(லங்கா ஈ நியூஸ் - 2021, பெப்ரவரி. 04 முற்பகல் 11.50) தெற்கில் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வடக்கில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கோரி கடந்த 3ம் திகதி காலை 9.30 மணிக்கு அம்பாறை பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி 4ம் திகதி மாலை திருகோணமலையை சென்றடைந்தது. இரண்டு நாட்களில் சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து சென்றுள்ள இந்த பேரணிக்கு முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவு அளித்துள்ளனர்.
நீதிமன்ற தடை உத்தரவு, பொலிஸ் தடை, விசேட அதிரடிப்படையின் இடையூறு என்பவற்றை தாண்டி பயணிக்கும் இந்த உரிமை பேரணி 6ம் திகதி யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவுபெற உள்ளது.
கிறிஸ்தவ மத போதகர்கள், ஆயர்கள், இந்து பூசகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினர் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
யுத்த காலத்தில் காணாமல் செய்யப்பட்ட தமது உறவினர்கள் குறித்து தகவல் வழங்காமை, தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதி அளித்த ஆயிரம் ரூபா சம்பளம், கொரோனா முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதி அளித்தல், வழக்கு விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணி அபகரிப்பு, அடக்குமுறை நிறுத்தல் போன்றவற்றை வலியுறுத்தி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற தொனிப் பொருளில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
---------------------------
by (2021-02-07 15:17:04)
Leave a Reply