(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 01 பிற்பகல் 04.30) அரசாங்கத்தின் உயர் இடத்து உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கைதிகள் மீதே என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 105 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையில் சுமார் 30ற்கும் அதிகமான கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகளின் சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதும் இன்னும் பீ சீ ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. எனவே தப்பிச் செல்ல முயற்சித்த சிறைக் கைதிகள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அரசாங்கம் வௌியிட்டுள்ள கருத்து முற்றிலும் பொய்யானது என்பதுடன் கொரோனா தொற்று நோயாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரே நாடு இலங்கை என்ற அவப்பெயர் வருவதை தவிர்ப்பதற்கு இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மஹர சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை தற்போது 11ஆக உயர்வடைந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. காரணம் இன்னும் சில கைதிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை சிலர் மீது திணிக்க முயற்சித்த போதும் வௌியில் இருந்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கு அமைய கைதிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 29ம் திகதி மாலை தொடக்கம் 30ம் திகதி காலை வரை விட்டு விட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதேவேளை, ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து கருத்து வௌியிட்ட சிறை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதான செயலாளர் சுதேஷ் நந்திமால், சிறைக் கைதிகள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தியமைக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள காரணம் முற்றிலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்.
சக கைதிகள் 180 பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த போதும் ஏனைய கைதிகள் தனித்து வைக்கப்படவில்லை. கொரோனா தொற்று உள்ள கைதிகளும் ஏனைய கைதிகளும் ஒன்றாகவே இருந்துள்ளனர். அதனால் கொரோனா தொற்றாளர்களை தனியாக வைக்குமாறும் ஏனைய கைதிகளுக்கு பீ சீ ஆர் பரிசோதனை செய்யுமாறும் சிறை நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கச் சென்ற கைதிகள் மீது சிறை நிர்வாகத்தினர் பொல்லால் கடுமையான தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் இந்த கடும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் சிலர் சிறை கூரையின் மீது ஏறி எதிர்ப்பு வௌியிட்ட போது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை கொலை செய்துள்ளனர். அதன் பின்னரே வன்முறை வெடிக்க ஆரம்பித்துள்ளதாக சிறை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதான செயலாளர் சுதேஷ் நந்திமால் கூறியுள்ளார்.
உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் பாராளுமன்றில் கருத்து வௌியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச மஹர சிறைச்சாலை வன்முறை வௌிநாட்டு சதி எனக் கூறியுள்ளார். ரிவஸ் என்ற பெயருடைய போதை மாத்திரை உட்கொண்டதால் கைதிகளுக்கு இரத்தம் பார்க்க வேண்டிய வெறி ஏற்பட்டு இந்த வன்முறை வெடித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ச இவ்வாறு கூறினாலும் அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் வியாபாரம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எனவே விமல் வீரவன்சவின் கருத்துபடி தனது ஜனாதிபதியின் கூற்று பொய் என்பதே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
---------------------------
by (2020-12-02 09:13:37)
Leave a Reply