(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 30 பிற்பகல் 01.30) சிறைச்சாலை கைதிகள் கொலை விடயத்தில் வரலாற்றில் பிரபல இடம் பிடித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மஹர சிறையில் நீண்ட நேரம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 50ற்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ( கொல்லப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது)
மஹர சிறைச்சாலையில் 198 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைதிகள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. சிறைக் கூடங்களுக்குள் இடைவௌி கடைபிடிக்கும் வேலைத் திட்டத்தை சிறை அதிகாரிகளும் அரசாங்கமும் முன்னெடுக்கத் தவறியதால் கைதிகள் மத்தியில் கொரோனா அச்ச நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக 29ம் திகதி மாலை இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்த போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதனை அடுத்தே சிறை அதிகாரிகளுடன் கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது கைதிகள் சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்த காரணத்தால் அதிக பொலிஸார் அழைக்கப்பட்டு தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
29ம் திகதி இரவு முழுவதும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்ட நிலையில் 30ம் திகதி காலை 8.30 மணிக்கும் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டது. இந்த மோதல் நிலைமைமை அடுத்து கொல்லப்பட்ட 8 சிறைக் கைதிகளின் சடலங்கள் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 50ற்கும் அதிகமான கைதிகள் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு சிறை அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த குழப்ப நிலையை பயன்படுத்திக் கொண்ட சுமார் 50 கைதிகள் வரை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை தொடக்கம் சிறைக்குள் இருந்து கைதிகள் சிலர் பஸ்களில் வேறு இடங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர்.
இதன்போது கைதிகளின் உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு முன்பதாகக் கூடி தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது எனக் கேட்டு சத்தமிட்டு கதறி அழுதனர். அதிகாரிகள் பதில் கூற வேண்டும் என கோரனர்.
இதேவேளை, சிறைச்சாலை நிலைமைகளை பார்வையிட இன்று காலை மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள் சென்றிருந்த போது அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் இன்று பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அரசாங்கம் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் தலைமையில் முன்னெடுக்கும் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் சிவில் நபர்களைப் போன்றே சிறைக் கைதிகளுக்கும் சுகாதார பாதுகாப்பு பெற உரிமை உள்ளதென சுட்டிக்காட்டினார்.
மூன்றில் இரண்டு அதிக அதிகாரம் கொண்ட அரசாங்கம் தற்போது இலங்கையில் கொரோனா வைரஸை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பதுடன் சிறைச்சாலைகளில் மாத்திரம் இன்று வரை 1099 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மஹர சிறையில் 3200 கைதிகள் இருக்கும் நிலையில் அதில் 198 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
---------------------------
by (2020-12-01 05:05:17)
Leave a Reply