~

கொரோனா தடுப்பூசி மருந்தேற்றும் நகைச்சுவை நாடகங்களும் போலி மருந்து வியாபாரிகளும்

Dr முரளி வல்லிபுரநாதன்

(லங்கா ஈ நியூஸ் - 2021. ஜூன். 25, பிற்பகல் 11.34 ) கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா  தடுப்பூசி மருந்தேற்றும் திட்டமானது மிகவும் மெதுவாக இன்று வரை 11.4% மக்கள் ஒரு தடுப்பூசியை ஆவது பெற்றுக் கொண்டுள்ளதாகவும் 3.9% மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விகிதத்தில் தடுப்பூசிகள் தொடர்ந்து ஏற்றப்பட்டால் போதியளவு நோய் எதிர்ப்பு சக்தியை இலங்கை குடித்தொகை பெற்றுக் கொள்ள 80% மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டிய நிலையில் முதலாவது தடுப்பூசி ஏற்றி முடிக்க 3 வருடங்கள் எடுக்கும். அதுபோல இரண்டு ஊசிகளையும் ஏற்றி பூரணப்படுத்துவதற்கு 6 வருடங்கள் எடுக்கும் என்று எதிர்வு கூறும் கணிப்பீடுகள் காட்டுகின்றன. பல நாடுகளில் அரசியல்வாதிகளின் தலையீடு எதுவும் இன்றி விரைவாக இந்த வருடத்துக்குள் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டங்கள் சுகாதாரத்துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது .  ஏனெனில் திரிபடைந்த கொரோனா வைரஸ்கள்  புதிதாக உருவாகி வரும் நிலையில் அவற்றுக்கு எதிராக புதிய தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏற்றுவதற்கு இந்த நாடுகள் தயாராகி வரும் நிலையில்   இலங்கையில்  சுகாதாரத்துடன் தொடர்பில்லாத விளையாட்டு மற்றும் மீன்பிடி அமைச்சர்கள் ஆயுதப்படை தளபதிகள் சிறிதளவு தடுப்பூசி மருந்துகளை வைத்துக்கொண்டு அவற்றை மெதுவாக ஏற்றி நாட்டை காக்க முடியும் என்பது போல நகைச்சுவை நாடகங்களை நடத்தி தடுப்பூசி மருந்துகளுடன் படங்களை எடுத்து ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகிறார்கள். 

தடுப்பூசி மருந்தேற்றும் திட்டத்தில் உள்ள தாமதத்தினால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள  பீதியை மூலதனமாக வைத்துக் கொண்டு மீண்டும் பல போலி மருந்துகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை எதுவுமே கொரோனா நோயை குணப்படுத்தவோ அல்லது நோய்ப்பரவலை  கட்டுப்படுத்தவோ முடியாதவை என்பதை சுகாதார அமைச்சருக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கொரோனா வராமல் இருப்பதற்கான தம்மிக்க பாணியை அருந்தி பிரபலப்படுத்திய  அமைச்சர்  கொரோனா நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த விடயம் தொடர்பான ஆதாரங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. எனவே போலி மருந்துகளை உள்ளெடுப்பதை விடுத்து சரியான முகமூடி அணிவது, சமூக இடைவெளியை பேணுவது,  மற்றும் கைகளை சுத்தம் செய்வதே எங்களை காப்பாற்றும். 
நன்றி!

Dr முரளி வல்லிபுரநாதன்

சமுதாய மருத்துவ நிபுணர் 

---------------------------
by     (2021-06-25 21:57:26)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links