-ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ)
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 31 பிற்பகல் 09.45 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்கவை இலங்கை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்து அவர் தொடர்பில் முன்னெடுத்து வரும் மேலதிக விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நியூயோக்கை தளமாகக் கொண்டு இயங்கும் 'ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு' ( Committee to Protect Journalists - CPJ ) கடந்த 27 ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தி உள்ளது. அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
முன்னாள் இராணுவப் புலனாய்வு பிரிவு அதிகாரியும் இலங்கையை தளமாகக் கொண்டு லண்டனில் இருந்து இயங்கும் செய்தி ஊடகமான லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் நிரந்தர சுதந்திர ஊடகவியலாளரும் ஆகிய கீர்த்தி ரத்னாயக்க ஓகஸ்ட் 14ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கினார். லங்கா ஈ நியூஸ் செய்திகள் மற்றும் ஏனைய செய்திகளின் அடிப்படையில் இலங்கையிலுள்ள கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடும் என கீர்த்தி ரத்னாயக்க உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவரிடம் தகவல் வழங்கி இருந்தார்.
பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வு கட்டுரை எழுதும் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்து விட்டு வீடு திரும்பிய போது கைது செய்யப்பட்டு 'பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்' 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் அவரது வீடு சோதனை செய்யப்பட்டு கணினி, கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்கள் சில அரச மயமாக்கப்பட்டுள்ளன.
பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் CPJ அமைப்பிற்கு தொடர்பு கொண்ட, வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர், கீர்த்தி ரத்நாயக்க மீது இதுவரை எவ்வித பயங்கரவாத குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. எனினும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வழங்கிய தகவல் மற்றும் லங்கா ஈ நியூஸ் இணையத்தில் எழுதப்பட்ட அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்கான செய்தி மூலங்களை வெளியிடுமாறு கீர்த்தி ரத்னாயக்கவிற்கு பொலிசார் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. குறித்த நபர் யார் என்ன கட்டுரை என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதிர, CPJ விடம் கருத்து வெளியிடுகையில், கீர்த்தி ரத்நாயக்க அரசாங்கத்தை விமர்சித்து எழுதிய கட்டுரைகள் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வழங்கிய தகவல் தொடர்பில் விசாரணை செய்யாது மாறாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கீர்த்தி ரத்னாயக்க எழுதிய கட்டுரைகள் தொடர்பான செய்தி மூலங்கள் பற்றியே விசாரணை மேற்கொள்வதாக சந்தருவான் சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
' ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டு அவருடைய கணினி உபகரணங்கள் அவரிடம் மீள கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்திகளுக்கான செய்தி மூலங்களை தருமாறு அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என CPJ அமைப்பின் ஆசிய வலய நிகழ்ச்சி இணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் தெரிவித்துள்ளார். ' வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தகவல் வழங்குவது குற்றம் கிடையாது எனவும் இந்த விடயத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஊடகவியலாளர் வெளியிட்ட செய்திகள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான செய்தி மூலங்கள் கோருவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் இது இலங்கை ஊடகத்துறையை கேலிக்கு உட்படுத்தும் செயல் எனவும் ' ஸ்டீவன் பட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்க முடியும்.
CPJ அமைப்பு கொள்ளுபிட்டி வலயத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை சமூக ஊடக செயலி ஒன்றின் மூலம் தொடர்பு கொள்ள தகவல் அனுப்பிய போதும் அவருக்கு அந்த தகவல் சென்றடையவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு குழு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு இது விடயம் குறித்து விளக்கம் கோரி மின்னஞ்சல் ஒன்று அனுப்பிய போதும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
CPJ அமைப்பு இலங்கையில் அண்மை காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் மற்றும் இடையூறுகளுக்கு முகங்கொடுத்தல் தொடர்பில் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
( - ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு ' CPJ என்பது உலகம் முழுவதும் உள்ள சுதந்திர ஊடகங்களை ஊக்குவிக்கும் சுயாதீன அமைப்பு என்பதுடன் லாப நோக்கம் கொண்ட நிறுவனம் அல்ல. பாதுகாப்பு மற்றும் பழிவாங்கல் அச்சம் இன்றி செய்திகளை வௌியிடும் ஊடகவியலாளர்களின் உரிமைகளை ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு பாதுகாக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 40 ஊடக நிபுணர்களைக் கொண்ட ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு - CPJ தலைமையகம் நியூயோர்க்கில் உள்ளது. )
ஆங்கில மொழியில் வௌியாகியுள்ள செய்தியின் இணைப்பு https://cpj.org/2021/08/sri-lankan-journalist-keerthi-ratnayake-detained-under-anti-terror-act/
---------------------------
by (2021-08-31 14:01:18)
Leave a Reply