(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 23 பிற்பகல் 10 .15) முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் தலைநகரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் அபாயமான சந்தர்ப்பத்தில் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது இலங்கை அரசாங்கம் அரசியல் அமைப்பின் ஊடாக ஏகாதிபதி ஒருவரை உருவாக்கும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டமூல இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புகளை 156 ஆதரவு வாக்குகளுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இந்த சட்ட மூலத்திற்கு எதிராக 65 வாக்குகள் அளிக்கப்பட்டன. அதேபோன்று இரட்டை குடியுரிமை தொடர்பான சரத்திற்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பு கோரிய நிலையில் அது தொடர்பான வாக்கெடுப்பில் 157 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 64 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதன்படி இரட்டை குடியுரிமை கொண்ட நபர்கள் இலங்கை தேர்தலில் போட்டியிடலாம் என்ற சரத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொண்டாலும் தனி சிங்கள பலத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்ததாக கூறிக் கொண்டு இருந்த அரசாங்கம் தனது பலத்திற்கு பாரிய இழுக்கை ஏற்படுத்திக் கொண்டது. காரணம் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் , எம் ரஹீம் , அஹமது நசீர் , முஹம்மத் ஹாரிஸ் , பைசல் காசிம் , எம். எஸ் தவ்ஃபீக் ஆகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்தகுமார் ஆகிய 7 சிறுபான்மை கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் ஆதரவையும் அரசாங்கம் பெற்றுக் கொண்டே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது.
19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன வாக்களிப்பு நேரத்தில் சபையில் இருக்கவில்லை என்பதுடன் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச மீண்டும் தன்னை 'டீல்தாஸ' என்பதை உறுதிப்படுத்தி 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போது முதலாவதாக அரசாங்கம் முன்வைத்த இருபதாவது திருத்தச் சட்டத்தில் இல்லாத மற்றும் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களில் உள்ளடக்கப்படாத சரத்து ஒன்றை பாராளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் எடுத்த முயற்சிக்கு எதிர்க் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளது எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் இந்த புதிய சரத்து உள்ளடக்கப்பட்டு இருந்தது. அதன்படி பிரதம நீதியரசர் உள்ளடங்கலாக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளது எண்ணிக்கை 17 ஆகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்த்த சரத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குவிந்து கிடக்கும் வழக்குகளின் தொகையை கருத்தில் கொண்டு நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு கொள்கை அளவில் எதிர்ப்பு இல்லை என்ற போதும் நீதிபதிகளை நியமிக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றமை நீதித்துறையில் அனாவசிய குழப்பங்கள் ஏற்பட காரணமாகும் என சுட்டிக்காட்டினார். அத்துடன் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது அல்லது பாராளுமன்ற விவாதத்தின் போது முன்வைக்காமல் கள்ளத்தனமாக மறைத்து வைத்து குழுநிலை விவாதத்தில் இந்த சரத்து முன்வைக்கப்பட்டமைக்கு முன்னாள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு வெளியிட்டார். எதிர்க் கட்சி பிரதம கொரடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவும் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட போதும் குறித்த சரத்து பாராளுமன்றத்தில் நீதி அமைச்சரின் கட்டுப்பாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அது இல்லை இது இல்லை என கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதன்படி நாட்டின் கடன் சுமையை அடைக்க வேண்டும். வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். தேவை என்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தேக நலனுடன் இருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை அழைத்து வந்து பிரதமர் பதவி கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். காரணம் இரட்டை குடியுரிமை உள்ள நபர் பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற சட்டம் தற்போது இலங்கையில் உள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் இந்த புதிய சட்டத்தின் வெற்றி ஏகாதிபதி ஒருவரை உருவாக்குவதற்கான வாய்ப்பு மற்றும் வெற்றி என அரசாங்கம் கருதினால் அது தவறு எனவும் இது ஒரு 'தனிப்பட்ட குழுவின்' (Pyrrhic victory) வெற்றி எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட குழுவினரின் வெற்றி என்பது வெற்றிக்கு அழிவை ஏற்படுத்திச் செல்வதற்கு பெறப்பட்ட வெற்றியாகும். அல்லது நீண்டகால பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்திக் கொள்ளும் வெற்றியாகும்.
19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது அனைத்து கட்சிகளும் அதற்கு ஆதரவு வழங்கிய போதும் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போது அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கவில்லை. அத்தோடு பணத்திற்கு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெறப்பட்டுள்ளது. 18 ஆவது திருத்தச் சட்டத்தை மஹிந்த ராஜபக்சவும் இதே போன்று தான் நிறைவேற்றிக் கொண்டார். அதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி தொடரவில்லை. மிகவும் குறுகிய கால வெற்றியாக மாறியது. கோட்டாபய ராஜபக்ஷவின் 20ஆம் திருத்தச் சட்டத்திற்கும் அதுவே நடந்துள்ளது. இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இருந்த கத்தோலிக்க பிரிவினர் 20ஆவது திருத்த சட்டத்தின் பின்னர் அவரை விட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பௌத்த பீடங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. பகிரங்கமாக வெளியில் அறிவிக்காவிட்டாலும் வெளிநாடுகள் பல எதிர்க்கின்றன. இது தொடர்பில் கொழும்பில் பேசப்படுகிறது. முஸ்லிம்களின் ஆதரவை பெற்று 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதை பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் எதிர்க்கின்றன. இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த நாட்டு மக்கள் பலர் எதிர்க்கின்றனர். எதிர்காலத்தில் இந்த சக்திகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக அணி திரளும். இவை முடங்கிப் போகாது. கோட்டாபய ராஜபக்ச என்பவர் அதிகாரத்தை சரியாக பயன்படுத்த தெரியாதவர் என்பது தான் கூறும் வார்த்தைகள் அனைத்தும் சுற்றறிக்கைகள் என்று உத்தரவிடும் நிலையிலிருந்தே தெளிவாகிறது. எதிர்காலத்திலும் கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை இவ்வாறே பயன்படுத்துவார். அப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் மூலமாக கோட்டாபய பகைத்துக் கொண்ட பிரிவினர் தொடர்ந்தும் அவரை வெறுக்க தொடங்குவர். இதன் மூலம் 18 ஆவது திருத்தச் சட்டத்தில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலையே 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏற்படும்.
அதனால் இன்று மாபெரும் வெற்றியாக தெரியும் இந்த வெற்றியானது உண்மையான வெற்றி அல்ல என்பதுடன் தனி ஒரு குழுவின் வெற்றி என்பதே உண்மை.
---------------------------
by (2020-10-23 19:29:31)
Leave a Reply