(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச், 31 , பிற்பகல் 02.25) இலங்கை கல்வித் துறை வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு தனியார் மயப்படுத்த முயற்சிக்கும் பிரிவானது பரீட்சைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மிகவும் இரகசியமான பாதுகாப்பான பிரிவு என்பதுடன் தனியார் மயப்படுத்தப்பட்டால் நிச்சயம் மோசடி இடம்பெறக் கூடிய பிரிவாகும்.
தற்போது பரீட்சைகள் திணைக்களம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பெறுபேறுகள் அடங்கிய தகவல்களை பரீட்சைகள் திணைக்களமே கணினி மயப்படுத்தும் பணிகளை முன்னெடுக்கும். ஆனாலும் அந்த பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த முட்டாள்தன தீர்மானத்திற்கு பரீட்சைகள் திணைக்கள ஏனைய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும் அதனை கணக்கில் எடுக்காத பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று 31ம் திகதி பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.
இதில் உள்ள முக்கிய மற்றும் ஆபத்தான விடயம் என்னவென்றால் பெறுபேறுகளை கணினிக்கு தரவேற்றும் தனியார் நிறுவனம் எது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இந்த செயற்பாடுகளை பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதாக கூறுகிறார்.
பல்கலைக்கழகமும் தனியார் நிறுவனம் என்பதுடன் பரீட்சைகளுக்கு தோன்றும் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை வௌி நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் பரீட்சை மோசடிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் உள்ள அரச நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் நாட்டின் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விஷ மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி அளித்துவிட்டு பின்னர் அனுமதி வழங்கவில்லை என அறிக்கை விடுத்தமையாகும். இதனால் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் விடுக்கும் எஸ் எல் எஸ் சான்றுக்கு எவ்வித சர்வதேச வரவேற்பும் இதன் பிறகு கிடைக்காது. இது போன்றதொரு ஆபத்தான நிலையை ஏற்படுத்தவே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித முயற்சித்து வருகிறார். தனியார் மயப்படுத்தும் திட்டம் செயற்படுத்தப்பட்டால் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வௌியிடப்படும் பரீட்சை சான்றிதழ் குறித்து சர்வதேச பெறுமதி பூச்சியத்திற்கு வீழ்ச்சி அடையும்.
நன்றாக இருந்த நாட்டில் - நாம் விழுந்து குழி..!
---------------------------
by (2021-03-31 07:29:47)
Leave a Reply