வௌியிடுவது LeN உள்ளக தகவல் சேவை
(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 04 பிற்பகல் 01.55) இலங்கை விமானப் படையின் பிரதான முகாம் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படை முகாமில் உள்ள விமானப் படை சிப்பாய்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படவில்லை என்பதுடன் நாளாந்தம் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் அது தொடர்பில் கவனத்தில் எடுக்காமல் விமானப் படையின் 70வது பிறந்த தினத்தை கொண்டாடவென சிப்பாய்களின் உயிரை பலி கொடுத்து செயற்பட்டு வருவதாக லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு செய்தி வந்துள்ளது.
தற்போது கட்டுநாயக்க விமானப் படை முகாமில் சுமார் 4000 வரையான விமானப் படை சிப்பாய்கள் உள்ளனர். திருமணமான சிலரது குடும்பங்களும் அங்கு கணிசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முகாம் நபர்களில் 10% சிப்பாய்கள் அதாவது 400 பேர் வரை தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாகும்.
ஆனால் இந்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான PCR பரிசோதனை முன்னெடுக்க வசதிகள் இல்லை என்பதுடன் கொரோனா மாதிரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுநாயக்க விமானப் படை முகாம் வைத்தியசாலையில் ரெபிட் என்டிஜன் சோதனை செய்ய மாத்திரமே வசதி உள்ளது.
முகாமில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 100 சிப்பாய்களுக்கு அருகில் உள்ள கொழுவபொக்குன எனும் முகாமில் தங்கி சிகிச்சை பெற வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான விமானப் படை அதிகாரிகள் சிலருக்கு முகாம் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டுநாயக்க விமானப் படை முகாம் வைத்தியசாலையில் தகுதி வாய்ந்த எம் பீ பீ எஸ் தர வைத்தியர்கள் ஐந்து பேர் மாத்திரமே பணியில் உள்ள நிலையில் தகுதி உடைய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரே உள்ளார். வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்ட இரசாயன கூடத்தில் தொழிநுட்பவியலாளர் ஒருவர் மாத்திரமே உள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய பொறுப்புடைய வைத்தியர்கள் எவரும் இங்கு இல்லை. போதுமான அளவு தாதி உத்தியோகத்தர்களும் இல்லை. அநேகமாக தேவைப்படும் மருந்துகள் இங்கு இல்லை. மருந்து களஞ்சியசாலையில் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படாத நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேலைத் திட்டம் இல்லை. கொரோனா தடுப்பு ஊசியும் ஒரு சிலருக்கே கிடைத்துள்ளது. வேறு prophylaxis medicine போன்ற விட்டமின்கள் இங்கு இல்லை. கை உரை, முகக் கவசம், IR உபகரணம் போன்றவைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அது மாத்திரமன்றி 2020ம் ஆண்டுக்கான உரிய விமானப் படை சீருடைகளும் இங்கு உள்ள சிப்பாய்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்கையில் வேறு விமானப் படை முகாம்களில் இருந்தும் சிப்பாய்களை அழைத்து வந்து சுமார் 900 சிப்பாய்களின் பங்கு பற்றுதலில் பாரிய ஆயுத வேடிக்கை பேரணி பயிற்சி நடத்தி விமானப் படை முகாம் கட்டளையிடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட விமானப் படை பெரியவர்கள் விமானப் படையின் 70 வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சுமார் 250 விமானப் படையினர் இலங்கைக்கு வருகை தருகின்றனர். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து அழைத்து வரப்படும் சிப்பாய்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க நீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. தற்போது பயிற்சி பெற்று வரும் நபர்களில் சுகயீனம் காரணமாக வௌியேறும் நபர்களுக்கு முன்னெடுக்கப்படும் ரெபிட் என்டிஜன் சோதனையில் நாள் ஒன்றுக்கு 5 - 7 வரையான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்கள் முன்னர் கூறிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். குறித்த சிகிச்சை மத்திய நிலையமும் நிரம்பி உள்ளது. மேலும் சிலருக்கு சுகயீன நிலை காணப்பட்டாலும் அவர்கள் அதனை வௌிப்படுத்தி சிகிச்சைப் பெற மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு விசேட சம்பவம் என்னவென்றால் கட்டுநாயக்க விமானப் படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் குறித்து பிரதேச MOH அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப் படுவதில்லை. தொற்று ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை பொது சுகாதார பரிசோதகர்கள் எவரும் அந்த முகாமுக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபடவில்லை.
70வது பிறந்த தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விமானப் படை முகாம் சுத்தம் செய்யப்படும் சிரமதான பணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிப்பாய்களும் பயன்படுத்தப்படுவதால் கட்டுநாயக்க விமானப் படை முகாமில் வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.
இவ்வாறு பல சிக்கல்கள் காணப்படும் நிலையிலும் அதிகாரிகளின் தேவையாக இருப்பது விமானப் படையின் 70வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி சிப்பாய்களைக் கொண்டு பாரிய பேரணி நடத்தி நாட்டில் மாத்திரமன்றி இலங்கை விமானப் படையிலும் காணப்படும் உண்மையான பிரச்சினைகள் மற்றும் குறைப்பாடுகளை மறக்க வைக்கச் செய்வதாகும். தன்னை முன்னிறுத்திக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள இலங்கை விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவிற்கும் இந்த பேரணியை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்ற ஆசையே உள்ளது.
இரண்டு முகக் கவசங்கள் அணிந்து பேரணி பயிற்சியில் ஈடுபட விமானப் படை சிப்பாய்கள் பணிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பிரதேசத்தில் தற்போது காணப்படும் அதிக வெப்பம் கூடிய காலநிலையால் சிப்பாய்களுக்கு இரண்டு முகக் கவசம் அணிந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உக்கிரமடைந்துள்ள போதும் அதனை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காது சுகாதார தனிமைப்படுத்தல் சட்டங்களை கணக்கில் எடுக்காது இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்பட நாட்டின் பிரதான இராணுவத்திற்கு முடியுமா ?
மறு பக்கத்தில் இது விமானப் படை சிப்பாய்களின் மனிதாபிமான உரிமைகளை கொடூரமான வகையில் மீறும் செயல் இல்லையா..?
---------------------------
by (2021-03-04 16:59:14)
Leave a Reply