நாங்கள் மரண பயத்தில் வாழ்ந்து வருகிறோம் .. மறைந்து வாழும் இராணுவ சிப்பாய்கள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு கடிதம்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன், 02. பிற்பகல் 2.25) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முதலாவது சூத்திரதாரி என மேல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அப்போதைய கிரிதலே இராணுவ முகாமில் கட்டளை இடும் அதிகாரியாக செயல்பட்ட கேனல் சம்மி குமாரரத்ன என்ற கொலையாளி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவர் அந்தப் பிரிவில் இருந்து கொண்டு பாதாள உலகக் குழு தலைவர்களுடன் தொடர்பினை வைத்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை வைத்துக் கொண்டு பாரிய அளவு கப்பம் பெற்று தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் இந்த இரகசியங்களை அறிந்த புலனாய்வு பிரிவு சிப்பாய்கள் சிலரை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி குறித்த புலனாய்வுப் பிரிவு சிப்பாய்கள் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர். குறித்த கடிதத்தில் வெளியிடப்பட்டுள்ள பல விடயங்கள் வருமாறு,
2021 ஜுன் 01
இந்த கடிதத்தை எழுதும் நாம் அண்மைக் காலமாக இராணுவ புலனாய்வு பிரிவின் போதைப் பொருள் சுற்றிவளைப்பு பணியில் ஈடுபட்டு வந்த சிப்பாய்கள் சிலராவோம்.
அண்மைக் காலத்தில் பத்தமுல்லையில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு பிரிவில் நடைபெற்ற பாரிய அளவான ஊழல்கள் மற்றும் மோசடிகள், இலங்கையில் பணக்கார நபர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட பாரிய கொள்ளைகள் தொடர்பில் உங்கள் இருவருக்கும் தெரியும் என்றே நினைக்கிறோம்.
குறித்த பணிகளில் ஈடுபட்டிருந்த நாம் தற்போது அதில் இருந்து நீக்கப்பட்டு வேறு பிரிவில் சேர்க்கப்பட காரணம் இந்த ஊழல், கப்பல், மோசடி தொடர்பில் வௌியில் தகவல் கசியவிடுவோம் என்ற அச்சத்தில் ஆகும்.
ஆனால் பாதுகாப்பு செயலாளர் அவர்களே, இராணுவத் தளபதி அவர்களே, தற்போது கடமையில் உள்ள எமக்கு அந்த ஊழல் நிறைந்த உயர் அதிகாரியுடன் தொடர்பு வைத்துள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் விடுக்கப்படும் தொடர்ச்சியான மரண அச்சுறுத்தலால் வெவ்வேறு இடங்களில் மறைந்து மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம்.
இதன் காரணமாக நாம் எங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ்க்கை நடத்தக் கூட முடியாமல் இரகசிய வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
புலனாய்வு பிரிவினரால் நாம் இருக்கும் இடத்தை தொலைபேசி ஊடாக கண்டு பிடிக்க முடியும் என்பதால் எமது கையடக்கத் தொலைபேசியையும் நாம் பயன்படுத்தாது நிறுத்தி வைத்துள்ளோம்.
இந்த பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை நடத்தி எமது உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறும் பணிவுடன் வினயமாகக் கேட்டுக் கொள்கிறோம்.
ஜெனரல் ஹேவாவிதாரனவின் காலமான 2020 பெப்ரவரி, மார்ச் மாத காலத்தில் இந்த வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமையை கேர்னல் சம்மி குமாரரத்ன ஏற்றுக் கொண்டார். இவரின் கீழ் மேஜர் கசுன் கருணாரத்ன இராணுவ புலனாய்வு பிரவு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சோதனை நடவடிக்கை கடமைகளில் இணைந்து கொண்டார். மேஜர் கசுன் கருணாரத்ன என்பவர் கேனல் சம்மி குமாரரத்னவின் நெருங்கி நண்பர் ஆவார். இந்த பணிகளில் இணைக்கப்பட்ட ஏனைய நபர்கள் மற்றும் கேர்னல் மஹதன்னில ஆகியோருடன் இணைந்து நாட்டின் பிரதான பாதாள உலகக் குழு தலைவரான தெமட்டகொட சமிந்த மற்றும் அவரது சகோதரர் ருவான் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தனர். ( தெமட்டகொட சமிந்த தற்போது சிறையில் இருப்பதால் அவரது போதைப் பொருள் வியாபாரத்தை சகோதரர் ருவான் முன்னெடுத்து வருகிறார்)
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நாம் சோதனை நடவடிக்கைகளின் போது சரியான தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கிய போதும் அவர்கள் சரியாக செயற்படவில்லை.
இது ஏன் என்று நாம் தேடிப் பார்த்த போது தெமட்டகொட சமிந்தவின் ஹெரோயின் போதைப் பொருட்களை பிடிப்பதில்லை எனவும் அவருக்கு எதிரான நபர்கள் முன்னெடுக்கும் போதைப் பொருள் வியாபாரத்தை மாத்திரம் பிடிப்பது எனவும் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளமை எமக்கு தெரிய வந்தது. அதனால் சமிந்தவின் ஹெரோயின் வியாபாரம் குறித்து நாம் தகவல் வழங்கினால் அதனை பிடிக்க மாட்டார்கள். தவறியும் பிடிக்கப்பட்ட ஹெரோயின் தொகைகள் மீள ருவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் கைது செய்ததாக முன் நிறுத்தப்படும் ஹெரோயின் தொகையும் மிகவும் குறைவாகும்.
ஹெரோயின் கொள்வனவு செய்யும் போர்வையில் கொழும்பு முதலாளிகளிடம் மீள தருவதாகக் கூறி கடன் அடிப்படையில் எனக் கூறி பணம் வாங்கி உள்ளனர். சில வேளைகளில் அந்த பணத்தை பெற்று வர எம்மையும் அனுப்பி உள்ளனர். ஆனால் அவ்வாறு வாங்கும் பணத்தை ஒருநாளும் திருப்பிக் கொடுப்பதில்லை. அது கப்பமாகப் பெறப்படும் பணமாகும்.
இவ்வாறு தினமும் பணம் பெற்றதுடன் ஒரு வருடத்திற்குள் இவ்வாறு பெற்ற பணத் தொகையை எண்களால் கணிக்க முடியாது. இராணுவ புலனாய்வு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவால் மீட்கப்படும் பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருளில் பொலிஸாருக்கு சிறிய அளவே முன்வைக்கப்படும். மறைக்கப்படும் ஹெரோயின் போதைப் பொருட்கள் கேனல் குமாரரத்னவின் அடியாட்கள் ஊடாக மீண்டும் முதலாளிகளிடம் வழங்கப்படும்.
விசேட போதைப் பொருள் சுற்றி வளைப்புக்கு தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ சிப்பாய்கள் மாத்திரமே அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் தொகைக்கு சன்மானமாக 30 லட்சம் வரை கிடைத்த போதும் சுற்றி வளைப்பில் பங்குபற்றி ஏனைய அதிகாரிகளுக்கு இன்று வரை ஒரு சதம் பணம் கூட வழங்கப்படவில்லை. அந்த பணத்தை கேனல் சம்மி குமாரரத்ன மற்றும் மேஜர் கசுன் கருணாரத்ன ஆகியோர் பிரித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் வழங்கிய நபர்களுக்கு புலனாய்வு பணிப்பாளர் சபை ஊடாக சன்மான பணம் வழங்கிய போதும் அந்த சன்மான பணம் தகவல் வழங்கிய நபர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்த பணத்தை கொண்டு கேனல் சம்மி மற்றும் ஏனைய அதிகாரிகள் ஹபரண மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் காணிகளை விலைக்கு வாங்கி உள்ளனர்.
அண்மைக் காலத்தில் கேனல் சம்மி குமாரரத்ன ஏதோ ஒரு காரணத்திற்காக இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்து நீக்கி இராணுவ தலைமையகத்திற்கு இணைக்கப்பட்டுள்ளார். அதன் பின் கேனலாக (புலனாய்வு) செயற்படும் கேனல் சந்திக்க மஹதன்னில இந்த பிரிவை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த மோசடி, கப்பம் செயற்பாடுகளின்பின்னணியில் இருக்கும் பிரதான சூத்திரதாரி கேனல் மஹதன்னில என்பதால் கேனல் சம்மி, மேஜர் கசுன் ஆகிய மூவரும் இணைந்து செய்த ஊழல் மோசடி கப்பம் பெற்ற செயல்களை எங்கள் மீது சுமத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
அத்துடன் எம்மை பணிகளில் இருந்து நீக்கி நாம் முன்னர் இருந்த பிரிவுகளுக்கு மாற்றி உள்ளனர். இன்று எமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பதுடன் அவர்களின் தவறுகள் ஊழல்கள் அடங்கிய இரகசியம் வௌியாகி விடும் என்ற அச்சத்தில் எம்மை கொலை செய்ய முயற்சித்து வருவதை நாம் தெரிந்து கொண்டதால் உயிர் பாதுகாப்பு கருது நாம் சிலர் மறைந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இது தொடர்பில் மிக விரைவில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி எமது உயிர்களுக்கு உள்ள அச்சுறுத்தலை நீக்கித் தருமாறு உங்கள் இருவரிடம் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கையொப்பம் இட்டவர்கள்,
( லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் அவர்களின் பெயர்களை வௌியிடாமல் இருக்கிறோம் - உப தலைப்புகள் எம்முடையது )
---------------------------
by (2021-06-03 01:21:16)
Leave a Reply