-லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பீடம்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 20, பிற்பகல். 10.30) லங்கா ஈ நியூஸ் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர், ஊடகவியலாளர் கீரத்தி ரத்நாயக்க தனிப்பட்ட நட்பின் மூலம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து தாக்குதல் திட்டம் இருப்பதாக எச்சரிக்கை தகவல் வழங்கிய விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு ராஜபக்ஷ குடும்ப அரசாங்கம் அவரை கைது செய்து தற்போது கொழும்பு குற்ற விசாரணை திணைக்களத்தில் ( சிஐடி ) பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகிறது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வழங்கிய தகவல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு ஆகஸ்ட் 14 ம் திகதி வருகை தருமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடாக கிடைத்த தகவலை அடுத்து அன்றைய தினம் காலை 10 மணிக்கு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் அளித்து பின் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவை பின் தொடர்ந்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் (CCD) இடை நடுவில் மறித்து அவரை கைது செய்தனர்.
அதன் பின் குற்றவாளி போன்று கீர்த்தியின் கைகளுக்கு விலங்கிட்டு அவரது கொடகம வீட்டிற்கு அழைத்துச் சென்ற கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு அவரது வீட்டை சோதனையிட்டு தனிப்பட்ட கணினி, தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் பென்ட்ரைவ் சிலவற்றை கைப்பற்றி தெமட்டகொடயில் உள்ள சிசிடி பிரதான அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் கையெழுத்தில் 5 நாட்கள் சிசிடி பிரிவில் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டார். பின்னர் 19 ம் திகதி மீண்டும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு பெற்று குற்ற விசாரணை பிரிவிற்கு (சிஐடி) அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தெமட்டகொட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குற்ற விசாரணை பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கீர்த்தி ரத்நாயக்கவிடம் விசாரணை நடத்தி இருந்தனர்.
ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்ட தினமான 14 ம் திகதியே அவரை சந்திக்க அவரது சட்டத்தரணிக்கு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் நந்தன குமார மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பாளர் நெவில் சில்வா ஆகியோர் அனுமதி அளித்திருந்ததுடன் அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து 16 ம் திகதி கீர்த்தி ரத்நாயக்கவை சந்தித்து உரையாடவும் அவருக்கு தேவையான உடைகளை வழங்கவும் அவரின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்போது கீர்த்தி ரத்நாயக்க தாக்குதலுக்கோ சித்திரவதைக்கோ உட்படுத்தப்பட்டிருக்கவில்லை என அவரை சந்தித்த நண்பர்கள் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் தெரிவித்தனர்.
இதேவேளை, ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் சிறு பிள்ளைகள் வசிக்கும் கண்டி வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழு நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி குறித்த வீட்டை சோதனை செய்து அங்கிருந்து சில தொலைபேசிகள் மற்றும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தும் பென்ட்ரைவ் சிலவற்றை கைப்பற்றி கொழும்பிற்கு கொண்டு வந்துள்ளனர். எனினும் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு பற்றுச் சீட்டு வழங்கியுள்ளனர்.
அத்துடன் கீர்த்தி ரத்நாயக்க தங்கிருந்த கொடகம வீட்டிற்குச் சென்ற சிஐடி பொலிஸ் அதிகாரிகள் அருகில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து எவ்வித நீதிமன்ற அனுமதியும் இன்றி சோதனை நடத்தி கீர்த்தியின் கணினி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில் சிறுவர்கள் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தும் கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ட்ரைவகள் சிலவற்றை மீட்ட பொலிஸார் அதற்கு பற்றுச் சீட்டு வழங்கி அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளரின் மனைவியை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ம் திகதி குறித்த பெண் குற்றப் புலனாய்வு பிரிவிற்குச் சென்று சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் தற்போதைக்கு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கொள்ளுபிட்டி பொலிஸார், குற்றப புலனாய்பு பிரிவினர், குற்றத் தடுப்பு பிரிவினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஆகியோரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய உயர்ஸ்தானிகராலய தாக்குதல் எச்சரிக்கை குறித்து அவர் வழங்கிய தகவல் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவில்லை. 14 ம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து பேசிய ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க, 15 ம் திகதி இந்திய சுதந்திர தினத்தன்று கொழும்பு உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கை தகவலை வழங்கி இருந்தார். இது குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டிருந்தார. வலயத்தில் காணப்படும் அரசியல் குறித்து ஆய்வு செய்த அவர் சீனாவுடன் தலிபான்களுக்கு உள்ள தொடர்பு மற்றும் அதனை பயன்படுத்தி சீனா இலங்கையில் இந்தியாவிற்கு எதிராக முன்னெடுத்து வரும் சதித் திட்டங்கள் குறித்தும் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தனது ஆய்வு தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரியிடம் நட்பு ரீதியில் கூறியுள்ளார். இந்த வலய அரசியல் சதித் திட்டத்தின் விளைவாக இந்திய சுதந்திர தினத்தில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை தகவலை கீர்த்தி ரத்நாயக்க வழங்கி இருந்தார். சீன மற்றும் தலிபான்களுக்கு இடையில் காணப்படும் தொடர்புகளை உறுதிப் படுத்தும் புகைப்படம் ஒன்றையும் கீர்த்தி ரத்நாயக்க வௌியிட்டிருந்தார். ஆனால் தற்போது தகவல் வழங்கியவரை பின் தொடர்ந்து அவரை வேட்டையாடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை தௌிவாகிறது.
லங்கா ஈ நியூஸ் இணையத்தின் உள்ளக சேவைக்கு வரும் தகவல் படி ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் சில கட்டுரைகளில் வௌியிடப்பட்ட தகவல்களால் பாதிக்கப்பட்ட பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கீர்த்தி ரத்நாயக்கவை அடக்க முயற்சிப்பதாக தெரிகிறது. கீர்த்தி ரத்நாயக்கவை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி அளித்துள்ளமை ஊடகவியலாளரை சிறிது காலம் மௌனிக்கச் செய்யவே என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் விமானப் படை குரூப் கெப்டன் ஊடகப் பேச்சாளர துசான் விஜேசிங்க ஆகியோர் ஊடகவியலாளர் கீரத்தி ரத்நாயக்க குறித்து ஊடகங்களில் வௌியிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நாம் சுருக்கமாக பதில் கூற கடமை பட்டுள்ளோம்.
ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க முன்னாள் விமானப்படை வீரர் என்ற அடிப்படையில் தனக்கு கிடைத்த பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தகவலை முதலில் பொலிஸாருக்கு தெரிவிக்காமல் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்தமை தவறு என்று கூறியிருந்தார். சரத் வீரசேகரவின் பொலிஸார், முஸ்லிம் அடிப்படைவாத குழுவினர் இலங்கையில் குண்டு வெடிக்கச் செய்யப் போகிறார்கள் என இந்திய புலனாய்வு பிரிவினால் 8 தடவைகளுக்கு மேல் எச்சரிக்கை விடுத்தும் குண்டு வெடிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறான பொலிஸாரிடம் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை தகவலை வழங்குவதை விட தாக்குதலால் பாதிக்கப்படும் தரப்பினருக்கே நேரடியாக தகவலை வழங்குவது எந்தவொரு புத்தியுள்ள ஊடகவியலாளரும் செய்ய வேண்டிய சரியான செயலாகும். வீட்டுக்கு அருகில் உள்ளவரின் வீடு தீ பற்றி எரியப் போகிறது என்றால் அடுத்த வீட்டு உரிமையாளருக்கு நேரடியாக அழைத்து 'உன் வீடு தீ பற்றி எரியப் போகிறது' என்று கூறுவது சிறந்ததா அல்லது தூரத்தில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கூறுவது சிறந்ததா என்பது மாடுகளான சரத் வீரசேகர மற்றும் தேசபந்து தென்னகோன் இருவருக்கும் தெரியாதது புதுமையான விடயமல்ல.
விமானப் படை ஊடகப் பேச்சாளர் கரூப் கெப்டன் துசான் விஜேசிங்க ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையில், கீர்த்தி ரத்நாயக்க விமானப் படையில் இருந்த போதும் புலனாய்வு பிரிவில் இருக்கவில்லை எனவும் அவர் நிர்வாக பிரிவில் பணி புரிந்து நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் விமானப் படையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் அதில் இருந்து விலகிய பின் இராணுவம் அதனை மூடி மறைத்து கருத்து வௌியிடுவதில் இருந்து உண்மை நிலை புரிகிறது. கீர்த்தி ரத்நாயக்க நிதி மோசடி குற்றச்சாட்டின் பின் பணி நீக்கம் செய்யப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்பதை கூற நாம் கடமைப் பட்டுள்ளோம். விமானப் படையின் உயர் அதிகாரி ஒருவர் தான் செய்த நிதி மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ளவென கீர்த்தி ரத்நாயக்க மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி அவரை பதவி தரம் குறைத்து இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யாது கட்டுநாயக்க விமானப் படை முகாமில் சுமார் 8 மாதங்கள் வீட்டுக் காவலில் வைத்திருந்து பின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தனக்கு நடந்த இந்த அநீதி குறித்து கீர்த்தி ரத்நாயக்க 2005 ம் ஆண்டு மேன் முறையீட்டு நீதிமன்றில் 104/2005 என்ற இலக்கத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். குறித்த வழக்கை பிற்காலத்தில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட கே. ஶ்ரீபவன் மற்றும் பிற்காலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிசிர டி ஆப்ரூ ஆகியோரும் விசாரணை செய்து வந்தனர். வழக்கு விசாரணை முடிவில் 2007 ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் கீர்த்தி ரத்நாயக்கவை இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யாது பதவியில் இருந்து தரம் குறைத்தமை மற்றும் விமானப் படையில் இருந்து நீக்கியமை சட்ட விரோத செயல் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் கீர்த்தி ரத்நாயக்கவிற்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்கி அவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு எம்மிடம் உள்ளது. ஆனாலும் கீரத்தி ரத்நாயக்க விமானப் படையில் மீண்டும் இணையாது மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிக்குச் சென்றார். அதனால் நிதி மோசடி செய்ததால் விமானப் படையில் இருந்து கீர்த்தி ரத்நாயக்க நீக்கப்பட்டார் என்ற விமானப் படை ஊடகப் பேச்சாளரின் தகவல் பொய்யானது. மேலும் ஊடகவியலாளர் ஒருவருக்கு இழுக்கும் ஏற்படுத்தும் செய்தியும் ஆகும். வழக்கு தீர்ப்பு தேவை என்றால் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்கவிற்கு அதனை அனுப்பி வைக்க நாம் தயார்.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது எமது ஊடகவியலாளர் மீது சேறு பூசி அவரின் நற் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் சதித் திட்டத்தில் அரசியல் வாதிகள் சிலரும் அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு வருகின்றமை நன்கு தௌிவாகிறது. எதிர்வரும் நாட்களில் மேலும் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். சேறு பூசுதலின் பின் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சிக்கக் கூடும். இவ்வாறான செயற்பாடுகள் இதற்கு முன்னர் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி இந்தியாவின் கொழும்பு உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தாக்குதல் நடத்த தயாரான பயங்கரவாதிகள் மறைந்து இருக்கும் இடத்தை காண்பிப்பதாக கூறிய பின் கீர்த்தி ரத்நாயக்கவை அழைத்துச் சென்றதாகவும் அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சில பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடாக அறிவித்தல் விடுப்பதற்கும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. நாம் இவ்வாறான அறிவிப்பு ஒன்றை கேட்பதற்கோ அல்லது ஏற்றுக் கொள்வதற்கோ தயாராக இல்லை.
அதனால் எமது பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் உயிர் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி அவரது உயிரை காப்பாற்ற வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
---------------------------
by (2021-08-21 23:06:13)
Leave a Reply