~

ஞாயிறு குண்டுத் தாக்குதல் குற்றச் செயலில் காணாமல் போன 'பக்கங்கள்' இதோ..! சோனிக் சோனிக் என்பது யார் என வெளியாகியது..! ரவிராஜ் கொலை மறைத்தது தொடக்கம் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் வரை கோட்டா, சிறிசேன, நிலந்த..!

- அம்பலப்படுத்துவது சுனந்த தேசப்பிரிய

(லங்கா ஈ நியூஸ் 2021 - ஜூலை 23 பிற்பகல் 04.15 ) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் அதிருப்தி மற்றும் சோகத்திற்கு உள்ளான இந்த நாட்டு மக்கள் மத்தியில் 'அமங்கல வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தல்' போன்று கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அறிவிப்பை தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் வெளியிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுக்கும் போது தற்கொலை குண்டுத் தாக்குதல்களால் பல உயிர்கள் பலியாகி ஓரிரு தினங்களே கடந்திருந்தன. 

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களில் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தார். 

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியே அவர் தேர்தலுக்கு முன் நிலையானார். இன்று கோட்டாபய ராஜபக்ஷ என்ற பலமான ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் இன்னும் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அடி முடி கண்டு பிடிக்கப்படவில்லை. 

தற்போது ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஒரு மாத கால அவகாசம் வழங்கி உள்ளார். அப்படி நடக்காவிட்டால் நாடு முழுவதும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் மற்றும் ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியும் இணையும். 

ஆணைக்குழு பரிந்துரைகள் இரண்டையும் ராஜபக்ச கணக்கில் எடுக்கவில்லை ..

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இறுதியில் அவருக்கே மரண அடியாக மாறி விட்டது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுக்காமல் கவனயீனமாக இருந்தமைக்காக மைத்திரிபால சிறிசேன மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என குறித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் அப்போதைய அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயல்பட்ட தற்போதைய பிரதி பொலிஸ் மா அதிபரான நிலந்த ஜயவர்தன மீதும் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

இந்த இரண்டு பரிந்துரைகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கணக்கில் எடுக்காது புறந்தள்ளி உள்ளார். ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அனைவரது பிரவேசமும் 'குருடன் மற்றும் யானை' தொடர்பான கதைக்கு ஒப்பானது. அவர்கள் காடுகளை பார்க்காமல் மரங்களை மாத்திரம் பார்க்கின்றனர். 

பார்க்க வேண்டிய வனம்.. 

ராஜபக்சக்ளை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு மைத்திரிபால சிறிசேன சட்டவிரோத சூழ்ச்சிகளை மேற்கொண்டவர் மைத்திரிபால சிறிசேன ஆவார். ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சூழ்ச்சி செய்யப்பட்டது. ஆனாலும் அந்த சூழ்ச்சி ஜனநாயக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த சூழ்ச்சியின் பின்னர் மைத்திரிபால சிறிசேன அரச பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஏனையவர்களை ஒதுக்கி வைத்தார். அது எவ்வளவு தூரம் என்றால் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்த போது பாதுகாப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த போது படைகளின் பிரதானியை தொலைபேசியில் அழைத்து பாதுகாப்பு கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். 

மைத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சியின் காரணமாக நடைபெற்ற 52 நாள் ஆட்சி காலத்தில் நாட்டின் முழு பாதுகாப்பும் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் இருந்தது. 

அரசியல் யாப்பு விரோத சூழ்ச்சி தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு விசாரணைகளுக்கு செல்ல வேண்டாம் என விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த பொலீஸ் அதிகாரிகளுக்கு மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். ( ஞாயிறு விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சானி அபேசேகர வழங்கிய சாட்சி )

ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை இன்னும் ரகசியம்.. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் ரகசியமாகவே உள்ளது. இந்த விசாரணையின் போது தயாரிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய ஆவணம் சட்ட மா அதிபருக்கு மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் கண்காணிப்புகள் அடங்கிய 500 பக்க முதல் ஆவணம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கங்களில் பரிந்துரைகள் மற்றும் பாரிய தாக்கங்கள் அல்லாத பிரிவுகளே காணப்படுகின்றன. 

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பின் மத்திய நிலையமாக தேசிய புலனாய்வு பிரிவு காணப்படுகிறது. ஏனைய அனைத்து பாதுகாப்பு உபாய மார்க்கங்களும் அரச புலனாய்வு தகவலுக்கு அமையவே முன்னெடுக்கப்படும். அனைத்து புலனாய்வுத் தகவல்களும் ஒன்று சேர்க்கப்படும் மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் மத்திய நிலையமாக தேசிய புலனாய்வு பிரிவு காணப்படுகிறது. தேசிய பாதுகாப்பின் மூளை என இதனை சரியாகக் கூறலாம். இதன் பிரதானி 24 மணி நேரமும் மிகவும் அவதானமாக இருப்பார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை தொடர்பு கொள்ளக் கூடிய விசேட நபராக இவரது பதவி காணப்படுகிறது. 

உணர்ச்சிவசப்பட்டு வாயு வெளியேறி விட்டோம் என உணர்தல்..

சாட்சிகளை அளித்த பின் இறுதியில் நிலந்த ஜயவர்தன "நான் யாரையும் பாதுகாக்க வில்லை சுவாமி" என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி "நாம் நீங்கள் யாரையும் பாதுகாப்பதாக கூறவில்லையே" என்று தெரிவித்தார். (thecolomboexpress.com) 

மைத்திரிபால சிறிசேனவின் யாப்பு விரோத சூழ்ச்சி ஆட்சியின் போதும் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் நடைபெற்ற சந்தர்ப்பத்தின் போதும் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானியாக நிலந்த ஜயவர்தனவே செயல்பட்டார். தற்போது அவர் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்படுகிறார். 

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முன்கூட்டிய புலனாய்வுத் தகவல் முதலில் இவருக்கே கிடைத்தது. ஞாயிறு தாக்குதல் மற்றும் 52 நாள் ஒக்டோபர் சூழ்ச்சி தொடர்பான தேசிய புலனாய்வு பிரிவு தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது நிலந்த ஜயவர்த்தனவின் தொலைபேசியில் ஆகும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் இதில் அடங்கும். அது அவரது தனிப்பட்ட தொலைபேசியாக இருந்தாலும் அவர் அதனை கடமைகளுக்காக பயன்படுத்தியுள்ளார். அதனால் அந்த தொலைபேசி அரச புலனாய்வு சேவையின் உபாய மார்க்கமாக இருந்தது. 

இவ்வாறான உயர் புலனாய்வு பிரிவில் பிரதானி பதவி வகிக்கும் பொலீஸ் அதிகாரி தனது கடமை தகவல்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசி தேவையான எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விசாரணைக்கு அவசியம் என்பதை அறிந்து வைத்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிலந்த ஜயவர்தன தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த அனைத்து தரவுகளையும் மீளப் பெற முடியாத அளவிற்கு ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்ற காலத்தில் அழித்துள்ளார். 

ஆணைக்குழு அறிக்கை இது தொடர்பில் புதுமையான மௌனம்..!

நிலந்த ஜயவர்தன ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கி தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கவில்லை என கூறினார். அது தகவலை மறைத்த குற்றத்துக்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியுமான விடயமாகும். அத்துடன் தாக்குதல்கள் மற்றும் விசாரணைகள் தொடர்பான தரவுகள் அடங்கிய தொலைபேசி ஆவணத்தை முழுமையாக அழித்தமை சாட்சிகளை மறைத்தலுக்கு சமமான குற்றமாகும். 

தொலைபேசி தரவுகள் அழிக்கப்பட்டமைக்கு சிறுபிள்ளைத்தனமாக காரணம் கூறி உள்ள நிலந்த ஜயவர்தன தான் தொலைபேசியை தனது மனைவியிடம் வழங்கியதாகவும் அதன்போது தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சாட்சி அளித்துள்ளார். உயர் புலனாய்வு அதிகாரி என்ற அடிப்படையில் தனது தொலைபேசியை வேறு நபருக்கு வழங்குவதாக இருந்தால் அதிலுள்ள முக்கிய தரவுகளை மற்றுமொரு இடத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியமான விடயமாகும். ( இவ்வாறான உயர் பதவியில் இருந்து அதிக சம்பளம் பெறும் நபர் ஒருவர் தனது மனைவிக்கு புதிய தொலைபேசி கொள்வனவு செய்து கொடுக்காமல் பாவித்த தொலைபேசியை வழங்கினார் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. ) 

சானி அபேசேகரவின் சாட்சி..

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவிடம் கீழ் கண்டவாறு கேள்வி எழுப்பியது. 

"அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார். இந்தத் தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவிக்கவில்லை என அவர் கூறினார். நீங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?"

இந்தக் கேள்விக்கு சானி அபேசேகர அளித்த பதில் மிகவும் முக்கியமானது. 

"சுவாமியே, நிலந்த ஜயவர்தன இந்த தகவலை சரியாக கூறினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இந்தத் தகவலை ஜனாதிபதியிடம் கூறவில்லை என நிலந்த ஜயவர்தன கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் நாட்டின் தேசிய பாதுகாப்பு, அரசியல், பொது மக்களின் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அன்றாடம் இடம்பெறும் சம்பவங்களை புலனாய்வு சேவை பிரதானி ஜனாதிபதிக்கு கட்டாயம் தெரிவிப்பார். கிடைக்கப் பெறும் முதலாவது தகவல் ஜனாதிபதிக்கு தான் செல்லும். நாட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களையும் அரச புலனாய்வு சேவை ஊடாகவே ஜனாதிபதி அறிந்து கொள்கிறார். அதனால் ஜனாதிபதி இது விடயம் குறித்து அறிந்து வைத்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை."

சானி அபேசேகர மேலும் கீழ் கண்டவாறு கூறினார். 

"தாக்குதலின் பின்னர் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன் சாட்சி அளிக்க வேண்டாம் எனக் கூறுவதற்கு ஜனாதிபதி எங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்திருந்தார்.ஏ அப்போது என்னிடம் (தாக்குதல் தொடர்பில்) தெரியப்படுத்த வில்லை என்று கூறினார். மேலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏன் என்னிடம் (மைத்திரிபால சிறிசேனவிடம்) கூறவில்லை என நிலந்தவிடம் கேட்கவில்லை." ( மேற்கோள் : https://www.facebook.com/SriANetwork/posts/580129462901341/ ஊடாக)  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் காட்டிய அக்கறை இதிலிருந்து விளங்குகிறது. 

இப்போது பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கிற்கு செல்வோம்..!

உள்நாடு மற்றும் வெளிநாட்டை உலுக்கிய மற்றுமொரு மனித கொலை விவகாரம் தொடர்பில் நிலந்த ஜயவர்தன சாட்சி அளித்திருந்தார். அது பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு விசாரணையில் ஆகும். 

அப்போது நிலந்த அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக இருந்தார். ஆனாலும் புதுமையான விடயம் என்னவென்றால் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்த சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக சாட்சி அளித்தார். அவர் கொலை செய்யப்பட்ட நபர் தரப்பிற்கு சார்பாக சாட்சி அளித்தார். 

அரச புலனாய்வுச் சேவையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருடம் இது தொடர்பில் வினவியபோது, அரச புலனாய்வு சேவை அதிகாரிகள் வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றம் செல்வதில்லை எனவும் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு தகவல்களை வழங்கிய பின்னர் குற்ற விசாரணைப் பிரிவினர் சாட்சிகளை தேடிக் கொண்டு நீதிமன்றத்திற்கு முன் செல்வர் என கூறினார். எனினும் புதுமை அடையக்கூடிய விடயம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் அரச புலனாய்வு சேவை அதிகாரி நீதிமன்றத்தில் சென்று சாட்சி அளித்தமையாகும். அதுவும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் சாட்சி அளித்துள்ளமை அபூர்வமான விடயமாகும். 

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொகாந்த அபேசூரிய முன்னெடுத்துச் சென்றார். இதில் பிரதான சந்தேகநபரான பிரித்தி விராஜ் மனம்பேரி என்ற பொலீஸ் அதிகாரி இந்த கொலையுடன் நேரடி தொடர்புபட்டுள்ள உதவி புரிந்த குற்றவாளியாக கருதப்பட்டார். சட்ட மா அதிபரால் அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின் காரணமாக அவர் இந்த வழக்கின் முதலாவது அரச சாட்சியாளராக பெயரிடப்பட்டார். 

பிரித்தி விராஜ் மனம்பெரி என்பவர் நடராஜா ரவிராஜ் கொலையாளியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் என்ற போதும் வேறு கண்ணால் பார்த்த சாட்சிகள் இல்லை என்பதால் அவருக்கு நிபந்தனை நிவாரண அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்க சட்ட மா அதிபர் தீர்மானித்தார். குறித்த வழக்கு இந்த காட்சியின் காரணமாகவே நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்தது. 

பிரித்தி விராஜ் மனம்பெரி ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் சாரதியாக செயல்பட்டார். 

வழக்குடன் தொடர்புடைய ஒரு பிரதிவாதி உயிரிழந்து விட்டார். கருணா தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்தனர். ஏனைய மூன்று சந்தேக நபர்கள் கடற்படை புலனாய்வு பிரிவில் பணியாற்றினர். 

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைக்கு இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அதற்கு முன்னர் அறிவித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிய கருணா அம்மான் தரப்பிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பத்து துப்பாக்கிகளில் ஒன்று அது என பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. 

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டது. 

கருணா பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுக்கும் குற்றங்கள் மிகவும் பயங்கரமானவை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

ரவிராஜ் கொலை சூத்திரதாரிகள் நிலந்த ஜயவர்தன வழங்கிய சாட்சியின் பின்னரே விடுதலை செய்யப்பட்டனர்.. 

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சூத்திரதாரிகள் நிலந்த ஜயவர்தன பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழங்கிய காட்சியை அடுத்தே விடுதலை செய்யப்பட்டனர். 

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட போதும் அதன் வழக்கு விசாரணைகள் 2016 ஆம் ஆண்டே நிறைவு பெற்றன. மிகவும் கடினமான விசாரணை வலையமைப்பின் பின்னர் பத்து வருடங்கள் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு இரகசிய பொலீசாரும் சர்வதேச பொலீசாரும் உதவி வழங்கி இருந்தனர். 

கொலையாளி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கொண்டு சென்ற பையில் காணப்பட்ட பின் (அலுப்புநாத்தி) ஒன்றில் படிந்திருந்த ரத்தம் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலீஸ் கான்ஸ்டபிள் செனவிரத்னவின் இரத்த மாதிரியும் டிஎன்ஏ பரிசோதனைக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இலங்கையில் மரண தண்டனை செயற்பாட்டில் இருப்பதால் மனித கொலைக்கு சாட்சியாக இருக்க முடியாது எனக் கூறி இங்கிலாந்து நிறுவனம் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளை வழங்க மறுத்து விட்டது. 

ரவிராஜை கொலை செய்ய கோட்டாபய கருணாவிற்கு 5 கோடி ரூபாய் வழங்கினார்...

இதற்கு மேலதிகமாக புலனாய்வு தகவல் பிரிவு முன்னாள் பொலீஸ் கான்ஸ்டபிள் லியனாராச்சி அபேரத்ன என்பவர் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து, பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐந்து கோடி ரூபா பணத்தை கருணா தரப்பிற்கு வழங்கியதாக கூறியிருந்தார். இந்தப் பணத்தை புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய 'வசந்த' என்ற நபர் வழங்கியதாக அவர் மேலும் கூறியிருந்தார். ( தகவல் மூலம் 2016.02.27 தினமின செய்தி) 

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முதல்மறையாக அப்போதைய கருணா அம்மானுக்கு அடுத்தபடியான பிள்ளையானை அறிமுகம் செய்தது டபிள்யூ. வசந்த் என்ற நபர் என 'கோட்டாவின் யுத்தம்' என்ற புத்தகத்தில் சிஏ சந்திரபிரேமா பதிவு செய்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச முதன் முதலில் 2005 ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே கருணா அம்மானுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். கருணா அம்மானுக்கு அடுத்தபடியாக இருந்த பிள்ளையானை கொழும்பில் வைத்து கே. வசந்த என்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரே அறிமுகம் செய்து வைத்துள்ளார். ( 383ஆம் பக்கம் )

இந்த இரண்டு வசந்தக்களும் ஒருவராக இருக்கக் கூடும்... 

நிலந்த ஜயவர்தன பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் காட்சியளித்து வழக்கின் முதலாவது மற்றும் முக்கியமான சந்தேகநபரான பிரித்தி விராஜ் மனம்பெரி ஏற்றுக் கொள்ள முடியாத பொய்யர் என தெரிவித்தார். ரவிராஜ் உரிமைகளுக்காக முன்னிலையான சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நிலந்த ஜயவர்தனவிடம் ஐந்து நிமிடம் கேள்வி எழுப்ப தனக்கு வாய்ப்பு தந்தால் சாட்சியை உடைப்பதாக கேட்ட போதும் நீதிமன்றம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. 

நிலந்த அன்று கோட்டாபய சார்பில் சாட்சி அளித்தார்....

நிலந்த ஜயவர்த்தனவின் இந்த சாட்சி தொடர்பில் ஞாயிறு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஷானி அபேசேகர கருத்து வெளியிட்ட பின்னர் நிலந்த சார்பில் முன்னிலையான சட்டத்தரணி "நீங்கள் அங்கு நிலந்த ஜயவர்த்தன வழங்கிய சாட்சி குறித்து அறிந்து வைத்துள்ளீர்களா" என்று கேட்டார் சானி அபேசேகர அதற்கு "இல்லை" என பதிலளித்தார். அப்போதைய பாதுகாப்பு செயலாளர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் சம்பவம் தொடர்பில் நிலந்த சாட்சி அளித்ததாக அவர் கூறினார். ( தகவல் மூலம் https://medialk.com/archives/3353

இதன் மூலம் அவர் கூறியது, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரியாமல் அனுமதியின்றி ஆனால் கோட்டாபய ராஜபக்ச சார்பில் சாட்சி அளிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்..! 

கர்தினால் மல்கம் ரஞ்சித் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. 174 பக்கங்களைக் கொண்ட சானி அபேசேகர கையெழுத்திடப்பட்ட அவரது காட்சி அடங்கிய ஆவணத்தை கோட்டாபய ராஜபக்ச பகிரங்கப் படுத்தவில்லை. ஆனாலும் கிடைக்கும் தகவல் படி நிலந்த ஜயவர்தன சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கில் சாட்சி அளித்துள்ளமை உறுதியாகிறது. சட்டத்தரணியும் இந்த கருத்தையே முன்மொழிந்தார். 

அப்போது பல குற்றங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் சிறை வைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.  இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து போகிறது. 

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது உங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைக்கவில்லையா என நிலந்த ஜயவர்தனவிடம் கேட்டபோது "நீங்கள் தெரிந்து வைத்திருக்கவில்லையா?" என்று மாத்திரம் ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாக கூறினார். புதுமை ஆனாலும் உண்மை. 

இறுதியில் இரவு வரை விசாரணை செய்த விவாதம் செய்த சிங்களம் பேசும் ஜூரி சபையினர் ரவிராஜ் கொலை வழக்கில் சூத்திரதாரிகளை விடுதலை செய்ய தீர்மானித்தனர். 

இந்த வழக்கு தீர்ப்பு வந்த உடன் 'வசந்த' என்பவர் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷ கருணா குழுவினருக்கு வழங்கிய 5 கோடி ரூபாய் பணம் தொடர்பான விடயம் மூடி மறைக்கப்பட்டது. 

இதற்கு நிலந்த ஜயவர்தனவும் ஒத்துழைப்பு வழங்கினார். 

கொலையாளிகள் இன்னும் சுதந்திரமாக திரிகின்றனர். உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் கொலையாளிகள் கூட பொது மக்கள் பணத்தில் சம்பளம் பெறும் அதிகார சபை தலைவர்களாக பதவி வகிக்கும் ராஜபக்ச அரசாங்கத்தில் ரவிராஜ் கொலையாளிகளுக்கும் உயர் பதவி வழங்கினால் ஆச்சரியப் படுவதற்கில்லை. 

"எமது செயல் திட்டம் ஒன்று"...

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் குற்றவாளிகள் இருந்த இடத்தில் இராணுவ வீரர்களால் வந்து "எமது செயல் திட்டம் ஒன்று" என கூறி ஒருவரை அழைத்துச் சென்றதாக ஊடக செய்திகள் வெளிவந்தன. அந்த நபர்களை தேடிய சிரேஷ்ட இரகசிய பொலிஸ் பரிசோதகர் இன்று பொலிஸ் சேவையில் இல்லை. 

இருந்த போதிலும் குறித்த ரகசிய பொலீஸ் பரிசோதகரால் கண்டு பிடிக்கப்பட்ட 'சோனிக்' 'சோனிக்' அல்லது 'டொனிக்' 'டொனிக்' என்பது யாரென முதல் முறையாக அம்பலத்திற்கு வந்துள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் சனத் பாலசூரிய இதனை சமூக வலைத்தளங்கள் ஊடாக அம்பலப்படுத்தியுள்ளார். 

'சோனிக் சோனிக்' யாரென்பது அம்பலம்...

அது இதோ: " தாக்குதலின் பின்னர் பொடி சஹரானை பொலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது (குற்ற விசாரணை திணைக்களத்தில்) சந்தேக நபருக்கும் சோனிக் சோனிக் என்பவருக்கும் இடையிலான உறவு வெளியானது. பொடி சாஹரானின் தொலைபேசி தரவுகள் படி (குற்ற விசாரணை திணைக்களம்) கண்டுபிடித்துள்ள தகவலுக்கு அமைய சோனிக் சோனிக் என்பவரின் தொலைபேசி இலக்கம் அரச புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதுடன் அந்த தொலைபேசியை பயன்படுத்தியவர் உப பொலிஸ் பரிசோதகர் 'பண்டார' என்பவர் எனவும் தெரிய வந்துள்ளது. 

ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு எஸ்.ஐ பண்டார என்பவரை சாட்சி வழங்க அழைத்த போதும் அது இரகசிய சாட்சியாக பதிவு செய்யப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்தது போலவே 'தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் பயங்கர தகவல்கள் இதில் உள்ளடங்கி இருப்பதால் கூடுதலான தகவல்களை வெளியிட முடியாது' என அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறியுள்ளார்" (தகவல் மூலம் https://www.facebook.com/sanath.balasooriya.7)

இந்த தகவல் உண்மை என ரகசிய பொலீஸ் பிரிவின் தகவல்கள் உறுதி செய்துள்ளன. 

எஸ்.ஐ. பண்டார என்பவர் மிக முக்கிய அரச புலனாய்வு தகவல்களை தெரிந்தவர் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என அரச புலனாய்வு சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன குற்ற விசாரணை திணைக்களத்திற்கு தெரிவித்தார். பொடி சஹரான் ஞாயிறு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுமில்லை. 

சானத் பாலசூரிய இந்த தகவல்களை வெளியிட்டதோடு தனது கருத்தையும் முன்வைத்துள்ளார். " ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்பது நாட்டில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் அரச புலனாய்வுப் பிரிவை இணைத்துக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட சதியுடன் கூடிய தாக்குதல் திட்டம் என சவாலுக்கு உட்படுத்த முடியாத அளவு உறுதி செய்யக் கூடிய சாட்சிகள் மட்டும் கருத்துக்கள் பல ஒட்டு மொத்த சம்பவத்தின் மூலம் அதன் சந்தேகத்திற்கிடமான விசாரணை முறை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் என்பவற்றில் மறைந்து இருப்பது தெளிவாகிறது" என்று கூறினார். 

ஞாயிறு தாக்குதல் சிறிசேனவின் யாப்பு சூழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்...

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் மைத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சித் திட்டத்தை வெற்றி ஆக்கியது. அதுதான் ராஜபக்சக்களுக்கு இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் ஒப்படைப்பது. ஒரு வகையில் சிறிசேனவின் சூழ்ச்சியின் இரண்டாம் கட்டமாக இதனைக் கருத முடியும். 

அதனால் சிறிசேன மீதும் நிலந்த மீதும் ராஜபக்சக்கள் நிச்சயம் கை வைக்க மாட்டார்கள். தற்போதைய இலங்கையில் சட்டத்திற்கு மேலாக அரசியல் உள்ளது. 

இதேவேளை 2019 ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் சூழ்ச்சிகள் காணப்படுவதாக கடந்த மே மாதத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த மே 17 ஆம் திகதி சிரச தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார். ரவிராஜ் கொலை வழக்கு சந்தர்ப்பத்திலும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் மனித கொலைகள் தொடர்பான பிரிவின் பிரதானியாக தப்புல செயல்பட்டார். அதனால் குறித்த வழக்கு மற்றும் நிலந்தவின் செயற்பாடு தொடர்பில் தப்புல டி லிவேரா நன்கு அறிவார். முன்னாள் சட்ட மா அதிபர்கள் நேரடியாக பிரதம நீதியசராக நியமிக்கப்படும் நாட்டில் தப்புலவிற்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கூட கிடைக்கவில்லை. 

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான உண்மை நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு உண்மைகள் போன்று ஒருபோதும் வெளிவராமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்றால் இலங்கையில் அரசியல் ஆதிக்கம் குறைந்து அதற்கு பதிலாக சட்டத்தின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டால் அது நிச்சயம் நடக்கும். 

- வெளியிட்டது சுனந்த தேசப்பிரிய 

எழுத்தாளரின் கட்டுரைகளின் தொகுப்பு 
https://www.lankaenews.com/category/17

---------------------------
by     (2021-07-23 10:44:53)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links