எழுதுவது விசேட செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 29 பிற்பகல் 08.00) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாகந்துரே மதூஷை பரலோகம் அனுப்பி, ஷானி அபேசேகரவை விளக்கமறியலில் வைத்து, துமிந்த சில்வாவிற்கு மீண்டும் போதைப் பொருள் உலகத்தின் மன்னனாக முடி சூடி செயல்பட வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
மாகந்துரே மதூஷை தாம் கொலை செய்யவில்லை என நம்புமாறு அரசாங்கம் நம்மிடம் கூறுகிறது. அதனை நாம் நம்புவதோடு அதே போன்று 20வது திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்காக ரிஷாத் பதியுதீனை கைது செய்வதை அரசாங்கம் திட்டமிட்டு தாமதித்தது எதையும் நம்பியே ஆக வேண்டும்.
இலங்கை குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளும் துபாய் குற்ற தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாகந்துரே மதூஷ் கைது செய்யப்பட்டார். இலங்கையில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் அரச புலனாய்வு சேவை பிரிவினர் இரகசிய விசாரணை நடத்தி சரியான தகவல்களை வழங்கியதன் பயனாக இரகசிய பொலிசார் சர்வதேச போலீசாருடன் இணைந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்தினார். கொலைக் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக குழுவினருக்கு எதிராக குற்ற விசாரணை நடத்துவதை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னால் இயன்ற அளவு இடையூறுகளை அதிகாரிகளுக்கு வழங்கிய போதும் அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க பூரண ஒத்துழைப்பு வழங்கினர். இதன் மூலம் இலங்கை போலீசாருக்கு ஒரு திட்டத்தை செயல்படுத்தி முடிக்க எவ்வித இடையூறும் இல்லாமல் அரசியல் அனுமதியும் கிடைத்தால் அவர்கள் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பர் என்பது புலனாகிறது.
அரசாங்கத்தின் கொலைகள் வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வந்த காரணத்தால் பழிவாங்கும் நோக்குடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரகசிய பொலிஸ் பிரிவின் பிரதானி அபேசேகரவே மாகந்துரே மதூஷை தைு செய்யும் திட்டத்தில் தலைமை வகித்தார் என்பதை யாரும் வெளியில் கூறுவதில்லை. மாகந்துரே மதூஷ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது முதலில் இரகசிய பொலிஸ் பிரிவிற்கே அழைத்துச் செல்லப்பட்டடார். அங்கு ஷானி அபேசேகரவின் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது. 24 மணிநேரமும் பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. வெளியில் அழைத்துச் செல்லப்படும் போதும் பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மாகந்துரே மதூஷ் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடம் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு மாத்திரமே தெரியும். அவரிடம் முக்கிய சிலர் மாத்திரமே இரகசிய விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது ஆயுதம் மறைத்து வைத்தல், போதைப் பொருள் கடத்தல், பாதாள உலகக் குழு செயற்பாடுகளில் ஈடுபடல் போன்ற பல சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். மதூஷ் மூலமாக குற்றவாளிகள் குழுக்களை பிடித்து விடலாம் என்ற நோக்கத்தில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஷானி அபேசேகர குற்ற விசாரணை பிரிவில் இருந்து நீக்கப்படும் போதும் அவரது வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இயங்கிய குற்ற விசாரணை பிரவு பணிப்பாளர் டபிள்யூ திலகரட்ன மற்றும் பிரசன்ன அல்விஸ் ஆகிய இருவரும் ஷானியின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர். மதூஷ் வழங்கும் தகவல்களை கொண்டு போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். தொடர்ச்சியாக மாகந்துரே மதூஷை தங்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கோரிக்கை முன்வைத்து வந்த போதும் அதனை நிராகரித்த மேற்கூறிய இரண்டு அதிகாரிகளும் தமது திட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நுவான் வெதசிங்க, குற்ற விசாரணை பிரிவில் வைத்து விசாரணை செய்யும் மாகந்துரே மதூஷை பாதுகாப்பு இன்றி வெளியில் எடுப்பது பிரச்சினைக்குரிய விடயம் என தெரிந்து வைத்திருந்தார்.
அவசரமாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பணிப்பில் சிஐடி பிரதானிகளான வெதசிங்க மற்றும் அல்விஸ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் கீழ் நிலை அதிகாரிகள் இருவர் அந்த இடத்திற்கு கேள்விகள் எதுவுமின்றி நியமிக்கப்பட்டனர். அதன் பின் உடனடியாக மாகந்துரே மதூஷை குற்றத் தடுப்பு பிரிவிற்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கபபட்டது.
மதூஷ் குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் அவரிடம் போதைப் பொருள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதா? ஆயுதங்கள் குறித்து கேட்கப்பட்டதா? இல்லை. அவரிடம் ஷானி அபேசேகர குறித்தே விசாரணை செய்யப்பட்டது. மாகாந்துரே மதூஷிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஷானி அபேசேகரவினால் மீட்கப்பட்ட ஆயுதங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு புதைக்கப்பட்ட ஆயுதங்கள் என சாட்சி அளிக்குமாறு மதூஷ் அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டார். அவ்வாறு கூறினால் மதூஷை அரச தரப்பு சாட்சியாளராக பெயரிடுவதாக பேரம் பேசினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மதூஷை இந்த அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
நாம் கேட்க வேண்டிய பிரதான கேள்விகள் சில உள்ளன. மதூஷ் கொலை செய்யப்பட்ட செவ்வாய்கிழமை காலை தொடக்கம் குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த இத் திட்டத்தை வேறு யாரும் தெரிந்து வைத்திருந்தனரா என்பது முதல் கேள்வி. மதூஷ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது தொடக்கம் ஒன்றரை வருடங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பில் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டமை தவறா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை திருப்திபடுத்த ஷானி அபேசேகரவை கைது செய்வதற்கென பொய் சாட்சிகள் தயார்படுத்த மற்றும் சாட்சியாளர்களை அச்சுறுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள உப பொலிஸ் அதிகாரி நெவில் டி சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த ஆகிய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த போதே மாகாந்துரே மதூஷ் கொலை செய்யப்பட்டது தற்செயலானதா? மதூஷ் கொலை செய்யப்பட்ட செவ்வாய்கிழமை கொலை நடந்து சில மணி நேரத்தில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகின் பிரபலமாகக் கருதப்படும் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மனு வழங்கியமைக்கும் மதூஷின் கொலைக்கும் இடையில் தொடர்பு இல்லையா? பாரத லஷ்மன் கொலைக்கும் துமிந்த சில்வாவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதை சாட்சியுடன் நிரூபித்து நீதிமன்றில் குற்றவாளியாக அறிவித்தமை தற்செயலாக ஷானி அபேசேகரவினால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றா?
மாகந்துரே மதூஷிடம் இருந்து போதைப் பொருள் கட்டுப்பாட்டை துமிந்த சில்வாவிற்கு வழங்கும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளமை நாட்டுக்கும் உலகிற்கும் நன்றாக புலப்படுகிறது. அத்துடன் குற்றவாளிகளை ஒழிக்க இலங்கை பொலிஸ் துறையில் திறமையுடன் செயற்பட்ட ஷானி அபேசேகர போன்றவர்களை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. அனைவரும் அறிந்த ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷானி அபேசேகர இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல். இது ஹிரு தொலைக்காட்சி உரிமையாளர் துமிந்த சில்வாவின் சகோதரர் ரேனோ சில்வாவும் அரசாங்கமும் இணைந்து நடத்திய சூழ்ச்சி நாடகமாகும். இந்த தொலைபேசி உரையாடலில் ஷானி கூறுவதை பொறுமையாகக் கேட்டால் அதில் பொய் உள்ளதென சொல்ல முடியுமா?
ஷானி அபேசேகர அதிகமான நபர்களுக்கு தெரியாத நபர் என்றால், அவரால் விசாரணை செய்யப்பட்ட சுமார் 35ற்கும் அதிகமான கொலை வழக்குகளில் சந்தேபநபர்கள் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். ரோயல் பார்க் கொலை, கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க, சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிவர்கள் மீதான கொலை முயற்சி வழக்கு, அங்குலான முக் கொலை வழக்கு, சுங்க அதிகாரி சுஜித் பிரசன்ன பெரேரா கொலை வழக்கு உள்ளிட்டவை அதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சிலவாகும். களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது தமழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ள முயற்சித்த தாக்குதல், 2006ம் ஆண்டு நாட்டின் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளத் திட்டமிட்ட தாக்குதல் வழக்கு போன்றவற்றை விசாரித்து உண்மைகளை கண்டறிந்தவர் ஷானி அபேசேகர ஆவார்.
சொத்தி உபாலி கொலை வழக்கில் இரகசியங்களை கண்டுபிடித்தவரும் ஷானியே. எயிடகன் ஸ்பென்ஸ் தலைவர் ஜீ.சி.விக்ரமசிங்கவை கடத்திய போது அவரை காப்பாற்றி சந்தேகநபர்களை கைது செய்து குற்றவாளிகளாக நிரூபித்தவரும், உடவலவின்ன கூட்டுக் கொலை வழக்கில் சந்தேகநபர்களை குற்றவாளிகள் என சட்டத்தின் முன் நிரூபித்தவரும் ஷானி அபேசேகர ஆவார். இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும். இலங்கை பொலிஸ் துறையில் ஷானி அபேசேகர போன்று செயற்பட்டு குற்றச்செயல்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்த விடயத்தில் அவரை வெல்ல வேறு யாரும் இல்லை.
நாட்டின் பிரதான நபர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பின்னரே ஷானி அபேசேகரவிற்கு கஸ்ட காலம் ஏற்பட்டது. பொதுவாக இவ்வாறான விடயங்களில் ஆவணங்களை சேகரித்து கோப்புகளில் வைத்திருப்பதையே மற்றைய பொலிஸ் அதிகாரிகள் செய்வர். ஆனால் ஷானி அவ்வாறு இல்லை. கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலையின் போது அந்த குற்றத்தை புரிந்தவர்கள் யார் என்பதை குற்ற விசாரணை பிரிவு கண்டுபிடிக்க வேண்டும் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்த போது ஷானி அபேசேகர அந்த செயலை திறம்பட செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்தார். பிரதி பொலிஸ் அதிகாரியாக இருந்து பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவை இந்த கொலை வழக்கில் கூலி அடிப்படையில் கொலை செய்த சந்தேகத்தில் கைது செய்து இறுதியில் மரண தண்டனை வரை கொண்டு சென்றவர் திறமையான பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர ஆவார். 'வாஸ் குணவர்த்தன மீது கை வைக்க வேண்டாம்' என அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பணித்த போதும் அதனை கணக்கில் எடுக்காமல் ஷானி தனது கடமையைச் செய்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் பாரத லஷ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்ட போது அது தொடர்பான விசாரணை குற்ற விசாரணை பிரிவு அதிகாரி ஷானி அபேசேகரவிடமே கையளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளுக்கு அச்சப்படும் அதிகாரிகளுக்கு மத்தியில் ஷானி அபேசேகர அச்சமின்றி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரியாக செயற்படுத்தி பாரத லஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வாவை தூக்கு மேடைக்கு அனுப்பினார். 2015ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கை கையிலெடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்தவர் ஷானி. சிலர் வாக்குமூலம் அளித்தனர். பிரகீத் எக்னெலிகொடவை இராணுவ புலனாய்வு பிரிவினரே கடத்திச் சென்று கொலை செய்ததாக முதலில் நாட்டுக்கு தெரிய வந்தது. 2017ம் ஆண்டு குற்ற விசாரணைண பிரிவு பணிப்பாளர் பதவி வெற்றிடமான போது சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மேவன் சில்வாவை அந்த இடத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு பரிந்துரை செய்தனர். அதற்கு காரணம் அவருடன் டீல் வைத்துக் கொண்டாலும் அவரை தமக்கு ஏற்றால் போல செயற்படுத்திக் கொள்ள முடியும் என்பதனாலாகும். எனினும் அரசியல் அதிகாரத்தால் செயற்படுத்த முடியாத பொலிஸ் ஆணைக்குழு மைத்திரி-ரணில்-பூஜிதவின் கூட்டு முயற்சியை தோற்கடித்து குற்ற விசாரணை பிரிவு பணிப்பாளராக ஷானி அபேசேகரவை நியமித்தது. 2018ம் ஆண்டு பிணை முறி மோசடி வழக்கு விசாரணை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சுதந்திர தினத்தன்று காலை பிணை முறி மோசடி தொடர்பில் பேர்பசுவல் டெசரி நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரை ஷானி கைது செய்தார். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அரசில்வாதிகள் சுதந்திர தின நிகழ்வில் கவனம் செலுத்தி இருந்தபோது ஷானி தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
-விசேட எழுத்தாளரால் -2020 ஒக்டோபர் 28 ம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையத்தில் 'Gotabaya gets Madush and clears the way for Duminda to take back drug kingpin throne by throwing Shani under the bus' என்ற தலைப்பிலான செய்தியின் சிங்கள மொழிபெயர்ப்பின் தமிழ் வடிவம் இது.
---------------------------
by (2020-10-29 02:53:19)
Leave a Reply