கை நாட்டிற்கு தூர நோக்கு அடிப்படையில் பாரிய சிக்கல்களை உருவாக்கும் எனவும் சிரேஷ்ட போலீசார் மற்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாகந்துரே மதூஷ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரை கண்காணித்து வந்தது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவான் வெதசிங்க அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிசாந்த டி சொய்சா பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். நிசாந்த டி சொய்சா என்பவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் இருந்த பிரபல முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் அணியை சேர்ந்தவர் ஆவார். போலீஸ் துறையில் கேவலமான செயற்பாடுகளுக்கு பெயர் போன நபர் அவர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு வந்ததன் பின்னர் மாகந்துரே மதூஷ் குற்றப் புலனாய்வு பிரிவில் இருந்து குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த 17 ஆம் திகதியே மதூஷ் குற்ற தடுப்பு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டார். 19ஆம் திகதி இரவு மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாகந்துரே மதுஷ் குற்றத் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது கொலை செய்யவே என முன்கூட்டியே மாற்று ஊடகங்கள் எதிர்வு கூறியிருந்தன.
இந்தக் கொலையின் பின்னர் போலீசார் கூறும் திரைமறைவு நாடகமும் மிகவும் கேவலமானதாக உள்ளது. போதைப் பொருள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை காண்பிப்பதற்காக மதூஷை அழைத்துச் சென்றதாகவும் அதன்போது போதைப் பொருள் வியாபாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாகந்துரே மதூஷ் கொல்லப்பட்டதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கால் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அது வெளியில் காண்பிக்கப்படவில்லை. போதைப் பொருள் வியாபாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிசார் கைப்பற்றியதாக காண்பிக்கின்றனர்.
மாகந்துரே மதூஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் போது போலீசார் 'முட்டியிடு' 'முட்டியிடு' என கூறியதாகவும் எனினும் யாரோ 'வேண்டாம்', 'வேண்டாம்' என கத்தியதாகவும் மோட்டார் சைக்கிள் சிறிது நேரத்தின் பின்னர் பொலிசாரால் அந்த இடத்தில் கொண்டு வந்து போடப்பட்டதாகவும் அப்பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ முன்னாள் கோப்ரால் ஒருவர் முகநூலில் பதிவிட்டு பின்னர் அதனை மறுத்துள்ளார். அவர் பொய் கூறினாலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரின் தலையை பார்க்கும் போது அவர் மண்டியிட வைத்து அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது தெளிவாக விளங்குவதாகவும் துப்பாக்கி துளை தலையின் மறுபக்கம் வந்திருப்பது அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போலீசார் தெரிவிக்கும் தகவல்களில் இருந்து வெளிவரும் மிகப் பெரிய போய் என்னவென்றால் மில்லி மீட்டர் 9 ரக துப்பாக்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரீ- 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி சன்னங்கள் காணப்படுகின்றன.
போலீசார் மாகந்துரே மதூஷை கொலை செய்ய மக்கள் செறிந்து வாழும் எப்பல்வத்த பிரதேசத்தை தேர்ந்தெடுத்தது ஏன்..? குறித்த பிரதேசம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு முழுமையான ஆதரவு உள்ள பிரதேசம் ஆகும். அவர்களை அச்சுறுத்துவதற்காக இந்தப் பிரதேசத்தை போலீசார் தேர்ந்தெடுத்து இருக்கக் கூடும்.
மாகந்துரே மதூஷை கொலை செய்வதற்கு 20 ஆம் திகதியை தேர்ந்தெடுக்க காரணம், 21 மற்றும் 22ம் திகதிகளில் இருபதாவது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் அதனை மக்கள் மத்தியில் பேசு பொருளாக கொண்டு வராமல் இருப்பதற்காகவே என கூறப்படுகிறது.
மதுஷ் என்பவர் தாமரை மொட்டு கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் பலருடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர் ஆவார். மாகந்துரே மதூஷுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து அவரை வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உதவியது முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா மற்றும் அவரது மகன் ஆவர். மதுஷை விமான நிலையம் வரை அழைத்துச் சென்றதும் இவர்களே. திலங்க சுமதிபால, நிரோஷன் பிரேமரத்ன, கிளப் வசந்த, கிளப் வசந்தவின் செயலாளராக இருக்கும் மதூஷின் அடியாள் என கருதப்படும் சுரங்க பிரேமலால், மஹிந்த அமரவீர அவரது மகன் பசன் அமரவீர ஆகியோருடன் மதூஷ் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். மதூஷின் கோடிக்கணக்கான பணம் தாமரை மொட்டு அரசியல்வாதிகள் ஊடாகவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிரோஷன் பிரேமரத்ன அதில் பிரதானமான நபர் ஆவார். மதூஷ் கொலை செய்யப்பட்டதன் பின்னர் இந்த அரசியல்வாதிகள் அனைவரும் வெள்ளை அடிக்கப்பட்டு சுத்தமானவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
மாகந்துரே மதூஷ் இலங்கைக்கு துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் அவரது 23 வங்கி கணக்குகளில் சுமார் ஆயிரம் கோடிக்கு அதிகமான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். அந்த பணம் தற்போது யாரிடம் உள்ளது.. ? கொலை திரைக்கதை வசனம் எழுதி நடித்துள்ள போலீசார் இது குறித்தும் தகவல் வெளியிட வேண்டும்.
---------------------------
by (2020-10-21 14:22:25)
Leave a Reply