- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே, 13, பிற்பகல் 09.20) லங்கா ஈ நியூஸ் நேற்று 12ம் திகதி வௌியிட்ட செய்தியை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் கைதில் இருந்த தர்மகீர்த்தி தாரக்க பெரேரா விஜேசேகர என்று அழைக்கப்படும் கொஸ்கொட தாரக்க என்ற சந்தேக நபர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஹிட் ஸ்கொட் பிரிவுக்குச் சொந்தமான பொலிஸ் கொலை காரர்களால் இன்று 13ம் திகதி அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தடவித் தடவி கருத்து வௌியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன, சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் இருந்து வௌியான தகவலை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் இன்று அதிகாலை மீரிகம ரேந்தபொல பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அப்போது சந்தேகநபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த போது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதில் கொஸ்கொட தாரக்க காயமடைந்ததாகவும் பின்னர் பொலிஸார் அவரை மீரிகம வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்து இருந்ததாகவும் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டின் போது பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார். (வத்துபிட்டிவல வைத்தியசாலை என்பது அண்மையில் தம்மிக்க பாணியை கொண்டு வந்து பரிசோதனை நடத்தியதாகக் கூறி ராஜபக்ஷக்களுக்கு கடைக்குச் சென்ற வைத்திய அதிகாரிகள் உள்ள வைத்தியசாலை ஆகும்.) இது விடயம் குறித்து அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறினார்.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் பரிசோதகரின் பெயரை வௌியிட வில்லை என்பதுடன் அது குறித்த எவ்வித சாட்சியையும் ஊடகங்களுக்கு பொலிஸ் ஊடக் பேச்சாளர் அஜித் ரோஹனவினால் வழங்கப்படவில்லை. கொஸ்கொட தாரக்க என்ற நபர் 7 கொலைகளுடன் தொடர்புபட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என அஜித் ரோஹன இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்த போதும் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் உள்ள கொஸ்கொட தாரக்க குறித்த பொலிஸ் விசாரணையில் அவர் கொலை குற்றங்களுடன் தொடர்பு பட்டவர் என்பது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. உண்மையில் மனித கொலைக்கு முயற்சி செய்தமை தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே கொஸ்கொட தாரக்க மீது உள்ளது. (குறித்த விசாரணை அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.)
இது பொலிஸார் தினமும் கூறும் முற்றிலும் பொய்யான நாடகம் ஆகும். நேற்று முன்தினம் அதாவது 11ம் திகதி தினெத் மெலான் என்ற 'ஊரு ஜுவா' என்பவர் பொலிஸ் கைதின் கீழ் இருக்கும் போது இவ்வாறு வெளியில் அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்து வழமையான காரணத்தை கூறினர். நாட்டு மக்களும் இந்த பொய் நாடகத்தை எப்போதும் நம்ப வேண்டும்.
தினெத் மெலான் என்ற 'ஊரு ஜுவா' வின் கொலை இடம்பெறுவதற்கு முன்னர் சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் சட்டத்தரணி சேனக்க பெரேரா அன்றைய தினம் இரவு ஆயுதம் காட்டுவதற்காக அழைத்துச் சென்று தினெத் மெலான் கொலை செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக முன் கூட்டியே கூறியதுடன் கொஸ்கொட தாரக்கவின் சட்டத்தரணி அனோஜ் ஹெட்டியாராச்சி நேற்று பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கொஸ்கொட தாரக்கவின் உயிர் பொலிஸ் மா அதிபரின் கீழ் உள்ள திணைக்களத்தில் இருப்பதால் அவரது உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த கடிதத்தின் பிரதிகளை சட்ட மா அதிபர், சி ஐ டி பிரிவு பணிப்பாளர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, விசேட விசாரணை பிரிவு பொறுப்பாளர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு என்பவற்றிற்கு கொஸ்கொட தாரக்கவின் சட்டத்தரணி அனோஜ் ஹெட்டியாராச்சி அனுப்பி வைத்திருந்தார்.
கொஸ்கொட தாரக்கவின் தாய் தனது மகனான கொஸ்கொட தாரக்க கொலை செய்யப்பட உள்ளதாக செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள கொஸ்கொட பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணிகள் மற்றும் தாரக்கவின் தாயின் வினயமான கோரிக்கைக்கு அமைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் பலரும் கொஸ்கொட தாரக்கவின் கொலையை தடுப்பதற்கு பாரிய முயற்சிகளை செய்தனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி ஒருவரான எமது கட்டுரையாளர் கீர்த்தி ரத்நாயக்க கொஸ்கொட தாரக்கவின் கொலை சதித் திட்டம் குறித்து லங்கா ஈ நியூஸ் ஊடாக நேற்று மாலை முழுமையாக வௌிப்படுத்தி இருந்தார். இந்த கொலையுடன் தொடர்புபடப் போகும் பொலிஸ் அதிகாரிகளின் பெயர் விலாசம் கொண்டு முழுவதையும் அவர் வௌியிட்டார். (தேசபந்துவின் ஹிட் ஸ்கொட் பிரிவு இன்று இரவு கொஸ்கொட தாரக்கவை கொலை செய்ய முயற்சி! என்று செய்தி வௌியிட்டு இருந்தார்.)
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கையில் "ஆம் நாம் எமது கைதின் கீழ் உள்ள நபர்களை கொலை செய்வோம். ஏன் நீ என்ன செய்ய போகிறாய்?" என்று கேட்பது போல இன்று அதிகாலை தமது கைதின் கீழ் இருந்த கொஸ்கொட தாரக்கவை நிராயுதபானியாக வைத்து கொலை செய்து பின்னர் ஊடகங்களுக்கு முன் வந்து பொய் புரட்டும் கூறினர். அது மாத்திரமன்றி அடுத்தடுத்த நாட்களில் செய்த கொலைகளின் புகைப்படங்களையும் பகிரங்கப்படுத்தினர். கொலை செய்யப்படுவதற்கு முன்னர் சந்தேகநபர்கள் இருவரும் கை விலங்கிட்டு இருக்கும் புகைப்படத்தையும் கொலை செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்கள் இரத்த வௌ்ளத்தில் உள்ள புகைப்படத்தையும் பொலிஸாரே வௌியிட்டனர். (அந்த கொடூரமான புகைப்படங்கள் இங்கு உள்ளன.) ஆனால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகக் கூறும் பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் அல்லது காயப்பட்ட பின் துப்பாக்கிச் சூடு உள்ள புகைப்படம் எதனையும் ஊடகங்களுக்கு பொலிஸார் வழங்கவில்லை.
இந்த வகையான மிகவும் கொடூரமான காட்டு மிராண்டித் தனமான பொலிஸ் படுகொலைகளை நியாயப்படுத்தி அதற்கு ஒத்தூதுவதற்கு கேவலமான கேடுகெட்ட நபர்களுக்கு மாத்திரமே முடியும் என்ற போதும் சட்டத்தை மதிக்கின்ற நீதிக்கு தலை வணங்கும் நபர்களால் இதனை நியாயப்படுத்தி அனுமதிக்க முடியாது. அதனால் இப்போது இந்த கொடூரமான நீதி விரோத கொலைக்கு நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொது மக்கள் உண்ணிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு நீதவான் விசாரணை நடத்தப்படும் போது பொலிஸாரின் பச்சை நாடகப் பொய்களை அப்படியே நம்பி நீதிமன்றம் ஏமாறுமா என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் கொலை குறித்த அனைத்து தகவல்களும் நேற்றைய தினம் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்ட போதிலும் பொலிஸாரின் பேச்சை நீதிமன்றம் நம்புமா என நாட்டில் சட்டத்தின் ஆட்சியை விரும்பும் நபர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
இதற்கு இணையான மற்றுமொரு சம்பவம் அண்மைய காலத்தில் இடம்பெற்றது. அது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரட்னவின் சட்டக் கல்லூரி மகன் மீது பேலியகொட பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட மிளேச்ச தாக்குதல் சம்பவம் ஆகும். இது விடயம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் பச்சை பொய்களை அவிழ்த்து விட்டனர். வழக்கு விசாரணை செய்த கொழும்பு நீதவான் பொலிஸார் நீதிமன்றுக்கு முன்னாள் வந்து கூறும் சோடிக்கப்பட்ட கதைகளை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்தார். அதனால் மைத்திரி குணரட்னவின் சட்டக் கல்லூரி மகனுக்கு பிணை வழங்கிய நீதவான் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பேலியகொட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் டி சில்வாவை கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பித்தார். அதன் பின் லின்டன் டி சில்வாவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபரும் பிடியாணை பிறப்பித்தார். ஆனால் லின்டன் உள்ளிட்ட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களை பணி நீக்கம் செய்ததுடன் பொலிஸார் நின்று விட்டனர். லின்டன் டி சில்வா என்பவர் இதற்கு முன்னரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஆவார். இன்று வரை மைத்திரி குணரட்னவின் மகனுக்கு நியாயம் கிடைக்காமல் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற போதும் பணி நீக்கம் செய்யப்பட்ட லின்டன் டி சில்வாவை பொலிஸ் மா அதிபர் மீண்டும் சேவையில் இணைத்துள்ளார். இதன் மூலம் வௌிப்படும் உண்மை என்னவென்றால் பொலிஸார் கூறும் சோடிக்கப்பட்ட கட்டுக் கதைகளை நீதிமன்றம் நம்புவதில்லை என்ற போதும் நீதிமன்ற உத்தரவுகள் பணிப்புகளை சட்ட மா அதிபரின் உத்தரவுகளை பொலிஸார் கணக்கில் எடுக்காது செயற்படுவது புலப்படுகிறது அல்லவா?
கொஸ்கொட தாரக்கவின் கொலை குறித்த அனைத்து தகவல்களும் உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொடூரமான காட்டு மிராண்டித் தனமான பொலிஸ் கொலையில் நீதிமன்றம் பொலிஸாரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டால் இந்த மிளேச்ச கொடூர கொலைகளுக்கு நீதிமன்றமும் துணை என்கிற கருத்து உருவாவதுடன் சர்வதேச சமூகமும் இதனை ஏற்றுக் கொள்ளாது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை அரசாங்கம், பொலிஸார், நீதிமன்றம் இணைந்து கொலை செய்யுமாயின் நாட்டு மக்களின் நிலை கடவுளுக்குத் தான் வௌிச்சம்.
கொரோனா ஒழிப்பு விடயத்தில் தவறிப் போயுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தங்களது பெயரை காப்பாற்றிக் கொள்ள அல்ல நிலைநாட்டிக் கொள்ள மேற்கொள்ளும் இந்த கொலைகளை பாதாள உலகக் குழு தலைவர்களுடன் முடிக்காமல் எதிர்காலத்தில் தமக்கு எதிராக செயற்படும் அனைவர் மீது செயற்படுத்துவர் என்பதை நாம் நன்கு அறிவோம். ரத்துபஸ்வல பகுதியில் குடிநீர் கேட்டு வீதிக்கு இறங்கிய அப்பாவி மக்கள் மீது ராஜபக்ஷக்கள் பாய்ச்சிய துப்பாக்கி ரவை எமக்கு நன்கு நினைவில் இருக்கிறது.
---------------------------
by (2021-05-14 12:42:55)
Leave a Reply