-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 15, பிற்பகல் 09.30 ) பிரபல சிசிடி - கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் முன்னாள் விமானப்படை புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க கண்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் அப்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவரது சட்டத்தரணி உபுல் குமாரபெரும இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸிடம் நேற்று 14 ம் திகதி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
சட்டத்தரணி உபுல் குமாரபெருமவின் கடிதம் கிடைத்த உடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் உயிரை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் இந்த கோரிக்கையை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் முறைப்படி வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைவர், கொழும்பு குற்ற விசாரணை பிரிவுக்கு தொலைபேசியில் அழைத்து ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க குறித்து வினவியபோது அவர் கைது செய்யப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை சிசிடி பிரிவு உறுதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கீர்த்தி ரத்நாயக்கவின் சட்டத்தரணி உபுல் குமாரபெரும இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு ஆங்கில மொழியில் எழுதிய கடிதத்தின் தமிழ் வடிவம் வருமாறு,
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்கள்
தலைவர்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
2021 , ஆகஸ்ட் 14
அன்புக்குரிய ஐயா,
மேற்கூறிய எனது கட்சிக்காரரால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வழங்கிய தகவல் ஒன்று குறித்து கொள்ளுபிட்டி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வழங்கிய தகவல் குறித்து வாக்குமூலம் பெறவென கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு இன்று (14) அழைக்கப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரக உயர் அதிகாரி ஒருவருடன் தான் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதாகவும் எனது கட்சிக்காரர் எனக்கு அறிவித்தார்.
எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் எனது கட்சிக்காரர் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதன்பின் சட்டத்தரணி அமில எகொடமஹவத்த எனது ஆலோசனையின் படி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிசிடி பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடி பின் எனது கட்சிக்காரரை சந்தித்தார்.
அதன்போது மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற உள்ளதாக சட்டத்தரணி அமில எகொடமஹவத்தவிடம் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
அதன்பின் எனது கட்சிக்காரரின் நெருங்கிய நண்பர் என்னிடம் பேசுகையில் சிசிடி பிரிவினரால் 15 ம் திகதி கீர்த்தியை கண்டிக்கு கொண்டு செல்ல முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கண்டி நோக்கிச் செல்லும் போது அவரது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையின் கீழ் குறித்த விடயத்தில் தலையிட்டு அவரது உயிரை பாதுகாப்பதுடன் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
சட்டத்தரணி
---------------------------
by (2021-08-15 18:08:28)
Leave a Reply