~

பாரிய சீனி, எண்ணெய் உள்ளிட்ட ஊழல் மோசடிகள் மூலம் அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பை மூடி மறைக்க சாலியை பயங்கரவாதியாக மாற்றி பலிகடா..!

- சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021 - மார்ச் , 17 பிற்பகல் 03.20) பாரிய அளவான சுற்றாடல் அழிப்பு, பில்லியன் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட சீனி திருட்டு மற்றும் எண்ணெய் அழிப்பு, வாழ்க்கை நடத்திச் செல்ல முடியாத அளவு அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வு போன்ற காரணங்களால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கழுத்தை நெரிக்கும் வகையில் வந்துள்ளதால் நாட்டு மக்களின் சிந்தனைகளை மாற்றி அமைத்து அவர்களின் கண்களில் மண் தூவி மீண்டும் முஸ்லிம் எதிர்ப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து முன்னாள் ஆளுநர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பயங்கரவாதியாக மாற்றப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோட்டாபய அரசாங்கத்தினால் அவருக்கு எதிராக சட்ட விரோத துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அசாத் சாலி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் போதும் அநாவசிய கருத்துக்களை முன்வைத்ததுடன் ஊடக சந்திப்பு நடத்தியும் அநாவசிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். நாட்டின் சட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தான் சரியா சட்டத்தை கடைபிடிப்பதாக அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டார். நாட்டில் வாழும் பிரஜைக்கு அந்நாட்டில் இருக்கும் சட்டத்தை மதிக்காது புறந்தள்ளி செயற்பட முடியாது. அவ்வாறு நன்கு அறிந்து வைத்திருந்த அசாத் சாலி பகிரங்க ஊடகத்தில் வந்து சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டதை அனுமதிக்க முடியாது என்பதுடன் அதற்கு பதில் கொடுக்கும் வகையில் அரசாங்கம் அசாத் சாலியை பயங்கரவாதியாக கருதி செயற்படுவதையும் அனுமதிக்க முடியாது.  

நலிவடைந்து போன நிகாப் தடை...  

வீரர் எனக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்து ஆனால் தன்னுடைய வேலை இயலாமை, பில்லியன் கணக்கில் மேற்கொண்ட ஊழல் மோசடி காரணமாக மக்கள் நம்பிக்கையை இழந்து வரும் நிலையில் மக்கள் எதிர்ப்பை சமநிலை செய்யும் வகையில் முன்னர் போன்று முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மேடை ஏற்றி வருகிறது. அதற்கென நிக்காப் என்ற புர்காவை தடை செய்யவும் மதராசா பாடசாலைகளை தடை செய்யவும் அரசாங்கத்தின் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவை பத்திரம் ஒன்றை கொண்டு வந்தார்.

வௌிப்படையான எதிர்ப்பு...

ஆனால் இந்த அமைச்சரவை யோசனைக்கு அரசாங்கத்தின் பசில் அணி தரப்பு கடும் எதிர்ப்பை வௌியிட்டதுடன் இலங்கையில் அண்டை நாடான பாகிஸ்தானும் பகிரங்க எதிர்ப்பை தெரிவித்தன. இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் பிரித்தானியா முன்வைத்துள்ள புதிய யோசனை மீதான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்று அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அமைச்சரவை பத்திரத்தை இந்த வேளையில் சமர்பித்த கழுதை யார் என பசில் ராஜபக்ஷ அணியினர் கேள்வியாக எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதுவரும் அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் செய்தி ஒன்றை வௌியிட்டு இவ்வாறு கூறியுள்ளார்.  

"பாதுகாப்பு என்ற போர்வையில் நிக்காப் தடை செய்வதன் மூலம் பொருளாதார பிரச்சினை பாரிய அளவு மேலெழும் என்பதுடன் சிறுபான்மை மக்களின் மனித உரிமை குறித்து உலக அளவில் இலங்கைக்கு எதிராக காணப்படும் அவப்பெயர் மேலும் பழுதடையும். நிக்காப் தடை என்பது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மாத்திரமன்றி உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்தும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் பிரபல இராணுவ அதிகாரி ஒருவர் நிக்காப் தடை குறித்து தனக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

முன் வைத்த கால் பின் வைத்தல்...

இலங்கை அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு அதிகரித்து வரும் சர்வதேவ முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன் வைத்த காலை பின் நோக்கி வைத்துள்ள கோட்டாபய அரசாங்கத்தின் வௌிவிவகார அமைச்சு 16ம் திகதி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் வௌிவிவகார செயலாளர் பேராசிரியர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே கீழ் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"இதுபோன்ற தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இது ஒரு முன்மொழிவு மாத்திரமே ஆகும் என்றும், இது கலந்துரையாடல்களின் கீழ் உள்ளதாகவும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வதென்பது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தீர்மானம் அல்ல என தெரிவிப்பதும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின் விரிவான கலந்துரையாடல் இடம்பெறும் என்று கூறுவதும் கேலிக் கூத்தான விடயமாகும்.

ஆதரவாளர்களை உசுப்பி விட ..

எனினும் புர்க்கா தடை மூலம் நாட்டு மக்களை உசுப்பேத்தி விட முடியாது என அறிந்து கொண்ட கோட்டா அரசாங்கம் குறித்த வௌிவிவகார செயலாளரின் அறிக்கையை வௌியிட்டு ஒருசில மணி நேரத்திற்குள் அசாத் சாலியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தமை மூலம் சாலி ஊடாக மக்கள் உசுப்பேத்திவிட முயற்சித்துள்ளது. சாலி கருத்து வௌியிட்ட பின் அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்ட போது, குற்றவியல் சட்டத்தின் சரத்துக்கள் படி 1978ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்ப சட்டத்தின்  (PTA), 2007 இலக்கம் 56 என்ற சிவில் மற்றும் அரசியல் சர்வதேச பிரகடன சட்டத்தை (ICCPR) அசாத் சாலி மீறியுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி அசாத் சாலியை பொலிஸார் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் பாதுகாப்பு செயலாளரின் கையொப்ப அனுமதியுடன் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவார். அதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை உறவினர்களுக்கு அறிவிக்காமல் இருக்க முடியும். சட்டத்தரணி ஒருவரின் உதவியை பெற இடமளிக்காமல் இருக்க முடியும்.

அசாத் சாலியின் கைத்துப்பாக்கிக்கு அனுமதிப் பத்திரம் உள்ளது ..

இன்று 17ம் திகதி காலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அசாத் சாலி கைது செய்யப்பட்ட போது அவரது வாகனத்தில் இருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் ரவைகளும் குற்ற விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இலங்கையில் துப்பாக்கி தயாரிக்கப்படுவதில்லை என்பதால் இலங்கையில் பயன்படுத்தப்படும் அனைத்து துப்பாக்கிகளும் வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் ஆகும். அப்படி இல்லை என்றால் கட்டுத் துவக்காக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் 'வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி' என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அழுத்தமாக கூறக் காரணம் அசாத் சாலி வௌிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கவே ஆகும். அசாத் சாலியின் சகோதரர் ஒருவர் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் கருத்து வௌியிடுகையில் அசாத் சாலி வைத்திருக்கும் துப்பாக்கிக்கு உரிய அனுமதிப் பத்திரம் இருப்பதாகக் கூறினார். அசாத் சாலி அனுமதிப் பத்திரம் இன்றி துப்பாக்கி பயன்படுத்தும் அளவு முட்டாள் அல்ல என்பதை சிந்திக்கத் தெரிந்த மக்கள் புரிந்து கொள்வர்.

அசாத் சாலிக்கு முன்னர் கைது செய்யப்பட வேண்டிய நபர்கள் விபரம் இதோ ...

பொலிஸார் உத்தியோகபூர்வமற்ற வகையில் அசாத் சாலி மீது சுமத்தும் குற்றச்சாட்டு என்னவென்றால் மாவனெல்ல புத்தர் சிலை மீதான தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் வனாத்தவில்லு குண்டு கண்டுபிடிப்பு சந்தேகபர்களை கைது செய்யப்பட்ட பின் விடுதலை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தம் பிரயோகித்தமை ஆகும். அது அப்படியே இருந்தால் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் கைது செய்ய வேண்டியது அழுத்தம் கொடுத்த நபரையா அல்லது விடுதலை செய்த நபரையா என்ற பிரச்சினை உள்ளது. அப்படி என்றால் அசாத் சாலிக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரையின் படி அசாத் சாலிக்கு முன்னர் முன்னாள் புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்த்தன கைது செய்யப்பட வேண்டும். ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு 5 கோடி ரூபா பணத்தை கொண்டு வந்து வழங்கியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆணைக்குழுவில் வௌியிட்ட நபரான இராணுவ பிரிகேடியர் அசாத் சாலிக்கு முன்னர் கைது செய்யப்பட வேண்டும். சஹரான் குழுவினருக்கு தவஹித் ஜமாத் அமைப்பை உருவாக்குமாறு அழைப்பு விடுத்த நிதி உதவி வழங்கிய தற்போதைய புலனாய்வு பணிப்பாளர் சுரேஸ் சாலி அசாத் சாலிக்கு முன்னர் கைது செய்யப்பட வேண்டும்.

இவை எதனையும் செய்யாமல் முஸ்லிம் மக்களின் ஜனநாயக அரசியல் தலைவராக செயற்படும் அசாத் சாலியை பயங்கரவாதியாக கை விலங்கு மாட்டி கைது செய்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை வேறு எதற்காகவும் அல்ல, நாடு முழுவதும் தமக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் வெறுப்பை எதிர்ப்பை மூடி மறைத்து மக்களின் கண்களில் மண் தூவி இனவாதத்தை காட்டவாகும். ஜனநாயக ரீதியிலான அரசாங்க எதிர் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்திற்காகும்.

இது இந்த முட்டாள் அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கும் செயற்பாடு என்பதுடன் அரசியல் தற்கொலைக்கு சமமான பிரச்சாரமும் ஆகும். இதுவே அரசாங்கத்தின் அழிவும் ஆகும்.

- சந்திரபிரதீப்

---------------------------
by     (2021-03-18 08:44:54)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links